ஆய்வுகள்

April 14, 2020

காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2

“நல்ல பெண்கள் என்போர் பணிந்து நடப்பவர்கள், மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹுவின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களை) பேணிக் காத்துக்கொள்வார்கள்.” அல்குர்ஆன் 4:34

காதல் என்பது பாலுணர்வு விவரம் தெரியவரும்போது ஏற்படுகிறது.இதிலிருந்து மனிதனின் இயற்கைத் தேவையில் ஒன்றை அடைந்து கொள்வதற்கான விருப்பம் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்க்கு மாற்றமாக அது ஒரு புனிதம் என்பது போலவும் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் புனிதப் போராட்டங்கள் போலவும் கற்பனை செய்வது ஒரு வித மூடநம்பிக்கை! இந்த மூட நம்பிக்கையை இலக்கியங்களும் சினிமாக்களும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றினால் தாக்கத்திற்குள்ளான இளைஞர் இளைஞிகள் தேவையில்லாத சிரமங்களோடும் அர்த்தமற்ற தியாகங்களோடும் தாம் விரும்பியவரை கைப்பிடிக்கிறார்கள்.

சில நாட்களில் தாங்கள் தேர்வு செய்த நாயகன் அல்லது நாயகி தனக்கு பொருத்தமானவர் அல்ல என்பதை உணர்கிறார்கள். தான் பட்ட சிரமங்களும் தமது தியாகங்களும் வீண் என்று தெரிந்துகொள்கிறார்கள், வேண்டா வெறுப்புடன் சேர்ந்தது வாழ்பவர்களும் உள்ளனர். பிரிந்து விடுபவர்களும் நிறைய உள்ளனர்.

இதுவெல்லாம், தான் விரும்பியவரை எப்படியும் அடைந்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் காதலர்கள் நடந்துகொள்வது தவறு என்பதற்கான ஆதாரங்கள்.

இதைப்புரிந்து கொண்டால், படைத்த இறைவனுக்கும் பெற்று வளர்த்த தாய், தந்தைக்கும் மாறு செய்து தான் விரும்பியவரை அடைவது பெருந்தவறு என்பதை எளிதாக விளங்கலாம்.

இறைவனுக்கு மாறுசெய்து…

ஒரு இறைநம்பிக்கையாளர் தன்னை படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கு இணைவைக்கப்படுவதை கடுமையாக எதிர்க்க வேண்டும். ஏனென்றால் அதுதான் துரோகத்திலேயே பெரும் துரோகம்.அநியாயத்தில்லேயே பெருத்த அநியாயம். ஆகவே அத்தகைய கொள்கைக் கொண்டவர்களை வாழ்க்கைத்துணையாக ஆக்கிக்கொள்வதற்கு விரும்பவே கூடாது. திருக்குர்ஆன் அதை வலியுறுத்துகிறது.

படைத்த இறைவனுக்கு துரோகம் செய்து நரகத்தின் வழியில் அழைப்பவரை ஒரு உண்மை விசுவாசி எப்படித் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்ப்படுத்திக்கொள்ள முடியும்

“இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் அவளைவிட நம்பிக்கைக் கொண்ட ஒரு அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை (நம்பிக்கை கொண்ட பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணைவைக்கும் ஆண் உங்களை கவருபவனாக இருந்தபோதிலும் நம்பிக்கைக் கொண்ட ஓர் அடிமை அவனை விட மேலானவன். (நிராகரிப்போராகிய) அவர்கள் உங்களை நரகத்தின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹுவோ தன் கட்டளையைக் கொண்டு சொர்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினைப் பெறுவதற்காக தன் வசனங்களை அவன் விளக்குகிறான்.” அல்குர்ஆன் 2:22


ஒரு இறைனம்பிக்கயாளரை இணைவைப்பவர் எவ்வளவுதான் கவர்ந்தாலும் தன் வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.

படைத்த இறைவனுக்கு துரோகம் செய்து நரகத்தின் வழியில் அழைப்பவரை ஒரு உண்மை விசுவாசி எப்படித் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்ப்படுத்திக்கொள்ள முடியும். அப்படி ஏற்றுக்கொண்டால் தன் வீட்டிலேயே இறைவனுக்கு இணைவைப்பதை அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்ப்படும்.

ஆக இணைவைப்பாளர் எவ்வளவுதான் பிரியம் ஏற்ப்படும் விதத்தில் நடந்துகொண்டாலும் வாழ்க்கைத் துணையாக்கும் அளவிற்கு ஒரு முஸ்லிம் அவரை நோக்கக் கூடாது.

அல்லாஹ்வே ஒருவரின் உள்ளத்தில் மிக அன்புக்குரியவனாக இருக்க வேண்டும். எல்லோரையும் விட எல்லாவற்றையும் விட அல்லாஹ் தான் ஓர் இறைனம்பிக்கயாளருக்கு முதன்மையானவனாயிருக்க வேண்டும்.

“அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு அவர்களை அல்லாஹுவை நேசிப்பதைப் போல் நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹுவை அதிகமாக நேசிப்பார்கள்.” அல்குர்ஆன் 2:165

அல்லாஹ்வும் அவனது தூதரும் மற்ற எல்லாவற்றையும் விட ஒருவருக்கு அதிக நேசத்திர்க்குரியோராக இருந்தால் தான் இறைநம்பிக்கையின் (ஈமானின்) சுவையை அடைய முடியும் என்பது நபி(ஸல்) அவர்களின் கூற்று. நூல்: புகாரி 16, 21.

மற்ற எல்லாவற்றையும் விட அல்லாஹ்வையே அதிகம் நேசிக்கும் ஒரு இறைனம்பிக்கயாளர் இறைவனுக்கு துரோகமும் அநீதமும் செய்யும் இணைவைப்பாளரை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பமாட்டார்.

அதுவும் அந்த வல்ல இறைவன் அதனைத் தடுத்திருக்கும் போது அவ்வாறான விருப்பம் ஏற்ப்பட்டால் கூட அதை அவனுக்காக புறந்தள்ளிவிடுவார்.

பெற்றோருக்கு மாறு செய்வது…

ஒருவர் தான் விரும்புவரை மணப்பதற்காக பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் அவர்களை வேதனைப் படுத்துவதும் கூடாது.

இறைவனுக்கு இணைகற்பிக்கும்படி நிர்பந்திக்கும் பெற்றோருக்கு அது விஷயத்தில் கட்டுப்படாமல் இருந்து கொண்டு உலக விஷயங்களில் நல்ல முறையில் இணைந்திருக்க வேண்டும் என்பது திருமறையில் அல்லாஹுதஆலா கூறும் அறிவுரை. அல்குர்ஆன் 31:15

உலக விஷயங்களில் பெற்றவர்களுடன் நல்ல முறையில் இணைந்திருப்பது என்பது பாவம் செய்யத்தூண்டாத அவர்களின் உத்தரவையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வதுதான்.

அதாவது ஒரு காரியத்தை நாம் விரும்புகிற விதத்திலும் செய்யலாம், பெற்றவர்கள் விரும்பும் விதத்திலும் செய்யலாம் என்றிருந்தால் பெற்றவர்கள் விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஒரு பிள்ளை தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெற்றவர்களுக்கு மாறு செய்வதும் அவர்கள் மனதை நோகடிப்பதும் கூடாத செயலாகும்.

பெரும்பாவங்கள் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்க்கு அல்லாஹுவிற்கு இணைவைத்தல் , பெற்றோரை புண்படுத்துதல், உயிரைக் கொல்லுதல், பொய் சாட்சி சொல்லுதல் என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி 2653.

பெற்றவர்களை புண்படுத்துவது பெரும்பாவம் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறதல்லவா? என்று கேட்டால் ஆம் இருக்கிறது தான். அதே நேரத்தில் பெற்ற தாய் தந்தையருக்கும் அது விஷயத்தில் முடிவெடுக்கவும் ஆலோசனை கூறவும் உரிமையிருக்கிறது.

குறிப்பாக பெண்பிள்ளையென்றால் தகப்பனார் அவளின் பொறுப்பாளராக இருந்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.

“பொறுப்பாளரின்றி திருமணம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” நூல்: திர்மிதி 1101.

இன்னொரு முறை, எந்தப் பெண்ணாவது தன் பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டால் அவளது திருமணம் செல்லாதது. அவளது திருமணம் செல்லாதது . அவளது திருமணம் செல்லாதது என்று அழுத்தமாகக் கூறினார்கள். நூல்: திர்மிதி 1102

இது பெண்களுக்கு மட்டுமுள்ள சட்டம்தான் என்றாலும் தன் ஆண்பிள்ளையின் திருமண வாழ்வு விஷயத்திலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள பெற்றவர்களுக்கு உரிமை உண்டு. இதைக் கீழ்வரும் செய்தி நமக்கு உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

எனக்கொரு மனைவி இருந்தாள், நான் அவளை அதிகம் நேசித்தேன். ஆனால் என் தந்தை உமர்(ரலி) அவர்கள் அவளை வெறுத்தார்கள். எனவே என்னிடம் அவளை விவாகரத்துச் செய்துவிடு என்று கூறினார்கள், நான் மறுத்துவிட்டேன். என் தந்தை உமர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து இதைத் தெரிவித்ததும் அவர்கள் என்னிடம் உன் தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்படு என்று கூறினார்கள். நூல்கள்: அஹ்மத் 4711, அபூதாவூத் 5140

இங்கு கவனிக்க வேண்டியது மகனுக்கு அப்பெண் மீது பிரியம் இருந்தாலும் தகப்பனாரின் சொல்லை ஏற்றுக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதன்படியே இப்னு உமர்(ரலி) அவர்கள் செய்துள்ளார்கள்.

(ஆனால் இது நியாயமான காரணமின்றி மகனை விவாகரத்துச் செய்ய நிர்பந்திப்பதற்கு ஆதாரமாகாது. தகுந்த காரணத்தின் அடிப்படையிலேயே உமர்(ரலி) அவர்கள் இப்படிக் கூறியிருப்பார்கள்.)

சாதாரணமாக பெற்றவர்களின் விருப்பத்துக்கு மாறு செய்து அவர்களை புண்படுத்துவது பெரும்பாவமாக இருக்கும் போது தன் காதலியை அல்லது காதலனை அடைவதற்காக பெற்றவர்களை புறக்கணித்தும் பகைத்தும் பிரிந்து செல்லும் பிள்ளைகளின் செயல் மிகப் பெரும் பாவமாகும்.

பத்து மாதம் வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்தப் பின் எண்ணிலடங்கா சிரமங்களைத் தாங்கி வளர்த்து ஆளாக்கிய தாயையும் தனது சுகங்களையும் நலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளையின் நலனையே முதல் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு உழைத்த தகப்பனையும் விட்டுவிட்டு காதலியுடன் அல்லது காதலனுடன் ஓடுபவர்கள் பகுத்தறிவு இல்லாத மிருகங்களுக்குச் சமமானவர்கள். அவற்றுக்குத் தான் பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்றும் அவர்களின் பாசத்தையும் உணர்வையும் மதிப்பதென்றும் ஒன்றுமில்லை.பெற்றவர்கள் மறுக்கிறார்கள் என்பதற்காக வாழ்கைத் துணையாக நான் தேர்ந்தெடுத்த ஒருவரை விட்டுவிட முடியுமா? என்று கேட்கலாம்.

நீ அவ்வாறு தேர்ந்தெடுக்கக் காரணமே இனக் கவர்ச்சியால் ஏற்ப்பட்ட உணவு தான் எனும்போது விட்டுவிடுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அது மட்டுமின்றி அவ்வாறு காதல் கொண்டு வாழ்க்கையில் இணைந்தவர்களில் பலரது குடும்ப வாழ்க்கை வெற்றிபெறவில்லை என்ற நிலையில் அவ்வாறு பெற்றவர்களுக்காக விட்டுவிடுவது பெரிய அர்ப்பணிப்பு ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு ஆணோ பெண்ணோ எதிர் பாலர் மார்க்கப் பற்றுள்ளவர் என்ற காரணத்துக்காகவே அவர்மேல் பிரியம் கொண்டு அவருடன் இணைய விரும்பும்போது உலக லாபத்திற்காக அதை தடுக்க முனையும் பெற்றவர்களோடு முறையாக போராடலாம்.

ஏனென்றால் மார்க்கப்பற்றுள்ளவரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி மார்க்கம் ஆர்வமூட்டுகிறது.

ஆக அல்லாஹ்வுக்கு மாறு செய்தும் பெற்றவர்களைப் புண்படுத்தியும் காதலியை அல்லது காதலனை அடைய முயற்சிக்கக் கூடாது.

அதே போல் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் உள்ளது. நம் பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க நமக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. பிள்ளைகளுக்கு அதற்க்கு அறவே உரிமை கிடையாது என்று நினைக்கக் கூடாது.

பிள்ளையின் விருப்பத்தில் மார்க்கத்திற்கு முரணானதோ உலக நன்மைக்கு பாதகமானதோ இல்லாவிட்டால்  அவன் அல்லது அவளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பது தவறல்ல.

இதற்க்கு மாற்றமாக இருந்தால் எடுத்துச் சொல்லி கருத்தை மாற்றிக் கொள்ளச் சொல்ல வேண்டும். அல்லது நம் விருப்பம் பிள்ளையின் விருப்பத்துக்கு மாற்றமாக இருந்தால் இதிலுள்ள கூடுதல் நன்மை என்ன என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

காதல் என்ற பெயரில் நடக்கும் தவறுகளையும் ஆபத்துகளையும் பெரியவர்கள் இளைஞர், இளைஞிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் சொல்வதற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். அவர்களிடம் தவறுகள் இருந்தால் திருத்த வேண்டும் ஏனென்றால் தாயிடம் தான் பிள்ளைகள் அதிக சுதந்திரத்துடன் பேசுவார்கள். குறிப்பாக இந்த பொறுப்பை பெற்ற தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மார்க்கத்திற்கு மாற்றமான விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதைத் தவிர்க்கலாம்.நாம் இதுவரை எழுதியதின் சாராம்சம், ஒருவர் எதிர் பாலர் மீது திருமணம் செய்யும் நோக்கத்துடன் நேசம் கொள்வது குற்றமாகாது. ஆனால் திருமணம் செய்யாத வரை அவர் அன்னியர் தான். பொதுவாக மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள நல்லொழுக்கத்தை காதலர்களும் பேண வேண்டும்.

அல்லாஹ் திருமணம் செய்ய தடுத்துள்ளவர்களை திருமணம் செய்யக் கூடாது.

பெற்றவர்களை புண்படுத்தி தான் நேசிப்பவரை அடைய முயல்வது தவறு.

இறுதியாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“காதல் கொண்ட இருவருக்கு திருமணம் போல் எதுவும் காணப்படவில்லை” நூல்கள்: இப்னுமாஜா 1847, அல் பஸ்ஸார்  4856

அதாவது அன்பின் பலன் விளையவேண்டும் என்றால் திருமணமே!


Admin
3239 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions