ஆய்வுகள்

January 31, 2014

காலையா மாலையா?

நாள் காலையில் ஆரம்பிக்கிறதா? மாலையில் ஆரம்பிக்கிறதா? என்ற சர்ச்சையை சமீபத்தில் சிலர் கிளப்பியிருக்கிறார்கள். அதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

நாள் கலையில் ஆரம்பிக்கிறதா? மாலையில் ஆரம்பிக்கிறதா?

வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக நாம் வேலையை துவக்குவது காலை என்பதன் அடிப்படையில் காலை நாளின் துவக்கமாகச் சொல்லப்படுவது உண்மை.

ஆனால் வணக்கத்திற்கு என்று கணக்கிடும் போது ஒரு பகலுக்கு முன்பு வரும் இரவே அந்தப் பகலின் இரவாகக் கணக்கிடப்படுவது தான் மார்க்கத்தின் நடைமுறை. ஷஅபான் மாதத்தின் கடைசி நாள் மாலையில் பிறை பார்த்தால் அப்போது நுழையும் இரவு ரமலான் மாதத்தின் முதல் நாள் இரவாகும். அந்த இரவில் தொழும் தொழுகை ரமலான் மாதத்தின் முதல் இரவுத் தொழுகையாகும். இதுதான் மார்க்க நடைமுறை. நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் நடைமுறை.

இப்படிச் சொல்லும்போது இதை மறுப்பவர்கள் நபியின் காலத்தில் இப்படி நடைமுறைப் படுத்தவில்லை. மாலையில் பிறை பார்த்தால் அந்த இரவை முதல் இரவாக கணக்கிட மாட்டார்கள். முதல் நாள் பகலுக்குப் பின் வரும் இரவைத் தான் முதல் இரவாகக் கணக்கிடுவார்கள். பிற்காலத்தில் தான் முஸ்லிம்கள் மாற்றிக் கொண்டார்கள் என்கிறார்கள்.

இந்த கொடிய புரட்டலைச் சொல்வதற்கு அபாரத் துணிச்சல் வேண்டும்! இப்படிச் சொல்பவர்கள், நாம் இப்போது ரமலான் என்று சொல்லும் மாதம் ரமலான் அல்ல, பிற்காலத்து முஸ்லிம்கள் ஷவ்வாலை ராமலானாக மாற்றிக் கொண்டார்கள். நாம் இப்போது முஹர்ரம் என்று சொல்லும் மாதத்தின் முதல் பத்து நாட்கள் துல் ஹஜ் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் தான். பிற்காலத்து முஸ்லிம்கள் தான் இப்படி மாற்றிவிட்டார்கள் என்றும் சொல்லலாம். இதிலே பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கும் மக்காவும், கஅவாவும் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த மக்காவும், கஅபாவும் அல்ல. பிற்காலத்தில் அங்கு நடந்த சண்டைகளில் அது அழிந்த பின் வேறொரு இடத்தை மக்கா என்று கூறி அங்கு ஒரு கஅபாவும் கட்டிவிட்டார்கள் என்றும் சொல்லலாம்.

இப்படியெல்லாம் சொன்னால் எப்படி உச்சக்கட்ட புரட்டலாக இருக்குமோ அப்படித்தான் இதுவும்.

பிறை பார்த்ததும் வருகிற இரவு, அந்த மாதத்தின் முதல் இரவு. உதாரணத்திற்கு அது ரமலான் மாதப் பிறையாக இருந்தால் அந்த இரவு செய்யும் இரவு வணக்கம் ரமலான் முதல் இரவின் வணக்கமாகும். இது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலம் முதல் முஸ்லிம்களின் நடைமுறை.

ஆனால் இது யூதர்களைப் பார்த்து காப்பியடித்த நடைமுறை என்கிறார்கள். இந்த்க் கொடிய ஆய்வாளர்கள்!

யூதர்கள் மட்டுமல்ல நாமறிந்து எல்லா மதத்துக் காரர்களும் ஒரு நாள் பகல் குறிப்பிட்ட விசேச தினம் என்றால் அதற்க்கு முன் வரும் இரவைத்தான் அந்த நாளின் இரவாகச் சொல்லி அதில் செய்ய வேண்டியவற்றைச் செய்கிறார்கள்.

இதுதான் முறை என்று நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் நடைமுறைப்படுத்தினால் அதை மற்ற மதத்துக்காரர்கள் செய்கிறார்கள் என்று காரணம் கூறி மறுக்க வேண்டுமா?

ஐயங்கள்

ஒரு இரவில் இருந்துகொண்டு விடியப்போகும் பகலைநாளைஎன்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு சில ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுகிறது. அப்படியென்றால் இந்த இரவு முடிந்து வரும் காலை அடுத்த நாள் தானே? - இது இவர்களின் ஐயம்.

காலையில் விழித்தெழுந்து உழைத்துவிட்டு அந்த உழைப்புக்குபின் ஓய்வெடுக்கிறோம் என்ற முறையில் காலையை துவக்கமாகச் சொல்லும் வழக்கம் உண்டுதான். ஆனால் அதற்காகவே, நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய பிறை தெரிந்ததும் வரும் இரவை அந்த மாதத்தின் முதல் இரவாக கணக்கிட்டதை மறுக்க முடியாது.

இன்னொரு ஐயம்.

சூரியன். அது சந்திரனை பிடிக்காது. இன்னும் இரவு பகலை முந்திடவும் முடியாது...” என்று அல்லாஹு கூறுகிறான்அல்குர்ஆன் 36:40.

இந்த வசனம் இரவு பகலை முந்திவிடவும் முடியாது என்று சொல்வதால் பகலுக்குப் பின்னால் தான் இரவு என்று கருத்து சொல்கிறார்கள் இவர்கள். - இது ஒரு வேடிக்கையான கருத்து.

இப்போதுள்ள ஓட்டத்தை திடீரென்று நிறுத்தி இரவு முடிந்து பகல் வர ஆரம்பித்ததும் உடனடியாக அதைத் தடுத்து மீண்டும் இரவு வரமுடியாது. அதன் மூலம் பகலை இரவு மிகைத்துக் கொண்டு போக முடியாது. அல்லாஹு நாடும் வரை! என்பது தான் இதன் கருத்து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து மாலையில் பிறை பார்த்ததும் தொடரும் இரவை அந்த மாதத்தின் முதல் நாள் இரவாகக் கொண்டு செயல்படுவது தான் உம்மத்தின் நடைமுறை. இதுவே போதுமான ஆதாரமாகும்.

ஏதாவது வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு ஏடாகூடமாக பேசுபவர்களுக்காக மேற்கண்ட நபிகாலத்து நடைமுறையை தெளிவாகக் கூறும் சில ஹதீஸ்களைத் தருகிறோம். இதன் பின் தங்களின் தவறான புரிதல்களைத் திருத்திக் கொள்வார்களாக!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "திங்கட்கிழமை இரவு நபி(ஸல்) அவர்களுக்காக தண்ணீரில் பேரித்தம் பழம் ஊறவைக்கப்படும். அதை அவர்கள் திங்கட்கிழமையும் செவ்வாய்கிழமை அசர் வரையும் அருந்துவார்கள். அதில் ஏதேனும் மீதமிருந்தால் ஊழியருக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இல்லாவிட்டால் ஊற்றி விடுவார்கள்."

நூல்: முஸ்லிம் 3740

"நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தோம், இருபதாம் நாள் காலையில் எங்கள் பொருட்களைச் சேகரித்துக் கொண்டோம். அப்போது எங்களிடம் வந்த நபி(ஸல்) அவர்கள், “யார் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் தாம் இஃதிகாஃப் இருந்த இடத்திற்குச் செல்லட்டும். நிச்சயமாக நான் இந்த (லைலத்துல் கதர் ) இரவைக் கனவில் கண்டேன். ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்வதாகக் கண்டேன்" எனக் கூறினார்கள். அவர்கள், தாம் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்க்குச் சென்றதும் வானத்தில் மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! அன்றைய தினம் கடைசி நேரத்தில் வானத்தில் மேகம் திரண்டது (அன்றைய பள்ளிவாயில் பேரிட்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மூக்கிலும் மூக்கின் ஓரங்களிலும் ஈரமான களிமண்ணின் அடையாளத்தை நான் கண்டேன்."

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 2040

நபி(ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹு நாடிய விஷயங்களை அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். பின்னர், “நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது . எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கதர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாட்களிளுள்ள ) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!” எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரி (ரலி)

நூல்: புகாரி 2018

இந்த இரு ஹதீஸ்களில் முதலாவது உள்ளத்தில் ரமலான் இருபதின் காலையில் நடுப்பத்தில் இக்திகாப் இருந்து விட்டு புறப்பட தயாரான நபித்தோழர்களை அடுத்த பத்து நாளும் தங்கியிருக்குமாறும், அந்த இறுதி பத்து நாளின் ஒர் இரவில் தான் லைலத்துல் கதர் இருப்பதாக, தனக்கு காட்டப்பட்டதாகவும் அந்த இரவில் நீரிலும், களிமண்ணிலும் தான் ஸஜ்தா செய்வதாக காட்டப்பட்டதாகவும் கூறினார்கள்.

இதை அறிவிக்கும் நபித்தோழர், அந்த (இருபதாவது) நாளின் கடைசி பகுதியில் மழை பெய்ததாகக் கூறுகிறார்கள்.

அடுத்த ஹதீஸில் இருபத்தோராவது இரவில் மஸ்ஜிதில் மழை தண்ணீர் வடிந்திருந்ததாகவும் ஸுப்ஹில், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் களிமண்ணும், நீரும் பட்டிருந்ததாகவும் அதே நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.

இருபதாம் நாள் கடைசி பகுதியில் மழைப்பெய்து இருபத்தோராம் இரவு பள்ளிவாசலில் தண்ணீர் வழிந்திருந்தது. அந்த ஸுப்ஹில் நபியின் முகத்தில் களிமண்ணும் தண்ணீரும் பட்டிருந்தது.

இந்த வார்த்தைகள் இருபதாம் நாள் கடைசிப்பகுதி முடிந்ததும் வருகிற இரவு தான் இருபத்தோராம் நாள் இரவு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

அப்படியென்றால் இருபத்தோராம் நாளின் பகலுக்கு முன்னால் வந்த இரவு தான் இருபத்தோராம் இரவு.

இது ஒரு தெளிவான செய்தி!

நான் அபூபக்கர் (ரலி) விடம் சென்றபோதுநபி(ஸல்) அவர்களை எத்தனைத் துணிகளில் கஃபன் செய்தீர்கள்?” என்று அவர் கேட்டார். “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்”. அபூபக்கர் (ரலி) என்னிடம், “நபி(ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்?” எனக்கேட்டார். நான்திங்கட்கிழமைஎன்றேன். “இன்று என்ன கிழமை?” என்று கேட்டதும் நான்திங்கட்கிழமைஎன்றேன். அதற்கவர்இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள்எனக் கூறினார். நான்இது பழையதாயிற்றே!” என்றேன். அதற்கவர்மய்யித்தைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீளுக்குத் தான் போகும்.” என்றார். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார். (அன்று) காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1387.

இந்த ஹதீஸில் தெளிவாக உள்ளது. திங்கள் பகலில் உரையாடல் நடக்கிறது. அன்று மாலை வரை மரணிக்கவில்லை. அதை அடுத்து வந்த இரவை செவ்வாய் இரவென்று குறிப்பிடுகிறார்கள். திங்கள் மாலைக்கு அடுத்து வரும் இரவு செவ்வாய் இரவென்றால் செவ்வாயின் பகலுக்கு முன்பே இரவு வந்துவிட்டது தெரியவில்லையா?

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: “நபி(ஸல்) அவர்கள் உம்முஸலமா (ரலி) அவர்களை நஹ்ர் இரவில் அனுப்பி வைத்தார்கள். எனவே உம்முஸலமா (ரலி) ஃபஜ்ருக்கு முன்பு ஜம்ராவில் கல் எறிந்தார்கள். பிறகு சென்று தவாஃபுல் இஃபாளாவும் செய்தார்கள்.

நூல்: அபூதாவூத் 1944

(பாடம்: அத்தஅஜ்ஜுலு மின் ஜம்இன்)

இந்த ஹதீஸில் நஹ்ர் நாள் என்று கூறப்படுவது துல்ஹஜ் பத்தாம் நாள். அந்த நாளில் தான் காலையிலேயே கடைசி ஜம்ராவுக்கு கல் எறிவதும் நஹ்ர் எனும் அறுத்துப் பலியிடுவதும் ஹஜ்ஜின் ஃபர்லான தவாஃபுல் இஃபாளாவும் செய்யப்படும். அவை செய்யவேண்டிய அந்த நாள் நஹ்ர் நாள் (யவ்முன் நஹ்ர்) அந்த நாளின் காலைக்கு முந்திய இரவு லைலத்துன் நஹ்ர்நஹ்ர் இரவு என்று குறிப்பிடப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்புஇந்த ஹதீஸிலுள்ள சிறு பலவீனத்தைக் காரணம் காட்டி இதிலுள்ள இந்த இரவின் பெயரையே அலட்சியப்படுத்த முடியாது. ஏனெனில் இந்த இரவுக்கு லைலாத்துன் நஹ்ர் என்ற பெயர் குறிப்பிடப்படும் வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் வந்துள்ளன.

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் லைலாத்துன் நஹ்ர் (பலிகொடுக்கும் நாளின் இரவில்) இரவின் இருள் இருந்துகொண்டிருக்கும் போது எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது எங்கள் தொடைகளைத் தட்டி எழுப்பி, "மகன்களே! புறப்பட்டுச் செல்லுங்கள், சூரியன் உதிக்கும் வரை ஜம்ராவுக்கு கல் எறியாதீர்கள்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2848

(பலவீனர்கள் 10ஆம் நாள் பாஜ்ருக்கு முன் கல்லெறியலாம். ஆனால் துணைக்குச் செல்லும் இளைஞர்கள் அவ்வாறு செய்யலாகாது என்பது இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.)

இதுபோல் பல ஹதீஸ்கள் உண்டு. குறுகிய நேரத்தில் இவற்றை எடுத்து எழுதியிருக்கிறோம். உண்மையை தெரிந்து கொள்ளவேண்டுமென்ற உண்மையான ஆர்வத்துடன் ஹதீஸ்களைப் படித்தால் இது போன்ற பல ஹதீஸ்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஹசன்(ரஹ்) அவர்களின் கூற்று: “ஒரு மனிதர் திங்கட்கிழமை நோன்பு வைத்திருக்கிறார். அப்போது இரண்டு நபர்கள் வந்து தாங்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவே பிறை பார்த்ததாகக் கூறுகின்றனர். இப்போது அந்த நபரோ அந்த ஊரைச் சேர்ந்தவர்களோ அந்த நாளைக் களாச் செய்ய வேண்டியதில்லை. ஆனாலும் ஏதேனும் ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை நோன்பு வைத்தார்கள் என்று தெரிந்தால் அவர்கள் அந்த நோன்பை களாச் செய்ய வேண்டும்”.

நூல்: அபுதாவூத் 2335

(பாடம்: இதா ரூஇயல் ஹிலாலு ஃபீ பலதின்)

ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ட பிறையினால் ஞாயிற்றுக்கிழமை நோன்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் ஞாயிற்றுக்கிழமையின் பகலுக்கு முன் இரவு வந்திருக்கிறது என்பதுதானே அர்த்தம்.

ஹசன்(ரஹ்) அவர்கள் அதிகமான சஹாபாக்களிடம் பாடம் படித்த மூத்த தாபியீன் ஆவார்.

ஹதீஸ் நூல்களில்:

இமாம் இப்னு குஸைமா ஒரு பாடத்தின் தலைப்பில் எழுதியிருப்பது (ஸஹீஹ் இப்னு குஸைமா பாகம்:4, பாகம்: 255)

"நஹ்ர் நாள் இரவுக்கு முன் சூரியன் மறைவதற்கு முன்பே அரஃபாவிலிருந்து புறப்பட்டு விடுபவரும் ஹஜ்ஜை அடைந்து கொள்பவர் என்பதற்கான ஆதாரம்"

இந்த வாசகங்களின்படி அரஃபா நாளில் சூரியன் மறைந்தவுடன் நஹ்ர் நாளின் இரவு வந்துவிடுகிறது. அதாவது ஒன்பதாம் நாள் சூரியன் மறைந்ததுமே பத்தாம் நாளின் இரவு வந்து விடுகிறது. அப்படியானால் இரவுதான் முந்திக் கொண்டு வருகிறது.

இன்னொரு தலைப்பு: சஹீஹ் இப்னு குஸைமா பாகம்: 4, பக்கம்: 269

"அல்பைத்தூத்தது பில் முஸ்தலிஃபா லைலத்துன் நஹ்ர்".

பொருள்: "நஹ்ர் நாள் இரவில் முஸ்தலிஃபாவில் இரவு தங்குதல்."

ஒன்பதாம் நாள் மாலை அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வந்து இரவு தங்க வேண்டும் ஹாஜி. நவீன ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த இரவு அரஃபா இரவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பத்தாம் நாளாகிய நஹ்ர் நாளின் இரவு என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.

ஹஜ்ஜு செய்பவர்கள், அய்யாமுத்தஷ்ரீக் (துல்ஹஜ் 11,12,13) நாட்களில் இரண்டாவது நாளே புறப்படுவதற்கும் அனுமதி உண்டு, பதிமூன்றாவது நாளும் தங்கிவிட்டுச் செல்வதும் உண்டு.

இதுபற்றி அல்லாஹுதஆலா கூறுவது:

"எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹுவை நினைவு கூர்ந்திடுங்கள். எவர் இரண்டு நாட்களில் விரைகிறாரோ அவர் மீதும் குற்றம் இல்லை, எவர் தாமதிக்கிறாரோ அவர் மீதும் குற்றம் இல்லை."

அல்குர்ஆன் 2:203

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்து கொண்டிருக்கும் போது இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள செய்தியை மக்களுக்கு சப்தமிட்டு அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று ஒருவரைப் பணித்தார்கள். நபியவர்கள் சொல்லுமாறு கூறிய அறிவிப்பு:

"மினாவின் நாட்கள் மூன்றாகும்; யார் இரண்டு நாளில் விரைகிறாரோ அவர் மீது குற்றமில்லை, தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை"

நூல்கள்: அபூதாவூத் 1951, திர்மிதி 889, நசாயி 3044

இங்கு அய்யாமுத்தஷ்ரீக் மூன்று நாட்களை மினாவின் மூன்று நாட்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவதும் பகலில் உச்சி சாய்ந்த பின் மினாவில் கடைசிப் பகுதியில் இருக்கும் ஜம்ராக்களுக்கு கல் எறிவதுமே ஹஜ்ஜின் கடமையான அமல்கள்.

துல்ஹஜ் பத்தாம் நாள் பகலுக்குப் பின்பு வருவது தான் பத்தாம் நாள் இரவு என்றால், பனிரெண்டாம் நாள் பகல் கல்லெறிந்துவிட்டு புறப்படுபவர் மினா நாட்களில் ஒரு இரவு மட்டுமே தங்கியதாகத்தான் ஆகும். ஏனென்றால் அவர் பனிரெண்டாம் நாளில் உச்சி சாய்ந்த பின் கல்லெறிந்துவிட்டு கிளம்பிவிடுகிறார். ஏனென்றால் இவர்களின் கருத்துப்படி பனிரெண்டாம் நாள் பகலுக்குப்பின் வரப்போகிற இரவுதான் பனிரெண்டாம் இரவு. இதன்படி இப்படிச் செய்யும் ஹாஜி, இவர்கள் கருத்துப்படி ஒன்றரை நாளோ அல்லது அதை விடக் குறைவாகவோ தான் மினாவில் இருந்தவராவார்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறவுமில்லை, யாரும் இப்படிச் செயல்படுத்தவுமில்லை.

ஆகவே, பத்தாவது நாள் பகல் முடிந்ததும் வருகிற இரவு பதினோராம் நாள் இரவு என்றால்தான் முறையாக அமையும்.

இதைத் தெளிவான வார்த்தைகளில் கூறும் இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்று:

"அய்யாமுத்தஷ்ரீக்கின் இரண்டாம் நாளில் ஒருவரை மாலை நேரம் வந்தடைந்து விட்டால் அவர் புறப்பட வேண்டாம். மறுநாள் உச்சி சாய்ந்த பின்பே புறப்பட வேண்டும்."

நூல்: இப்னு அபீஷைபா 12959, முஅத்தா 915.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுவதற்குக் காரணம் பனிரெண்டாம் நாள் பகல் முடிந்துவிட்ட பிறகு வரும் இரவு பதின்மூன்றாம் நாளின் இரவு என்பதனால் தான்.

அதாவது 13ஆவது இரவு துவங்கும் போது மினாவில் இருப்பதால் அந்நாளில் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்தாக வேண்டும் என்பது கருத்து.

இப்னு உமர்(ரலி) அவர்களின் இதே கூற்றை பிரபல தாபியீன்கள் பலர் கூறியுள்ளதை இப்னு அபீஷைபாவில் 12954வது ஹதீஸ் முதல் 12958வது ஹதீஸ் வரைக் காணலாம்.

உண்மையை விரும்பும் சகோதரர்களுக்கு இவ்வளவெல்லாம் தேவையில்லை. சிந்திக்க வேண்டிய விசயங்களில் சிந்தனையை செலுத்துவது ஆய்வு செய்யத் தேவையானதில் ஆய்வு செய்வதுமே எல்லோருக்கும் நன்மை!

 

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

Admin
2439 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions