ஆய்வுகள்

January 17, 2021

நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை)

எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நியதிப்படியும், அவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படியும் திருமணம் நடந்த பின் மனைவியானவள் கணவனின் வீட்டிற்குச் சென்று குடியேறுவதுதான் முறை. இதனால் தான் வீட்டோடு மாப்பிள்ளை என்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.


அரிதாக மிகச் சில ஆண்களுக்கு ஏற்படும் நிர்ப்பந்தச் சூழ்நிலை காரணமாக தங்களின் மனைவியர் வீட்டில் குடியேறுவதை அங்கீகரிக்கலாம். ஆனால், எந்த அவசியமும் இல்லாமல் அல்லாஹுதஆலா வழங்கியுள்ள சட்டத்தையே நேர்மாறாக மாற்றி மனைவியின் வீட்டில் கணவன் குடியேறும் நடைமுறையையே வழக்கமாக்கிக் கொள்வது மோசமான தவறாகும்.


மனைவியை விவாகரத்துச் செய்தால் கூட அவளுடைய இத்தா காலத்தில் தங்குவதற்கு கணவன் தன் வீட்டில் இடமளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.


உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; (அவர்களுக்கு) நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.

(அல்குர்ஆன் 65:6)


திருமணமான பெண்ணைக் குறித்துப் பேசும்போது அவளுடைய வீடு என்று சொன்னாலே அது அவளின் கணவன் வீட்டைத்தான் குறிக்கும். இந்த 65 வது அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லாஹ் பேசுவதை கவனியுங்கள்!


நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.

(அல்குர்ஆன் 65:1)


பெண்ணின் வீடு என்றாலே அது அவள் கணவனின் வீடுதான் என்றும், விவாகரத்துச் செய்யப்பட்ட பிறகு கூட இத்தாகாலம் முடியும் வரை கணவனின் வீட்டிலேயேதான் பெண் தங்கியிருக்க வேண்டும் என்றும் அல்லாஹுதஆலா உணர¢த்தியிருப்பதன் மூலம் கணவன்தான் மனைவிக்கு இருப்பிடம் கொடுப்பதற்கு கடமைப்பட்டவன் என்பதை அறிந்து கொள்கிறோம்.


இப்படியிருக்கும்போது நமது தமிழ் முஸ்லிம்களில் கணிசமான ஆண்கள் தங்களின் மனைவியர் வீடுகளில் அதாவது, மாமனார் வீடுகளில் குடியேறி வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். மார்க்கத்திற்கு நேர் எதிரான இந்த நடைமுறையை எப்படி ஏற்க முடியும்?


இதிலே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் மார்க்க மேதைகளும்(?) மார்க்கப்பற்றுமிக்க மக்களும் நிறைந்த ஊர்கள் என்று சொல்லப்படும் பகுதிகளில் இந்த கெட்ட பழக்கம் நடைமுறையில் இருப்பதுதான்!.


தமிழகத்திலுள்ள முஸ்லிம் ஊர்களைச் சொல்லுங்கள் என்று சொன்னால் உடனடியாக முதன்மையாகச் சொல்லப்படும் ஊர்களில் இதுதான் நடைமுறை! இந்த ஊர்களிலுள்ள சிலர் தாங்கள், நபித்தோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும், வேறு பலர் தாங்களெல்லாம் இறைநேசர்களின் வாரிசுகள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழிமுறையை உல்டா செய்துவிட்டு இதுலேயெல்லாம் பெருமிதம் கொள்ள முடியுமா?


பெண் பிள்ளைக்கு கண்ணியம் எப்படி?

பெண் பிள்ளைகளை நல்லமுறையில் பராமரித்து வளர்க்கும் பெற்றோருக்கு மறுமையில் சிறப்பான நற்கூலி உண்டு என ஹதீஸ்களில் சுபச் செய்தி சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால், இவர்கள் பெண்பிள்ளை பாசத்தினால் செய்கிற காரியத்தால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

பாதகங்கள்


இப்படி திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட பெண்பிள்ளையை தகப்பனார் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக எடுத்துக் கொள்வதால் பல வித பாதகங்கள் உள்ளன.

முதலாவது, 

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வழங்கிய வழிகாட்டுதலை விட்டுவிட்டு அதற்கு நேர்மாற்றம் செய்வது... உங்கள் வழிமுறையை பின்பற்றாத மற்ற எல்லா முஸ்லிம்களையும் நோக்கி வீட்டோடு மாப்பிள்ளை எடுக்கும் எங்கள் வழிமுறையை நீங்களும் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ்வுக்கு அஞ்சி உங்களால் சொல்ல முடியுமா?

அடுத்து, வீட்டோடு மாப்பிள்ளை பழக்கத்தை நடைமுறைப்படுத்தும் சமூகத்தில் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இருப்பிடம் வழங்குவது ஆணின் கடமை என்ற உணர்வே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் மார்க்கத்தில் இப்படி ஒரு சட்டமே இல்லை, இது எவ்வளவு பெரிய பாதகம்.


இந்த வீட்டோடு மாப்பிள்ளை கூட்டம் வாழக்கூடிய ஊரைச் சுற்றி வசிக்கும் மாற்றுமத மக்கள், இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் நடைமுறை என்றுதான் எண்ணுவார்கள். இதனால் இஸ்லாத்தின் சரியான வழிகாட்டுதலை மாற்றி, இஸ்லாத்தினை தவறாக காட்டிய குற்றவாளிகளாக ஆவீர்கள் வீட்டோடு மாப்பிள்ளைகளே!


அடுத்து, ஒரு பெரிய பாதகம் ஒன்று உண்டு. மார்க்கத்தின் படி ஆண்தான் மனைவியை நிர்வகித்து கட்டுப்படுத்த வேண்டியவன். மனைவி தவறு செய்தால் கண்டிக்கவும், தேவைப்பட்டால் தண்டிக்கவும் உரிமைப்பட்டவன். ஆனால் இந்த பழக்கம் உள்ள இடங்களில் ஆண்கள் பலவீனப்பட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் சில மனைவியர் பெருந் தவறுகளைச் செய்தால் கூட சரியான முறையில் நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் கணவன்மார் இருக்கிறார்கள். இந்நிலையில் உள்ள கணவன்மார் ஒன்று மனைவியின் அழிச்சாட்டியத்தை அனுசரித்துப் போக வேண்டும். அல்லது தானாக வீட்டை விட்டு விலகிச் செல்ல வேண்டும். என்னே அவலம்!...


அடுத்து, நியாயமான காரணத்தினால் தன் மனைவியை விவாகரத்துச் செய்யும் ஆண் இருப்பிடம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதும் இந்த நடைமுறையால் ஏற்படும் பாதகங்களில் ஒன்று. இந்த பழக்கமுள்ள ஊரில் ஒரு ஆண் தன் மனைவியை விவாகரத்துச் செய்தால் அவன்தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் அவன் இருந்துகொண்டிருப்பது அவனுடைய மனைவியின் வீட்டில்! அவன் தனக்கு அதிக உரிமையுள்ள வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்கும் போது அந்த வீடு அவனது சகோதரிகளின் வீடாக இருந்து கொண்டிருக்கும்.

 

தமிழகத்திலேயே முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் ஒரு பட்டினத்தில் இந்த விவாகரத்து செய்த ஆண்கள் எல்லாம் சங்கங்களில் காலம் கழிக்கிறார்களாம். 


நற்பணிகள் ஆற்றுவதற்காக மூத்தோர் சங்கங்களை கட்டினார்கள், அவை மனைவி வீட்டில் குடியேறி அவளை விவாகரத்து செய்த ஆண்களுக்கு ஒதுங்கும் இடமாக பயன்படுகின்றனவாம். 


தமிழுக்கு சங்கம் வளர்த்த பாண்டியர்கள் போன்று வாழாவெட்டி சங்கம் வளர்த்த பட்டினத்தார்கள் இவர்கள்!...


பின்னணிக் காரணம்

இந்த மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறையில் உள்ள ஊர்கள் ஒன்றில் முற்காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தாளாம். அவளைக் கண்ட ஒரு பெரிய மனிதர் ஏன் கர்ப்பிணியாக இருந்து கொண்டு இவ்வளவு தூரம் வந்து தண்ணீர் எடுத்துச்செல்கிறாய்? என்று கேட்டாராம். அதற்கு அவள் என் மாமியார்தான் இப்படி செய்ய சொல்கிறார் என்றதும், உடனே அந்த பெரிய மனிதர் நீ இனிமேல் உனது மாமியார் வீட்டில் இருக்காதே. உன் தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துகொள் என்றாராம். அந்தப் பெண் அவ்வாறே நடந்துகொள்ள, அவளை பார்த்த மற்ற பெண்களும் அவளை பின்பற்றி தத்தமது தாய் வீட்டிலேயே இருந்து கொண்டார்களாம். இதுவே தொடர்ச்சியாக நடைமுறையாகிவிட்டதாம். இந்த கதை, இந்த பழக்கம் நடைமுறையிலுள்ள பிரபல பட்டினத்தை சேர்ந்த ஒரு சகோதரர் சொன்னது. இது உண்மையாக இருந்தால் ஒரு சிறு குறைக்கு தீர்வு காண்பதற்காக பெரிய தவறில் வீழ்ந்ததாகத்தான் ஆகும். 

      

இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ள ஊர்களில் சுன்னத் என்ற பெயரிலும், குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரிலும், பல விஷயங்களில் இது கூடும், இது கூடாது என்று கருத்து வேறுபாட்டினால் மோதிக்கொள்ளும் இரு பிரிவினரும், இந்தப் (ஆண், மனைவியின் வீட்டில் வாழ வேண்டும் எனும்) பழக்கத்தில் கூட்டுசேர்ந்திருப்பதுதான் வேடிக்கையான வேதனை...

      

மார்க்கத்தை பின்பற்றுவதில் அதிக ஆர்வம் கொண்ட மக்களும் கூட மார்க்கத்திற்கு முரணான இந்த நடைமுறையை எந்த உறுத்தலும் இல்லாமல் தொடர்வது கவலைக்குரிய விஷயம். பெரும்பாலான பெற்றோர் விட்டுச் செல்லும் சொத்து, வீடு மட்டுமாகத்தான் இருக்கிறது. அதில் பெண்ணை விட ஒரு மடங்கு கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும் என அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்ட ஆண் பிள்ளைக்கு எதுவும் கொடுக்காமல் பெண்பிள்ளைக்கு முழுதாக கொடுப்பது அல்லாஹ்வின் சட்டத்தோடு விளையாடுவதாக ஆகும்.

     

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.    (அல்குர்ஆன் 4:11)

      

இந்த வசனம் பெற்றோரின் மரணத்திற்கு பின் அவர்களின் சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேசினாலும், மரணத்திற்கு முன்பே ஆண் பிள்ளைகளுக்கு சொத்து கிடைக்காதவாறு அநீதம் செய்தால் குற்றமாகத்தான் ஆகும். 

ஆகவே, வீட்டோடு மாப்பிள்ளை எடுத்து பெண் பிள்ளைகளுக்கு வீட்டை கொடுத்து ஆண் பிள்ளையின் உரிமையை வீணடிக்கும் இந்த தவறை நடைமுறையாக்கிக் கொண்ட மக்கள் திருந்தி அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மறுமையில் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை;

(அல்குர்ஆன் 11:88)


அல்ஜன்னத், ஜனவரி 2021

Admin
2081 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions