துல் ஹஜ் முதல் பத்து நாட்கள்
__ அபூஅக்மல்
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா தனது அருளால் வருடத்தில் சில குறிப்பிட்ட நாட்களை சிறப்புக்குரியவையாக ஆக்கி வைத்துள்ளான். அந்நாட்களில் அடியார்கள் அதிகப்படியான நற்செயல்கள் செய்து மறுமையில் கூடுதல் நன்மைகள் பெற வாய்ப்பை தந்திருக்கிறான்.
அத்தகைய தனிச் சிறப்புக்குரிய நாட்களில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் குறிப்பிடத்தக்கவை. அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் “அதிகாலை மீது சத்தியமாக பத்து இரவுகள் மீதும் சத்தியமாக” (89: 1-2) என்று கூறுகிறான். இங்கு பத்து இரவுகள் என்று சொல்லப்படுவது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் குறித்துத்தான் என்று மிகப்பெரும்பாலான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இதுதான் சரியானது என்று இமாம் இப்னு கஸீர் அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் குறிப்பிடுகிறார்கள்.
ஹதீஸ்: எந்த நாட்களில் செய்யும் நற்செயல்களையும் விட இந்த (துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் நற்செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ஜிஹாதை விடவுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஜிஹாதை விடவும்தான். ஆனாலும் தன் உயிருடனும் செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று இரண்டுடனும் திரும்பி வராதவரின் ஜிஹாத் (இவையனைத்தையும் விட) அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாகும் என பதிலளித்தார்கள்.
(திர்மிதி 688, மற்றும் அபுதாவூத்,
இப்னு மாஜா).
ஒரு நற்செயலை பிற காலங்களில் செய்வதை விட இந்த பத்து நாட்களில் செய்யும்போது அல்லாஹ்வுக்கு அதிக விருப்பத்துக்குரியதாக ஆகிறது. அல்லாஹ்வுக்கு அதிக விருப்பத்துக்குரியது எனும்போது அதிக நற்கூலிக்குரியதாகவும் இருக்கும்.
நற்செயல்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் எனும்போது நாம் நஃபிலான (கடமையல்லாத உபரியான) தொழுகைகளை அதிகமாக தொழ வேண்டும். தர்மங்கள் அதிகமாக வழங்க வேண்டும். உபரியான நோன்புகள் நோற்க வேண்டும். அதிகமாக இறைவேதம் ஓதுதல், திக்ர் தஸ்பீஹ் உள்ளிட்டவற்றில் ஈடுபடுதலும் வேண்டும்.

