ஆய்வுகள்

March 26, 2023

ஜிஹாத் - ஒரு விளக்கம்

ஜிஹாத் - ஒரு விளக்கம்

- சகோ நூர் முஹம்மது

ஜிஹாத் என்ற வார்த்தையைக் கேட்டால் செவிப்பறையை கிழிக்கும் வெடிகுண்டுகளின் ஓசையும், தகர்ந்து விழக்கூடிய கட்டிடங்களும் அதிலிருந்து உயரும் தூளிப்படலமும்,  உடலிலிருந்து பலமாக உருவப்படும் கூர்மையான கத்தியும் அதிலிருந்து வழிந்தோடும் இரத்தமும், அடுக்கடுக்கான உயிரற்ற சடலங்களும் அங்கிருந்து எழும் ஓலக்குரலும் தான்  மனதில் கற்பனையாக விரியும் என்று கூறுமளவிற்கு நிந்திக்கப்படுகின்ற ஒரு வார்த்தையாக ஜிஹாத் மாறி இருக்கின்றது. 


ஜிஹாத் என்ற பதத்தை பெரும்பாலான ஆங்கிய அகராதிகள் “இஸ்லாத்திற்காக மார்க்கக் கடமை என்று எண்ணி தொடுக்கப்படும் புனிதப் போர்” என்ற பொருளை வழங்குவதைப் பார்க்கிறோம். ஊடகங்களும் அகராதிகளும் பல்வேறு அரசுகளும் ஆதிக்க சக்திகளுமெல்லாம் ஜிஹாத் என்ற பதத்திற்கு தவறான பொருளை தருகின்றனர் என்றால் இதில் மிகவும் வியப்பிற்குரிய ஒன்று என்பது ஜிஹாத் என்ற பதத்தை மிகவு தவறாக புரிந்து கொண்டவர்களில் முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பது தான். 


ஜிஹாத் என்ற வார்த்தை அரபு மொழியின் ஜுஹ்த் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த வார்த்தையாகும். இதற்கு கடுமையாக முயற்சி செய்தல், விடா முயற்சி என்று பொருள் கொள்ளலாம். போருக்கு ஹர்ப் என்றும் கிதால் என்றும் அரபு மொழியில் கூறுவார்கள். புனிதப் போருக்கு அல் ஹர்பும் முகத்தஸ என்று அரபு மொழியில் கூறலாம். ஆனால் ஜிஹாத் என்ற பதத்திற்கு புனித் போர்  என்ற பொருளை அரபு மொழி நிகண்டுவில் நம்மால் பார்க்க இயலாது. திருக்குர்ஆனில் 41 இடங்களில் ஜிஹாத் அல்லது அதன் வேர்ச்சொல்லின் மாற்றுப் பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் போது ஜிஹாத் என்பது பரந்த பொருள் தரக்கூடிய ஒரு பதம் என்பது புலனாகும்.. அதன் பொருளில் போரும் உட்படுமே தவிர இந்த பதத்தை புனிதப் போர் என்ற ஒரு விளக்கத்திற்குள் உட்படுத்த இயலாது என்பதை நாம் விளங்க வேண்டும். திருக்குர்ஆனில் போருக்காக அதிகம் பயன் படுத்தப் படும் பதம் கிதால் என்பதாகும்.


திருக்குர்ஆனின் 29 ஆம் அத்தியாயம் 8 ஆவத் வசனம் இவ்வாறு கூறுகின்றது 

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; 


இங்கு முஸ்லிமல்லாத பெற்றோர் முஸ்லிமாக இருக்கும் தமது மகனை தங்கள் மதத்திற்கு திரும்புமாறு வறுபுறுத்துவதை அல்லாஹ் ஜிஹாத் என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கலாம். 


பொருளால் செய்யும் ஜிஹாத்


திருக்குர்ஆன் 49:15 வசனம் உடலால் மட்டுமல்லா பொருளாலும் ஜிஹாத் செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றது


நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.


இதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் பெருமழை வெள்ளமோ பேரிடரோ ஏற்பட்டால் தமது தமது செல்வத்தை ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் செலவு செய்து நிவாரணப்பணிகளில் முன்னோடிகளாக இணைகின்றனர். பொருளாதாரத்தை அல்லாஹ்வின் திருப்தியை முன்னோக்கி செலவு செய்வதை முஸ்லிம்கள் ஜிஹாதாகக் காண்கின்றனர். 


நபி இப்ராஹீமின் மார்க்கம்

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக ஜிஹாத் வேண்டிய முறைப்படி ஜிஹாத் செய்யுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்;  திருக்குர்ஆன்: 22:78


அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்ய வேண்டிய முறைப்படி ஜிஹாத் செய்யுங்கள் என்று அறிவுறுத்தும் இந்த வசனம் இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமின் மார்க்கம் என்று கூறுவதைப் பார்க்கலாம். நபி இப்ராஹீம் வாளேந்தி எந்த போரிலும் ஈடுபடவில்லை. அல்லாஹ்வைப் பற்றிய தவறான நம்பிக்கைகளைக்  கொண்டிருந்த அக்கால சமூகத்திற்கு அல்லாஹ்வின் ஏகத்துவத்தை புரிய வைக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். மேலும் அவ்வாறு ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது சந்தித்த அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டார் என்பதை நம்மால் பார்க்க முடியும்.


குர்ஆனின் மூலம் ஜிஹாத் செய்யுங்கள்


ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக. திருக்குர்ஆன் 22:52


இங்கு அல்லாஹ் திருக்குர்ஆனின் மூலம் ஜிஹாத் செய்யச் சொல்கிறான். திருக்குர்ஆன் கூர்மையான ஆயுதமல்ல. அதைக் கொண்டு யாருடையவும் உடலை நம்மால் தாக்க இயலாது. ஆனால் திருக்குர்ஆன் மனிதர்களின் இதயத்தை கூர்மையாகத் தாக்கி அவர்களுக்கு உண்மையை உணரவைக்கும் ஆயுதம். இந்த ஆயுதம் தான் உமர் (றலி)யை முஸ்லிமாக மாற்றியது. இணைவைப்பின் ஆழத்தில் ஆழ்ந்திறங்கி இருந்த பல மனிதர்களையும் நேர்வழிப்படுத்தியது. இந்த வசனத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை முன்னிறுத்தி மக்களுக்கிடையில் செய்யப்படும் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தான் ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றான். 


ஜிஹாதின் பிரிவுகள்

1292 முதல் 1350 வரை வாழ்ந்த சிறப்புக்குரிய இமாம்களில் ஒருவரான இப்னுல் கைய்யூம் அல் ஜௌஸி (ரஹ்) ஜிஹாதை நான்காக வகைப்படுத்துவதை நாம் பார்க்கிறோம். 


ஜிஹாதுந் நஃப்ஸ்

ஜிஹாதுஷ் ஷைத்தான்

ஜிஹாதுல் குஃப்ஃபார் வல் முனாஃபிகீன்  جهاد الكفار والمنافقين  

ஜிஹது அர்பாபுத்துல்மி வல் பித்இ வல் முன்கராத்    جهاد أرباب الظلم والبدع والمنكرات


ஜிஹாதுந் நஃப்ஸ்

சுய ஆத்மா அல்லது நஃப்ஸிலிருந்து தான் ஒருவன் தனது ஜிஹாதை ஆரம்பிக்கின்றான். தனது ஆசைகள், இச்சைகள் எனும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை பின்பற்றி வாழ்வதற்காக செய்யப்படும் ஜிஹாத் தான் ஜிஹாதுந் நஃப்ஸாக இருக்கின்றது. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்   ஜிஹாதுந் நஃப்ஸை நான்காக  பிரிப்பதை நாம் பார்க்கிறோம். 


இறை மார்க்கத்தின் உண்மையான வழிகாட்டுதலை அறிந்து கொள்ளும் கல்வியை அடைவதற்கான முயற்சி


அவ்வாறு முயற்சி பெற்று தேடிய கல்வியை வாழ்வில் நடைமுறைப் படுத்தும் முயற்சி


தான் தேடிய, பின்பற்றுகின்ற அந்த கல்வியின் பால் மக்களை அழைக்கும் முயற்சி


அவ்வாறு அழைக்கும் போது ஏற்படுகின்ற இன்னல்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வது. 


சுய வாழ்வில் தமது ஆசைகள் மற்றும் இச்சைகளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய இயலாதவர்களால் ஒரு போதும் இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிரான ஜிஹாத் செய்யவோ அதற்காக புறப்படவோ சாத்தியமில்லை என்று இமாம் இப்னு தைமிய்யா ரலி கூறுவதாக இமாம் இப்னு கைய்யிம் ரலி கூறுகின்றார். 


2. ஜிஹாதுஷ்ஷைத்தான்

இமாம் இப்னுல் கைய்யிம் இவ்வகை ஜிஹாதை மேலும் இரண்டாக பிரிக்கிறார்.


முதலாவது வகை ஷைத்தான் இறை நம்பிக்கைக்கு எதிராக ஏற்படுத்துகின்ற சந்தேகங்களுக்கு எதிராக ஜிஹாத் செய்வது


இரண்டாவதாக ஷைத்தான் ஏற்படுத்தும் சபலங்கள், இச்சைகளுக்கு எதிராக ஜிஹாத் செய்வது.


3.        ஜிஹாதுல் குஃப்ஃபார் வல் முனாஃபிகீன்جهاد الكفار والمنافقين  


இது நான்கு வகையாகச் செய்யப்படும் 


இந்த வகை ஜிஹாத் இதயத்தாலும், நாவினாலும் செல்வத்தினாலும் உடலினாலும் செய்யப்படும். 


 இறைநிராகரிப்பாளர்களுக்கெதிரான ஜிஹாத் கைகள் மூலமும் நயவஞ்சகர்களுக்கு எதிரான ஜிஹாத் நாவு மூலமும் செய்யப்படும் என்று இப்னு கைய்யிம் ரலி கூறுகிறார்


4.  ஜிஹாது அர்பாபுத்துல்மி வல் பித்இ வல் முன்கராத்    جهاد أرباب الظلم والبدع والمنكرات


அநீதி, அனாச்சாரம் மற்றும் தீய செயல்களுக்கு எதிரான இந்த  ஜிஹாத் முதலாவதாக கரங்களினாலும், இரண்டாவதாக நாவினாலும் மூன்றாவதாக இதயத்தினாலும் செய்யப்படும். 


நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து வகை ஜிஹாதுகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மக்கா வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார்கள். மக்காவில் நயவஞ்சகர்கள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கெதிரான ஜிஹாதில் ஈடுபடவில்லை.


நபி ஸல் அவர்கள் மக்காவில் குர்ஆனைக் கொண்டு ஜிஹாத் செய்தார்கள். அது மக்காவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டு மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் நடுங்கினார்கள். இந்த பிரச்சாரத்திற்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். அந்த அடக்குமுறைகளைக் கண்டு முஸ்லிம்கள் அஞ்சவில்லை. அகிலங்களைப் படைத்தவன் அல்லாஹ், அவன் ஏகன், அவனுக்கு இணை துணை இல்லை என்ற மாசற்ற தவ்ஹீதின் பிரச்சாரப் பேரொலி தடைகளை தவிர்த்து முன்னேறியது. நிராகரிப்பாளர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அரணாக நின்ற அபூதாலிபை சந்தித்து பிரச்சாரத்திலிருந்து பின் வாங்க முஹம்மதை வலியுறுத்துங்கள் அல்லது உங்கள் பாதுகாப்பிலிருந்து விடுவியுங்கள் என்று நிரந்தரமாக வறுபுறுத்தினார்கள். அபூதாலிப் ஒரு கட்டத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இந்த கருத்துக்களை எடுத்துரைத்த போது சூரியனையும் சந்திரனையும் வாக்களித்தாலும் இந்த இறையேகத்துவ பிரச்சாரத்திலிருந்து முஹம்மது ஸல் அவர்களை தடுக்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டார்.


அடுத்த கட்டம் முஹம்மத் ஸல் அவர்களை கொலை செய்ய நிராகரிப்பாளர்கள் திட்டம் தீட்டினார்கள். அவர்களுக்கு பதிலாக பனூ ஹாஸிம் வம்சத்தினர் ஒருங்கிணைந்து முஹம்மத் ஸல் அவர்கள் பாதுகாப்போம் என்று அரண் அமைத்தார்கள். அதன் காரணமாக அபூதாலிப் பள்ளத்தாக்கில் முஹம்மத் நபியுடன், முஸ்லிம்களும் பனூஹாஸிம் வம்சத்தினரும் இணைத்து ஊர் விலக்கு செய்யப்பட்டார்கள். நீண்ட 3 ஆண்டுகள். உண்ண உணவு மறுக்கப்பட்டது, பருக நீர் தடுக்கப்பட்டது. ஒட்டகத்தின் தோல்களை சுட்டு உண்ணும் நிலை, பச்சிலைகளை உண்ணும் நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் சோர்ந்து விடவில்லை. ஊர் விலக்கப்பட்ட நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் மக்காவிற்கு வெளியூரிலிருந்து வரும் மக்களிடம் இந்த செய்தியை தொடர்ந்து எடுத்து வைத்தார்கள். 


பின்னர் தாயிஃபை நோக்கி பயணமானார்கள். ஆறுதலையும் பாதுகாப்பையும் தேடி பயணம் சென்றார்கள். எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக அங்கு நபிகளாரை ஏளனம் செய்தார்கள். சிறு பிள்ளைகளைக் கொண்டு தெரு வீதிகளில் கற்களால் எறிந்து மாசற்ற மாணிக்கம் நபி ஸல் அவர்கள் துரத்தப்பட்டார்கள். உத்பாவின் தோட்டத்தில் அபயம் பெற்ற நபிகளாருக்கு திராட்சைப் பழமும் நீரும் கொண்டு வந்த கிறித்தவ பணியாளர் அத்தாஸின் உதவியைப் பெற்ற நபி ஸல் அங்கும் மௌனமாக இருக்கவில்லை. அத்தாஸிற்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள். மனிதகுல மாணிக்கத்தை துன்புறுத்திய தாயிஃப் வாசிகளின் கொடுஞ்செயல் வானத்தின் வாசலைத் திறந்தது. வானவர்கள் இரு மலைகளுக்கிடையில் தாயிஃப் வாசிகளை நசுக்க வேண்டி அல்லாஹ்வின் தூதரை சந்தித்தார்கள். கருணையின் வடிவம்  நபிகளார் வேண்டாம் அவர்களை விட்டு விடுங்கள் அவர்களின் சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறி தண்டனையிலிருந்து காப்பாற்றினார்கள். 


இறுதியில் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அங்கு ஒரு இஸ்லாமிய அரசு உருவானது. மக்காவைத் துறந்தாலும் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுவதற்கு மக்காவின் நிராகரிப்பாளர்கள் தயாராக வில்லை. மதீனாவாசிகளுக்கு போர் எச்சரிக்கை விடப்பட்டது.  முஹம்மதை வெளியேற்றாவிட்டால் போர் செய்து உங்களில் ஆண்களை கொன்று பெண்களை அடிமைகளாக்குவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் திருக்குர்ஆனின் போரை அனுமதிக்கும் முதல் வசனம் இறங்கியது. 


போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 22:40


அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறிய குற்றத்திற்காக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு போர் செய்யும் அனுமதி தற்காப்பு என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த வசனம் இறங்கிய பின்னர் எல்லா நிராகரிப்பாளர்களுடனும் அல்லாஹ்வின் தூதர் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தங்களோடு போரில் ஈடுபட்ட, தம்மை ஊரிலிருந்து துரத்திய  எதிரிகளோடு மட்டுமே போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி உருவான பின்னர் 3 விதமான அணிகளை தூதர் ஸல் அவர்கள் சந்தித்தார்கள். ஒன்று அஹ்லுல் ஸுல்ஹ் - மூஸ்லிம்களுடன் ஒப்பந்தத்தில் இருப்பவர்கள். இவர்களுடன் போர் நடவடிக்கைகளில் நபி ஸல் ஈடுபட வில்லை. இரண்டாவது அஹ்லுல் திம்மா- இஸ்லாமிய அரசுக்கு வரி கட்டி வாழ்ந்தவர்கள், இவர்களுடனும் நபி ஸ்ல அவர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மூன்றாவது அஹ்லுல் ஹர்ப் - இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக சதி செய்பவர்கள், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களுடன் மட்டும் தான் நபி ஸல் அவர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.


திருக்குர்ஆனில் ஜிஹாதுடைய வசனங்களை நாம் பார்க்கும் போது அவற்றில் சில காரணங்களை,  கட்டுப்பாடுகளை, வரம்புகளை அல்லாஹ் வலியுறுத்துவதை நம்மால் பார்க்க இயலும் . குறிப்பாக 22:40 ஆவது வசனத்தில் அல்லாஹ் போரை அனுமதிப்பதற்கான காரணமாக இவர்கள் நியாயமின்றி வீடுகளை விட்டு வெளியேற்ற்ப்பட்டார்கள் என்று கூறுவதைப் பார்க்கலாம்.  


 தொடர்ந்து உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.


மேலே குறிப்பிட்ட  2:190 ஆவது  வசனம் போர் புரிபவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள் என்று கூறுவதை பார்க்கிறோம். வரம்பு என்பதன் பொருள்:- இறந்தவர்களின் உடல்களை சேதப்படுத்துவது, திருடுவது, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், துறவிகள், விலங்குகளைக் கொல்வது ,மரங்கள், வழிபாட்டு தலங்களைச் சேதப்படுத்துவது ஆகும் என்று ஹஸனுல் பஸரி ரஹ், இப்னு அப்பாஸ் ரலி, உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் ஆகியோர் கூறுவதை நாம் பார்க்கிறோம்.


திருக்குர்ஆனை ஆய்வு செய்பவர்களுக்கு மிகத் தெளிவாக இந்த வேதம் மனித உயிர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளங்க இயலும். நிரபராதிகளின் உயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வேதமாக திருக்குர்ஆன் இருக்கின்றது.

தொடரும்...

Admin
490 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions