ஆய்வுகள்

March 26, 2023

ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ]

ஜிஹாத் ஒரு விளக்கம்-  இரண்டாம் பகுதி

- சகோ நூர் முஹம்மது

ஆயத்துஸ்ஸைஃப்


சூறத்துத் தவ்பாவின் 5 ஆவது வசனம் ஆயத்துஸ்ஸைஃப் என்று அழைக்கப் படுகின்றது. இஸ்லாமிய எதிரிகள் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இஸ்லாம் இறை நிராகரிப்பாளர்களை வாளுக்கிரையாக்கச் சொல்கிறது என்று கூறும்போது இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்தைப் போதிப்பவர்களும் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இறை நிராகரிப்பாளர்கள் அனைவரின் இரத்தமும் முஸ்லிம்களுக்கு ஹலால் என்ற ஒரு வழி கெட்ட கொள்கையை பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். 


சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ஸூறத்துத்தவ்பா: 5

இந்த வசனத்தை விமர்சனம் செய்பவர்களைப் பொறுத்தவரையில் இந்த வசனத்தை மேற்கோள் காட்டும் போது இதற்கு முந்தைய, பிந்தைய வசனங்களை தங்களுக்கு வசதியாக மறைத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். இந்திய தொலைகாட்சிகளில் விவாதங்களில் பங்கெடுக்கும் இந்துத்துவ வாதிகளுடைய நிலைபாடு இது என்றால் மக்களை தனிமையில் அணுகி அவர்களை தங்கள் தீவிரவாதக் கொள்கைக்கு அனுகூலமாக மூளைச் சலைவை செய்ய முயற்சிக்கும் ஜிஹாது வியாபாரிகளில் நிலையும் இது தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 


இந்த வசனம் எந்த சந்தர்ப்பத்தில் இறங்கியது. ஏன் கடுமையான செய்திகளை இந்த வசனம் கூறுகின்றது என்பதை நாம் விளங்க வேண்டுமென்றால் இந்த வசனம் இறங்கிய கால கட்டத்தையும் அதோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளையும்  நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த உடன்படிக்கையை முக்கிய சஹாபாக்கள் கூட தோல்வியாக எண்ணிய போது அல்லாஹ் இதை தெளிவான  வெற்றியாக 48 ஆவது அத்தியாயத்தின் முதல் வசனத்தில் பிரகடனப்படுத்தினான். பத்து ஆண்டுகளுக்கான போர் நிறுத்த உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இறை நிராகரிப்பாளர்களின் முக்கிய அடையாளங்களில்  ஒன்று ஒப்பந்தங்களை மீறுவது. ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் மீறத் தொடங்கினார்கள். இதற்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர் நடவடிக்கையைத் தொடங்கினார்கள். 


மக்காவிலிருந்து  ஒரு காலகட்டத்தில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் வெற்றி வீரர்களாக மக்காவின் தெரு வீதிகளில் பிரவேசித்தார்கள். சஹாபாக்களின் மனங்களில் மரணமடைந்த யாசிர் குடும்பத்துடையவும், ஹம்ஸா ரலியுடையவும் நினைவுகள் கடலிலெழும் அலை போன்று திரும்பத் திரும்ப வந்திருக்கலாம். துன்புறுத்தப் பட்ட நிகழ்வுகள், இழந்த செல்வங்கள், ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் அலை மோதி இருக்கலாம். ஒரு சில சஹாபாக்கள் இன்றைய தினம் பழிவாங்கும் நாள் என்று பகிரங்கப் படுத்தி முன்னேறிச் சென்ற போது  கருணையின் வடிவான இறைத்தூதர் உலக வரலாற்றில் ஒப்பற்ற முன்னுதாரணமாக மக்காவாசிகளுக்கு  மகத்தான  மன்னிப்பை பிரகடனம் செய்தார்கள். இதனால் பழிக்கு பழி வாங்கப் படுவோம் என்று எண்ணி தமது விதியை எதிர்பார்த்திருந்த மக்கா வாசிகள் அலை அலையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.


இஸ்லாத்தை ஏற்காதவர்கள் அல்லாஹ்வின் தூதரோரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்காளிகளாக இருந்து எவ்வித உடன்படிக்கை மீறலிலும் ஈடுபடாத கூட்டத்தார்களின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அவர்களுடனான ஒப்பந்தம் தொடர்ந்து வந்தது. 


இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போர் நடவடிக்கையை மேற்கொண்டார்கள். தபூக் போர் நடவடிக்கைக்காக நபி ஸல் சென்றிருந்த  காலகட்டத்தில் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் தமது சுய ரூபத்தை வெளிக்காட்டத் தொடங்கினார்கள். முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டனர். ஒப்பந்தத்தில் இருந்து கொண்டே இஸ்லாமிய அரசுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்ட இந்த பாவிகளுடனான ஒப்பந்தத்திருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று சூறத்துத் தவ்பாவின் முதல் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 


ஒரு அரசுடன் செய்த ஒப்பந்தத்தை மீறினால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இராஜதுரோகக் குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கவும் எல்லா அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் நிலையிலும் அல்லாஹ்  இக்குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு நான்கு மாத அவகாசத்தை வழங்குகின்றான். நான்கு மாத காலத்திற்குப் பின்னரும் மக்காவில் இவர்கள் வசித்தால் இவர்களுக்கெதிராக  என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அல்லாஹ் சூறத்துத் தவ்பாவின் ஐந்தாவது வசனத்தில் தெளிவு படுத்துகின்றான். 


ஒரு அரசுக்கு எதிராக சதிச்செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோக குற்றமாக பார்க்கப் படுகின்றது. இந்த குற்றச்செயல்களுக்கு உலகின் எல்லா நாடுகளும் மரண தண்டனையைத் தான் தண்டனையாக வழங்குகின்றன. ஆனால் இத்தகைய கொடும் குற்றச்செயலை புரிந்தவர்களுக்கு நான்கு மாத அவகாசத்தை குர்ஆன் வழங்கியது. இந்த காலத்திற்குள்ளாக அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மக்காவில் தொடரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. 


இதற்கு முந்தைய நான்காவது வசனத்தில் யார் ஒப்பந்தத்தை மீறவில்லையோ அவர்களுடனான ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதன் மூலம் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவதன் அவசியத்தையும் அல்லாஹ் கற்றுத்தருவதை நாம்  பார்க்கிறோம்.


மேலும் திருக்குர்ஆன் இந்த பாவிகள் யாராவது உங்களிடம் புகலிடம் தேடி வந்தால் திருக்குர்ஆனை அவர்கள் கேட்கும் வரை அவர்களுக்கு புகலிடம் வழங்குங்கள் என்றும் அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்பி வையுங்கள் என்றும் சூறத்துத் தவ்பாவின் 6 ஆவது வசனத்தில் கட்டளையிடுவதன் மூலம் மனித உயிர்களுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதை நாம் பார்க்கிறோம். 


ஆக திருக்குர்ஆனின் ஆயத்துஸ்ஸைஃபின் வசனங்கள் முஸ்லிமல்லாதவரை கண்ட இடத்தில் கொல்வதற்காக இறக்கப்பட்ட வசனமல்ல என்பதையும் இந்த வசனம் இஸ்லாமிய மார்க்கம் மனித உயிர்களை எந்த அளவிற்கு மதிக்கின்றது என்பதற்கான மகத்தான உதாரணம் என்பதையும் நாம் விளங்கலாம். இந்த வசனம் பொதுவாக அனைத்து இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக வாளேந்தி போர் புரிவதற்கான கட்டளையல்ல என்பதையும் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட பின்னர் ஒப்பந்தத்தை மீறி இராஜதுரோக குற்றத்தில் ஈடுபட்ட பாவிகளுக்கெதிரான நடவடிக்கை தான் என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 


தனி நபர்களோ அல்லது குழுக்களோ ஆயுதமேந்தி ஜிஹாத் செய்ய இயலுமா?


இஸ்லாமிய ஜிஹாத் என்பது ஒரு சில இளைஞர்கள் கூடி செய்வது அல்ல. அல்லது ஒரு சில குழுக்கள் இணைந்து நடத்துவது அல்ல. இஸ்லாமிய ஜிஹாதிற்கு முறையான காரணங்களும் முறையான அழைப்பும் தேவை. அவ்வாறு அழைப்பவர் (இமாம்) அதிகாரம் கொண்டவராக இருத்தல் வேண்டும். அவருக்குப் பின்னால் தான் முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும். 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும். (முஸ்லிம்) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.      


இமாம் ஒரு கேடயமாவார் அவர் மூலம் போர் செய்யப்படுகின்றது. ( அபூதாவூத்)


முஸ்லிம் சமுதாயம் பைஅத் செய்து தந்த உம்மத்தின் தலைவரின் ‌வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் ஜிஹாத் செய்ய வேண்டும். இதைத்தான் குர்ஆனும், ஸுன்னாவும் ஏவியுள்ளது.  இது விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஏகோபித்துள்ளார்கள். இதைத் தவிர்த்து இன்று ஜிஹாத் என்ற பெயரில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியதும் மறுமையில் பெரும் தண்டனைக்குரியதுமாகும். 


இறை நிராகரிப்பாளர்களை அவர்களின் இறை நிராகரிப்பின் காரணமாக மட்டுமே கொல்வதற்கு அனுமதி உண்டா?


இவ்வாறு கொல்வதற்கு அனுமதி உண்டு என்று இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரில் தீவிரவாதச் செயலில் ஈடுபடுகின்ற அல் காய்தா, ஐ எஸ் போன்ற அமைப்பினர்கள் கூறுகின்றனர். இந்த கருத்தின் அடிப்படையில் தான் நிரபராதிகளான மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது உட்பட பல்வேறு கோரச் செயல்களை அரங்கேற்றுகின்றனர். இவர்களின் கருத்தை அங்கீகரிக்காத  முஸ்லிம்களையும் இவர்கள் இறை நிராகரிப்பாளர்களாகப் பார்க்கின்றனர். 


ஆனால் இறை நிராகரிப்பாளர்களை அவர்களின் இறை நிராகரிப்பை மட்டும் காரணமாகக் கொண்டு கொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பது தான் சரியான கருத்து. இதற்கு மாற்றமாக இறை நிராகரிப்பாளர்களை கொல்வது தான் மார்க்க அடிப்படையில் சரியாக இருந்திருக்குமென்றால் மக்கா வெற்றிக்குப் பின்னர் மக்காவாசிகளுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பொது மன்னிப்பு வழங்கியிருக்க முடியாது. இறை நிராகரிப்பாளர்களை அவர்களின் இறை நிராகரிப்பை மட்டும் காரணமாகக் கொண்டு கொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்ற கருத்தைத் தான் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா உட்பட அஹ்லுஸ்ஸுன்னாவின் பெரும்பாலான இமாம்கள் கூறுகின்றனர். இது விஷயத்தில் அஹ்லுஸ்ஸூன்னாவின் இமாம்கள் ஏகோபித்திருப்பதை நாம் பார்க்கலாம். 


திருக்குர்ஆனை படித்துப் பார்ப்பவர்களால் குர்ஆன் மனித உயிர்களை எந்த அளவிற்கு மதிக்கின்றது என்பதை புரிந்து கொள்ள இயலும். பல்வேறு வசனங்களில் திருக்குர்ஆன் இது குறித்து பேசுவதை நாம் பார்க்கலாம். இஸ்லாம் கொலையை பெரும் பாவமாகப் பார்க்கின்றது ( திருக்குர்ஆன் 25:68)  நிரபராதிகளைக் கொல்வது மனித சமூகத்தையே கொல்வதற்குச் சமம் என்று திருக்குர்ஆன் 5:32 ஆவது வசனம் கூறுகின்றது. 



 "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 



மேலே குறிப்பிட்ட வசனம் நிரபராதிகளைக் கொல்வது மனிதர்களை அனைவரையும் கொல்வதற்குச் சமம் என்று கூறுவதோடு நிற்காமல் ஒரு மனிதனை வாழவைப்பது மனிதர்கள் யாவரையும் வாழவைப்பதற்குச் சமம் என்று மனித் நேயத்தின் மகத்தான அஜண்டாவை முன்வைக்கின்றது. ஒரு சமூகமும், நாடும் உலகும் எல்லாம் அமைதியாக முன்னேறுவதற்கான அற்புதமான செய்தி. திருக்குர்ஆன் பூமியில் இரத்தத்தை ஓட்டுவதற்கு பதிலாக பூமியில் அமைதியை ஏற்படுத்துவதை  இலட்சியமாகக் கொள்ள முஸ்லிம்களை அறிவுறுத்துகின்றது. இதற்கு மாற்றமாக முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களும் வழிகேடர்களின் கருத்தாகவே இருக்கின்றது என்பதை நாம் விளங்க வேண்டும். 


ஜிஹாத் என்ற பதம் விரிவான பொருளைத் தருகின்ற ஒரு பதமாக இருக்கின்றது. இந்த பதத்திற்கு குறுகலான பொருளைத் தருவதற்கான முயற்சிகளை இஸ்லாமிய சமூகம் தடுக்க வேண்டும். இஸ்லாம் பூமியில் அமைதியை நிலை நாட்ட வந்த மார்க்கம். நிரந்த அமைதியும் வெற்றியும் படைத்த இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதால் தான் ஏற்படும் என்ற மகத்தான செய்தியை இஸ்லாம் பறை சாட்டுகின்றது. இதற்கு மாற்றமாக மக்கள் பயணிக்கும் போது அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பினான். தூதர்கள் மக்களுக்கு இறைச்செய்தியின் அடிப்படையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்களேத் தவிர வாளேந்தியவர்களாக சமூகத்தில் நடக்கவில்லை. மக்கள் அல்லாஹ்வை நிராகரித்து அநீதியையும் அக்கிரமத்தையும் தேர்வு செய்து பூமியின் அமைதியின்மையை ஏற்படுத்தும் போதெல்லால் அல்லாஹ் தன் தண்டனையை வானிலிருந்து இறக்கிய வரலாறுகளை குர்ஆன் பேசுகின்றது. நிராகரிப்பாளர்களுக்குரிய தண்டனையாக அல்லாஹ் நிரந்தர நரகையும் படைத்திருக்கின்றான். நமது கடமை அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழகிய முறையில் அழைப்பது மட்டுமே என்பதை நாம் விளங்க வேண்டும்.

Admin
479 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions