ஆய்வுகள்
August 03, 2023
எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...
எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
இஸ்லாம் மார்க்கம் அமைதியான மார்க்கம். நீதியாக, நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ள வழிக்காட்டும் மார்க்கமாகும்.
நாம் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி, பின் வரக்கூடிய குர்ஆன் வசனத்தின் மூலமாக மக்களுக்கு அல்லாஹ் இப்படி வழிக்காட்டுகிறான்.
" இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்...(2:143)
நடுநிலைமையான சமுதாயம் என்று சொன்னால் நீதியாக, நேர்மையாக, யாருக்கும் அநியாயம் செய்யாமல், நடுநிலைமையோடு நல்ல முறையில் சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த வசனத்தின் மூலமாக அல்லாஹ் விரும்புகின்றான்.
ஒரு மனிதன் நடுநிலை இழந்து, எல்லை மீறுவானேயானால் அவன் அழிவது நிச்சயம் என்பது வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன.
" எல்லை மீறுபவர்கள் அழித்தனர் என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (முஸ்லிம் -5185)
தன்னிடத்தில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அல்லது செல்வத்தை பயன்படுத்தி அல்லது பலத்தை பயன்படுத்தி அல்லது அறிவை பயன்படுத்தி எல்லை மீறி போகும் போது தன்னை அறியாமல் பிறருக்கு அநியாயம் செய்ய வேண்டிய ஒரு நிலைமைக்கு மனிதன் மாறி விடுகிறான்.
எல்லை மீறி, அநியாயம் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் பின்னால் மேற் சுட்டிக்காட்டிய அம்சங்களே பிரதானமாக காணப்படும்.
இவைகள் எங்களை காப்பாற்றும் என்ற மமதையில் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் பகிரங்கமாக செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். என்பது போல தன்னிடத்தில் இருக்கும் ஆட்சி, அதிகாரங்கள், படைப்பலம், பொருளாதாரம் இவைகளை நம்பி தன்னையே இழக்க வேண்டிய துர்பாக்கியத்தில் மனிதன் சிக்கிக் கொள்கிறான்.
வீட்டுத் தலைவன் முதல் பஞ்சாயத்து தலைவர் வரையும், அதேபோல் ஆட்சி தலைவன் முதல் சாமானியன் வரை சகல விஷயங்களிலும் நிதானமாகவும், அவசரம் இல்லாமல் நடு நிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும்.
என்னிடத்தில் ஆட்சி இருக்கின்றது, அதிகாரம் இருக்கின்றது, பலம் இருக்கின்றது, படை இருக்கின்றது, என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற ஆணவத்தில் பிறருக்கு அநியாயம் செய்வாரேயானால், ஆணவத்தின் முடிவு இழிவான அழிவாகும்.
மூஸா நபி காலத்தில் காரூன் என்பவன் பெரும் செல்வங்களுக்கு அதிபதியாகவும், பிர்அவுனுடைய அரச சபையில் அமைச்சராகவும் இருந்தான். பிறரை இழிவாக கருதியதோடு, தன்னைவிட யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது என்ற மமதையில் உயர்ந்த மாளிகையை கட்டி, அந்த மாளிகைக்குள் நுழைவதற்காக வேண்டி, தனது படைகள் புடை சூழ பெருமையோடு வீதியிலே பவனி வரும் பொழுது, அவனையும், அவனது மாளிகையையும் நேரடியாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்க அல்லாஹ் பூமியால் அவனை விழுங்க வைத்தான்.
எல்லை மீறிய பெருமையின் இறுதி முடிவு இப்படித்தான் அமையும். இருந்த இடம் தெரியாமல் அல்லாஹ் ஆக்கி விடுவான்.
மேலும் பிர்அவுன் தன்னை உயர்ந்த கடவுள் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். தனது ஆட்சிக்கு கீழ் உள்ள மக்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி, அநியாயம் செய்து வந்தான். தனக்கு எதிராக ஆண் குழந்தை பிறக்கப் போகின்றது என்ற தகவல் கிடைத்தவுடன், பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளை எல்லாம் ஈவிரக்கமின்றி தனது கூலிப்படைகளை வைத்து கொத்துக்கொத்தாக கொலை செய்தான்.
இறுதியில் பிர்அவனுடைய அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் மூஸா நபியும், அவரது தோழர்களும் நாட்டை விட்டு தப்பித்து வெளியேறும் போது இதை கேள்விப்பட்ட பிர்அவுனும் அவனது கூலிப்படைகளும் இவர்களை கொல்வதற்காக வேண்டி ஆயுதங்களோடு விரட்டி வருகின்றார்கள். அல்லாஹ் தனது அற்புதத்தால் நைல் என்ற (செங்) கடலை பிழக்க வைத்து மலை போன்ற வழிகளை மூஸா நபிக்கும், அவரது தோழர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தான்.
கொலை வெறியோடு விரட்டி வந்த பிர்அவுனும், அவனது கூலிப்படைகளும் அதே கடல் வழியாக போகும்போது, அல்லாஹ் அந்த கடலை ஒன்று சேர்த்து, பிர்அவுனையும், அவனது கூலிப்படைகளையும் துடிக்க, துடிக்க அழித்த வரலாறுகளை யாரும் மறக்க முடியாது.
நான் தான் உயர்ந்த கடவுள் என்றான், என்னிடத்தில் ஆட்சி இருக்கின்றது என்றான், அதிகாரம் இருக்கின்றது என்றான், படை இருக்கின்றது என்றான், பலம் இருக்கின்றது என்றான், பொருளாதாரம் கொட்டி கிடக்கின்றது என்ற அராஜகத்தின் உச்சகட்டத்தில் பிறர் விஷயத்தில் எல்லை மீறி நடந்தான். அநியாயத்தின் உச்சக்கட்டத்தில் மிதந்தான். சரியான சந்தர்ப்பத்தில் அவன் இருந்த இடம் தெரியாத அளவிற்கு இழிவான முறையில் அவனையும், அவனது கூலிப்படைகளையும் அல்லாஹ் அழித்தொழித்தான். அவனை சூழ இருந்த எதுவும் அவனை காப்பாற்ற முடியவில்லை.
இப்படித்தான் எல்லை மீறிய ஆணவக்காரர்களின் இறுதி முடிவை வரலாறு நெடுகிலும் காணலாம்.
ஆரம்ப காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை அநியாயக்காரர்களுடைய முடிவுகளை அந்தந்த மக்கள் நேரடியாக கண்டு வருகிறார்கள். அநியாயக்காரர்கள் நிலைத்தது கிடையாது.
துள்ளியமாடு பொதி சுமக்கும் என்பதற்கு இணங்க.
தண்டனை வர சற்று கால தாமதமானாலும், அநியாயக்காரர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.
உப்பு திண்டவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
தனது எதிரிகள் என்ற அடிப்படையிலும், சிறுபான்மை என்ற அடிப்படையிலும், ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், பலகீனமானவர்கள் என்ற அடிப்படையிலும், மத ரீதியாகவும், அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
எரிகிற நெருப்பில் குளிர் காய்வது போன்று, அநியாயங்களை தூண்டி விட்டு, ஆட்சி கட்டிலில் உல்லாசமாக இருக்க பார்க்கின்றார்கள்.
அடுக்கடுக்கான அநியாயங்களை செய்து விட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முதலை கண்ணீரும் வடிக்கிறார்கள்.
ஆடு நனைகிறது என்று, ஓநாய் அழுத கதைகளாக இன்றைய அநியாயக்காரர்களுடைய நடவடிக்கைகளை நாம் காணலாம்.
இவ்வளவு அநியாயம் செய்தும் இவர்கள்தானே இன்னும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறார்கள். இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவு இல்லையா ? என்று பாதிக்கப்பட்டவர்களும் ஏனைய மக்களும் கேட்கக்கூடிய ஒரு நிலையை பரவலாக நாம் காணலாம். பொதுவாக ஒரு மனிதன் அநியாயம் செய்யும்பொழுது இறைவன் சில நேரங்களில் உடனே தண்டித்து விடுவான். அல்லது தொடர்ந்தும் பல விதமான அநியாயங்களை செய்ய வைத்து, அதற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக பயங்கரமான பிடியாக இறைவன் பிடிப்பான் என்பதைத்தான் வரலாறுகள் உண்மைப்படுத்துகின்றன.
"நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிகக் கடுமையானதாகும். (85:12)
பூனைக்கு அநியாயம் செய்த பெண்ணையே அல்லாஹ் கொழுந்து விட்டு எரியும் நரகத்தில் தூக்கி வீசுகிறான் என்றால், அப்பாவி மனிதர்களை அநியாயம் செய்த யாரையும் அல்லாஹ் சும்மா விட மாட்டான்.
அநியாயம் செய்யக் கூடியவர்களுக்கு கடுமையாக எச்சரிக்க கூடிய, சில குர்ஆன் வசனங்களை தொடர்ந்து கவனிப்போம்.
மேலும் "அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். (14:42)
மேலும்
"இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.(20:111)
மேலும் ... நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா அவ்வாறென்று, அவன் இதை விட்டும் விலகிக் கொள்ளவில்லையாயின் நிச்சயமாக அவனது முன்நெற்றி முடியை நாம் பிடிப்போம்.
தவறிழைத்து, பொய்யுரைக்கும் அவனது முன்நெற்றி முடியாகும். எனவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் (நமது) நரக காவலாளிகளை அழைப்போம். (96:14...)
மேலும்... நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள். (12:23)
மேலும்... அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (11:18)
இப்படியான குர்ஆன் வசனங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மன ஆறுதலாகவும், அநியாயக்காரர்களுக்கு கடுமையான வேதனையாகவும் உள்ளன என்பதை விளங்கி, நிச்சயமாக அநியாயக்காரர்கள் எந்த வழியிலும் தப்பிக்க முடியாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் முஸ்லிம்களை பொருத்தவரை பொறுமையாக இருந்து, அமல்களை நிறைவாகவும், தொடராகவும் செய்வதோடு, அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
தனக்கு நெருக்கமான அடியார்களை அல்லாஹ் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
***
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions