ஆய்வுகள் | மற்றவை by - அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக் On Aug 23, 2023 Viewers: 429 0
நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....
- அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்
கணவன் மனைவியாக நெருக்கமாக வாழும் தருணம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்புகளோடு முடிந்து போவதை பலரது வாழ்விலும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக 45 அல்லது 50 வயதை தாண்டி விட்ட தம்பதிகள், பேச்சில் உறவாடுவதோடு தமது நெருக்கங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அந்த வயதில் எவரேனும் நெருக்கமாக இருந்து விட்டால், அதை ஒரு அசவுகரியமான செயலாக நமது சமூகமும் பார்க்கத் துவங்கியுள்ளது. இரண்டு மூன்று பிள்ளைகள் என்று ஆகிவிட்டன, பிள்ளைகளும் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டனர் இதற்கு மேல் நாம் நெருங்கி அமர்வது கூட தவறான செயல் ஆகிவிடும் என்று தமக்குத் தாமே வரம்புகளை கட்டமைத்து வாழத் துவங்கி விடுகின்றனர். இதுவெல்லாம் இஸ்லாமிய வழிகாட்டலில் தவறானவை ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் நமது ஒட்டுமொத்த வாழ்விற்கான முன்மாதிரி. அன்னார் தமது 40வது வயதுக்கு பின்னர் தான் நபித்துவப் பணிகளைத் துவங்கினார்கள். அதற்கு பின்னர் தான் நபியின் செய்திகளை பல நபித் தோழர்களும் அறிவிக்கத் துவங்கினர். அதில் அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களும் ஒருவர். நபியின் குடும்ப வாழ்வு எவ்வளவு இனிமையானவை என்பதை பல செய்திகள் நமக்கு பறைசாற்றுகிறது.
ஆயிஷா (ரலி) அவர்கள் உணவு உட்கொள்ளும் போது இறைச்சியைக் கடித்தார்கள் என்றால், அவர்கள் எங்கு கடித்தார்களோ அதே இடத்தில் வாய் வைத்து நபிகளார் (ஸல்) அவர்கள் கடிப்பார்கள்.
பாலைவனத் திடலில் மக்கள் வீர விளையாட்டுக்களில் ஈடுபடும்போது, தம் கணவர் நபிகளாரின் தோள்மீது, தமது தாடையை நிறுத்தி வைத்தவர்களாக அந்த விளையாட்டை ஆயிஷா (ரலி) அவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
நபிகளார் சென்ற போர்க்களங்களுக்கு, தமது மனைவிமார்களில் யாரேனும் ஒருவரை தம்மோடு அழைத்து செல்வார்கள், அதற்காக வேண்டி நபியின் மனைவியர் தம்மை அலங்கரித்து கொள்வார்கள்.
நபிகளார் (ஸல்) அவர்கள் தமது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை ஆயிஷ் என்று செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாக குளித்திருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களோடு நபிகளார் (ஸல்) அவர்கள் ஓட்டப்பந்தயம் வைத்து விளையாடியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களது வயது 63. தமது 63வது வயதிலும் கூட, தம் ஆருயிர் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்த வண்ணம் தான் அவர்களது உயிர் பிரிந்தது என்பது வரலாறு.
தமது நெஞ்சில் படுத்த வண்ணம் இயலாமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தம் கணவர் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு, தமது கரத்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் மிஸ்வாக் செய்து விட்டார்கள். இது போன்று பல உதாரணங்களை நாம் நபிமொழிகளில் படிக்கலாம்.
இவைகளெல்லாம் ஏதோ நபியும், நபிகளாரின் மனைவியும் புதுமணத் தம்பதிகளாக இருக்கும்போது செய்தவை அல்ல. அவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களில் அதாவது இறுதி காலம் வரை நடந்தேறிய நிகழ்வுகள் ஆகும். இதுதான் இஸ்லாம் கூறும் சரியான புரிந்துணர்வுள்ள வாழ்வாகும்.
குழந்தைகள் என்று ஆகிவிட்ட பின், கணவன் மனைவி தமது படுக்கைகளைப் பிரித்துக் கொள்வது. ஒன்றாக அமர்ந்து பேச வெட்கப்படுவது. கனவனுக்கு நேரம் ஒதுக்கி அவரது இன்ப துன்பங்களில் பங்கெடுக்க இயலாமல் ஒரேடியாக ஒதுங்கி விடுவது, தமது சிறு பிள்ளைகளின் முன்பு கூட அன்பாய் முத்தமிட்டுக் கொள்வதை அருவருப்பாக எண்ணுவது, இப்படி பல வகைகளில் நமது திருமண வாழ்க்கை 40 வயதை தாண்டும்போதே முடிவுக்கு வந்து விடுகிறது.
இவ்வாறான வாழ்க்கை அமைதியைத் தரும் வாழ்க்கையாக இருக்காது. இவ்வாறான வாழ்க்கையில் தொடர் பிரிவுகள் தான் அதிகரிக்குமே தவிர அன்பு அதிகரிக்கவே செய்யாதுஎன்பதை தம்பதிகள் புரிந்து செயல்பட வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் பிளவுகள் அதிகரித்து விடக்கூடாது. அதையே ஷைத்தான் விரும்புகிறான். கணவன் மனைவியாக பரஸ்பரம் அன்பு செலுத்திக் கொள்வதை, வெட்கப் புன்னகையோடு ஓரக்கண்ணில் பார்க்கும் நம் பிஞ்சுக் குழந்தைகளுக்கு, இதுதான் நேசமிக்க வாழ்வின் அடையாளம், இதுதான் சுன்னாஹ் என்பதை பதிய வையுங்கள்! நாளை அவர்களது வாழ்வும் நேசமிக்க வாழ்வாக அமையும் இன்ஷா அல்லாஹ்!
இதனை எழுதும்போது எனக்கு தோன்றிய ஒரு சிந்தனையை இறுதியாகப் பதிவு செய்துவிட்டு முடித்துக் கொள்ள விரும்புகிறேன். மறுமையில் அல்லாஹ் பார்க்காத, பேசாத, பரிசுத்தப்படுத்தாத, கடுமையாக வேதனை செய்யப்படும் நபர்களில் ஒருவர் "விபச்சாரம் செய்யும் முதியவர்" ஆவார். பெண்களுக்கு இயல்பில் வயோதிபத்தைத் தொடும் ஆரம்பத்திலேயே இல்லற வாழ்வின் சிந்தனை அற்றுப்போவதைப் போல் (அல்லாஹ் நாடியவர்களைத் தவிர), ஆண்களில் பலருக்கும் அவ்வாறு ஆவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விதிவிலக்காகவும் பலர் இருக்கலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) எந்தப் பருவமாக இருந்தாலும், அது ஹலாலான உறவைக் கொண்டே முழுமைப் பெற வேண்டும். அதையே அல்லாஹ் விரும்புகிறான். ஆக, பெண்களால் தமது இயலாமைக் காலத்தில் முழுமையாக இல்லற வாழ்வில் ஈடுபட இயலவில்லை என்றாலும், தமது கணவர் தவறான செயலுக்கு சென்று விடுவதை அவர்கள் அஞ்ச வேண்டும். தம்மால் இயன்ற ஒத்துழைப்பை அவர்கள் நல்க வேண்டும். அதுவே அவர்களைப் பாதுகாக்கும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்!!
***