சட்டங்கள் | by -அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக் On Aug 31, 2023 Viewers: 417 0
புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -
தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!
-அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்
ஒரு முஸ்லிமான ஆண் பேண வேண்டிய ஒழுங்குகளில் ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒன்று தான் தாடியை வளர்ப்பதும், மீசையைக் கத்தரிப்பதும் ஆகும். தாடியை வளர்க்க வேண்டும், அதை ஒன்றுமில்லாமல் மழித்து விடக்கூடாது என்பதில் பேணுதலாக இருக்கும் பல இஸ்லாமியர்கள், அதே நிலையில் நபியவர்களால் எத்திவைக்கப்பட்ட, மீசையைக் கத்தரிக்கும் பண்பில் ஆகப் புறக்கணிப்பு செய்பவர்களாகவே அதிகம் உள்ளார்கள். எந்தச் செய்தியை நாம் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்று, தாடி வைக்காதவர்களைப் பார்த்து எடுத்துரைக்கிறோமோ, அதே செய்தியில் அதே வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகத்தான் மீசையைக் கத்தரித்தலும் இடம்பெறுகிறது.
*மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி: 5893, முஸ்லிம் 432, 433, 434, 435, 436.*
என்றாலும் நாம் வாழுகின்ற சமூகமும், சினிமா கலாச்சாரமும் மீசைக்கு கொடுத்த வரைவிலக்கணத்தை பிடித்துக் கொண்டு, அது வீரத்தின் அடையாளம் என்று பலரும் தட்டிக் கழித்து விடுகின்றனர். மீசையே வளராத பலரும் வீரமாக இருப்பார்கள் என்பது எதார்த்தம். வீரம் என்பது மீசையை வைத்து அடையாளம் கொள்ளப்படும் ஒன்று அல்ல. அது வெறும் வெற்று வார்த்தையாகும்.
இதில் கொடுமை என்னவென்றால், நாம் சுன்னாஹ்வை பாதுகாக்க வந்தவர்கள், சுன்னாஹ்வை உயிர்பிக்க உயிரையும் கொடுப்பவர்கள் என்றெல்லாம் பிறருக்கு மார்க்க உபதேசம் செய்பவர்களின் நிலையம் கூட, இதில் அலட்சியமாகவே இருக்கிறது என்பதை இயல்பில் பார்த்தும் வருகிறோம். மேல் உதட்டை மூடிவிடும் அளவிற்கு பழுத்த மீசையுடன், மேடைகளில் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். மீசையைக் கத்தரிக்கா விட்டால் என்ன நரகமா சென்று விடுவோம்? மீசையைக் கத்தரிக்காவிட்டால் மேடையில் பயான் செய்யக் கூடாதா? அது வெறும் சுன்னாஹ் தானே என்று வேகமாக கேள்வியும் எழுப்புகின்றனர். விரலசைப்பதற்காவும், நெஞ்சின் மீது கைகளை கட்டுவதற்காகவும், ஆமீன் சப்தமிட்டு கூறுவதற்காகவும் மிகப் பெரிய புரட்சியையே கண்ட கொள்கைவாதிகள் தான், இப்படியெல்லாம் அப்பட்டமாக நபியின் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வைப் புறக்கணிக்க குறுக்கு கேள்விகள் கேட்கின்றனர் என்பதை எண்ணி வேதனை அடைகிறேன். இந்தக் கேள்வியைக் கேட்கும் நபர்கள், ஏன் தாடி விஷயத்தில் அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதில்லை? தாடிக்கு ஆர்வமான ஒரு மன நிலையும், மீசையைக் கத்தரிக்க அசவுகரியமான வேறு ஒரு மன நிலையும் நம்மில் ஏற்படுவது ஏன் என்று சிந்தித்துப் பார்க்கவும்... இரண்டையும் ஒரே நிலையில் வைத்துத்தான் தான் நபியவர்கள் நமக்கு கட்டளையிட்டார்கள்.
இஸ்லாம் ஒன்றை நமக்கு போதனை செய்கிறது என்றால், அதை விடவும் அழகான செயல் இவ்வுலகில் இருக்காது, இருக்கவும் முடியாது என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். வெளிப்பகுதியில் இருந்து வருகின்ற அசுத்தமான தூசுகள் பல, நமது மீசையில் தொற்றிக் கொள்வதுண்டு. நாம் சுவாசிக்கும் போது மிக வேகமாக அந்த தூசுகள் நமது நுரையீரலை அடைந்து தேவையற்ற தொல்லைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்லமால் நாம் முகத்தை நீரால் சுத்தம் செய்தாலும், மீசைக்குள் தொற்றி இருக்கும் அசுத்தங்கள் அவ்வளவு இலகுவாக சுத்தமாகி விடுவதும் இல்லை. அதேநேரம் மீசையை ஒட்டக் கத்தரித்த ஒருவருக்கு இந்த நிலை ஏற்படாது. நீரால் சுத்தம் செய்யும்போது உடனே முழுமையாக அவை சுத்தமாகி விடவும் செய்யும். ஒவ்வொரு நேர தொழுகையின் போதும் முகத்தைக் கழுவுவதால் மென்மேலும் அந்த இடம் சுத்தமாக ஆகிவிடும். இத்தகைய ஆரோக்கியமான நிலை மீசையை கத்தரிப்பதில் உண்டு. என்றாலும் இவைகளை ஆதாரமாகக் காட்டி நாம் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை. நபியின் கட்டளையை வலுசேர்க்கும் புறக்கருத்துக்கள் இவைகள், அவ்வளவு தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகவும், கூடுதல் வார்த்தைகளோடும் நமக்கு இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள். அந்த எச்சரிக்கையைப் படிக்கும்போது, இது எந்த அளவிற்கு அவசியமான, வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறது.
*யார் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஸைூது பின் அர்கம் (ரலி), நூல்: நஸாயீ 13. தரம் ; ஸஹீஹ்.*
இவ்வளவு ஆழமாக நபியவர்கள் சொன்ன பிறகும் இதைப் புறக்கணிக்கும் நபர் யாராக இருக்க முடியும் என்பதை அவரவர் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளவும். *சுன்னாஹ்விற்கு உயிரூட்டுதல் என்பது, நாம் விரும்புகின்ற அம்சத்தில் மட்டும் இருத்தல் கூடாது. நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அனைத்திலும் இருக்க வேண்டும்.* அவ்வாறு செயல்படும் நபர்கள் தான், உண்மையில் சுன்னாஹ்வை பாதுகாப்பவர்கள். சுன்னாஹ்விற்கு உயிரூட்டுபவர்கள். எல்லாம் வல்ல இறைவன் அனைத்து காரியங்களிலும், நபியின் சுன்னாஹ்வை முதன்மைப்படுத்தி, நேசம் வைத்து, அதை செயல்படுத்தும் நபர்களாக நம்மை உருவாக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக முடிக்கிறேன்....!
*****