கேள்வி:

கேள்வி 56: மாற்று மதத்தினருக்கு நாம் பல நிலையிலும் ஓதக்கூடிய துஆவை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமா?

Answer by admin On July 12, 2020

பதில்:

தாராளமாக சொல்லிக் கொடுக்கலாம் பொதுவாக மாற்று மதத்தினர் விரும்பி கேட்பது அவர்களுக்கான நோய்களுக்காக பாதுகாப்பிற்காக, தூங்கும் முன்பும் மற்றும் தூங்கி எழுந்த பின்பும் ஓதக்கூடிய  துஆகளை கேட்டுக் கொண்டால் நாம் சொல்லிக் கொடுக்கலாம். 


ஏனென்றால், மார்க்கத்தில் மாற்று மதத்தினருக்கு அவர்களுக்கு ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டால், விஷ ஜந்துக்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாம் அவர்களுக்காக துஆ ஓதலாம் இச்செயல் நபியவர்களால் அனுமதிக்கப்பட்டது என்று  ஹதீஸ்களில் ஆதாரபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


நபி (ஸல்)அவர்கள் காலத்தில் வெளி ஊருக்கு சென்ற சஹாபாக்களிடம் காஃபிராக இருந்த ஒருவர் விஷ ஜந்துவால் பாதிக்கப்பட்ட போது சஹாபி சென்று அவர்களுக்கு துஆ ஓதி அதற்கான பிரதிபலனை பெற்றுள்ளதாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று சூரத்துல் ஃபாத்திஹாவை தான் ஓதினோம் என்று சொல்கிறார்கள் அதற்கு நபி இந்த பாத்திஹாவை ஓத வேண்டும் என்று உனக்கு எப்படி தெரியும் என்று சந்தோஷத்துடன் கேட்கிறார்கள்


ஆகையால் ஃபாத்திஹா சூராவை ஒருவர் கேட்டுக் கொண்டால் அவருடைய நன்மைக்காக ஓதலாம் என்று சொல்லும்போது அதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் செய்யலாம் என்று இத்தகைய பதிவின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. 


ஆனால் ஒருவர் அதன் மீது நம்பிக்கை இல்லாமல் ஓதும் போது முழுமையான பலன் கிடைக்குமா என்று சொல்ல முடியாது ஆகையால் ஒருவர் இறை நம்பிக்கையோடு  அல்லாஹ்வின் உதவியை நாடி வரும் பொழுது நாம் அவர்களுக்கு மார்க்கத்தின் கருத்தையும் சொல்லி மேலும் அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு இந்த துஆவை ஓதினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று சொல்லி அல்லாஹ்வின் மார்க்கத்தை அவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.


முக்கியமாக சூரத்துல் ஃபாத்திஹா என்பது ருகையா ஆகும், அது விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மற்றும் நோய்வாய்ப் பட்டவர்களுக்கும் ஓதிப் பார்க்கலாம் என்பதுதான் அதற்கான கருத்து, ஆகவே ருகையாவை எடுத்து சொல்லும் போது அதனுள் இருக்கும் வசனமான வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே என்ற  வசனங்களையும் நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. 


ஆகவே அல்லாஹ் ஒருவனைத்தான் நம்ப வேண்டும் அவனிடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்று இறை  நம்பிக்கை கொண்டு இந்த துஆவை ஓதினால் தான் நன்மை கிடைக்கும் என்று சொல்வதின் மூலமாக தவ்ஹீத் செய்தியையும் நாம் எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. 


மேலும் மாற்று மதத்தவருக்கு துஆக்களை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதற்கான நேரடியான தடையேதுமில்லை.


நன்மை இருப்பதினால் தாராளமாக நாம் ஓதக்கூடிய துஆக்களை அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம் மற்றும் அதனுடைய கருத்துக்களையும், பொருளையும் நாம் சொல்லிக் கொடுக்கலாம். 


அப்படி சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் இஸ்லாத்தின் மார்க்கத்தை அறிவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது மற்றும் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதால் நமக்கான கூலியும் கிடைக்கிறது.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 37, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.