ஆய்வுகள்

January 11, 2023

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6

மகத்தான வழிகாட்டிகள் - 6

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) ---2  

                கடந்த இதழில் இமாம் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் அவர்கள் கல்வி பயின்றது. ஆசிரியர் பணி செய்தது, அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்களை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

                வணக்கவழிபாடுகள் : இமாம் அவர்கள் ஃபர்லான வணக்கங்கள் தவிர்த்து உபரியான வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதிகமாகன நஃபில் நோன்புகள் நோற்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சாட்டையடி தண்டனை கொடுக்கப்பட்ட நாட்களில் கூட நஃபிலான நோன்புகள் வைத்திருப்பார்கள், பொதுவாக ஒரு வாரத்தில் ஒரு தடவை குர்ஆனை முழுமையாக ஒதி முடிப்பார்கள் என்றும் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றில் கூறப்படுகிறது .

                உலகப் பற்றின்மையும் பேனுதலும் : இமாம் அவர்கள் உலகப்பற்று இல்லாதவராகவும் உலகத்தை அனுபவிப்பதில் பேனுதல் உள்ளவராகவும் இருந்தார்கள். அவர்களுக்கிருந்த சிறு கடைகளின் வாடகையாக மிக சொற்பமான தொகை வந்தது. அது மட்டுமே அவர்களின் வருவாயாக இருந்தது .

                அவர்களின் தேவைக்கும் குடும்பத் தேவைக்கும் அது போதுமானதாக இருக்கவில்லை. சிரமத்துடனேயே வாழ்ந்தார்கள்.

                அதிக சிரமம் ஏற்படும்போது சில சாதாரண வேலைகள் செய்து வருவாய் ஈட்டுவார்கள்.

                இவ்வாறு சிரமத்துடன் தமது வாழ்க்கையை ஒட்டினாலும் அவர்களை தேடி வரும் உதவித்தொகை மற்றும் சன்மானங்களை விரும்ப மாட்டார்கள். குறிப்பாக கலீஃபாக்களிடமிருந்து வரும் சன்மானங்களை ஏற்க மாட்டார்கள்.

                இமாம் அவர்களின் இறுதி காலத்தில் கலீபா முத்தவக்கில் தனது நெருக்கமான அதிகாரி யஅகூப் என்பவர் வழியாக இமாமவர்களுக்கு பத்தாயிரம் திர்ஹம்கள் வழங்கினார். வாங்க மாட்டேன் என்று கூற முடியாததால் அவற்றை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்த முழுத்தொகையையும் முஹாஜிர் மற்றும் அன்சாரி நபித்தோழர்களின் சந்ததிகளுக்கும் மற்ற தேவையுள்ள மக்களுக்கும் ஒரே நாளில் பிரித்து வழங்கி விட்டார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இமாம் அவர்களின் தூய பண்புக்கு ஆதாரங்களாக உள்ளன.

                வளமான கல்வி : இமாமவர்கள் மிகச் சிறந்த கல்விமானாக திகழ்ந்தார்கள். அவர்கள் ஆசிரியர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் வாலிபராக இருந்து நாட்களிலேயே ஹதீஸ்களையில் அவர்களுக்கிருந்த திறன் மூலம் இஸ்லாமிய உலகின் பல பாகங்களிலும் பிரபலமாகியிருந்தார்கள்.

                இமாம் அஹ்மதின் ஆசிரியரான அமாம் ஷாஃபிஈ அவர்கள் ஒரு முறை இமாம் அஹ்மதை நோக்கி, "எம்மை விட ஆதாரம் பூர்வமான ஹதீஸ்கள் குறித்து நன்கறிந்தவராக இருக்கின்றீர். ஒரு ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதாக இருந்தால் அது குறித்து எனக்கு அறிவுறுத்துவீராக, நானும் அதனை எடுத்துக்கொள்வேன்'' என்று கூறினார்கள்.

                இமாம் அஹ்மத் அவர்களின் சமகால அறிஞரான அபூ ஸுர்ஆ அவர்களிடம், நீங்கள் பார்த்த மார்க்கப் பெரியோர்களிலும் ஹதீஸ் அறிஞர்களிலும் அதிக மனன சக்தி கொண்டவர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கவர்கள், "அஹ்மத் பின் ஹன்பல்'' என்று பதிலனித்தார்கள்.

                இவ்வாறு கல்வியிலும் ஹதீஸ்கலைக்கு மிக முக்கியமான மனன சக்தியிலும் மிக உயர்ந்த நிலையை அடைந்தவராக இமாமவர்கள் இருந்தார்கள்.

                பொறுமைசாலி : இமாமாவர்கள் பொறுமை மற்றும் நிலை குலையாமை ஆகிய நற்பண்புகளை நிறைவாக கொண்டிருந்தார்கள். எந்த சிரமங்களையும் தாங்கிக் கொண்டு நிதானத்துடன் இருக்கும் அவர்களின் உயர் தன்மைதான் அவர்கள் மக்களுக்கு மத்தியில் பிரபலமாவதற்கு காரணமாக அமைந்தது

                மார்க்கத்தில் தவறான கருத்தை கூற வேண்டுமென்று வற்புறுத்தி அதிகார வர்க்கத்தினர் இமாம் அவர்களை தொடர்ச்சியாக அடித்துத் துன்புறுத்தினார்கள். துன்புறுத்தியவர்கள் தான் சோர்ந்து போனார்கள். நிலைக்குலையாமல் நிதானத்துடன் இருந்தார்கள்.

                எத்தனை பெரிய கொடுமையான சூல்நிலையிலும் நடுக்கமோ பதட்டமோ இல்லமால் நிதானத்துடன் இருப்பார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்த ஒரு நிகழ்வு  அதிகார வர்க்கத்தினர் இமாமவர்களையும் வேறு சிலரையும் தவறான கருத்தை ஏற்கும்படி துன்புறுத்திக் கொண்டிருக்கையில் இமாமவர்களின் முன்னிலையிலேயே இரண்டு பேரை கழுத்தை வெட்டி கொலை செய்தார்கள். திகில் நிறைந்த இந்த சூழலில் இமாமவர்களின் பார்வை அங்கு ஒரு பகுதியிலிருந்த இமாம் ஷாஃபிஈ அவர்களின் மாணவர்களில் ஒருவர் மீது பட்டது. உடனே இமாமவர்கள் அவரிடம், "காலுறை மீது மஸ்ஹு செய்வது தொடர்பாக இமாம் ஷாஃபிஈ அவர்களிடமிருந்து எந்த விஷயத்தை நீங்கள் மனனம் செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

                இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இமாமவர்கள் சலனமுமின்றி மார்க்கச் சட்ட ஆதாரம் பற்றி பேசியது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

                இப்படி எந்த சூழ்நிலையிலும் நிதானமும் பொறுமையும் கொண்டவர்களாக இமாம் அஹ்மத் இருந்தார்கள், அத்துடன் பணிவு வறுமையிலும் வள்ளல் தன்மை, பெருந்தன்மை உள்ளிட்ட உயர் கொண்டவராகவும் வாழ்ந்தார்கள்.

                இறப்பு : மார்க்கக் கல்வியை பரப்புவதற்காகவும் சத்தியத்தை நிலை நாட்டுவதற்காகவும் தன். வாழ்நாளை அர்ப்பணித்த இமாம் அவர்கள், ஹிஜ்ரி 241 ஆம் வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் துவக்கத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். அதே மாதத்தின் பன்னிரெண்டாம் நாளில் மரணமடைந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.

                முஸ்னது அஹ்மத் : இமாம் அஹ்மத் அவர்கள் தொகுத்த முஸ்னது அஹ்மத் என்ற இந்த நூல் ஹதீஸ் மூல ஆதார நூல்களில் முக்கியமான ஒன்றாகும். இது இருபத்தி ஏழாயிரத்துக்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது.

                 இது மட்டுமின்றி ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சில நூல்களும் மார்க்கத்தின் சரியான நம்பிக்கையை விளக்கும் சில நூல்களும் இமாமவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய மார்க்கச் சட்டங்கள் அன்னாரின் மாணவர்கள் சிலரால் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

                அறிஞர்களின் பாராட்டு : இமாம் அஹ்மத் அவர்கள் குறித்து முற்கால அறிஞர்கள் பலரும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். இமாம் ஷாஃபியீ அவர்கள் கூறியதாவது : "நான் பக்தாதிலிருந்து புறப்பட்டு வந்தேன். அங்கே அஹ்மத் பின் ஹன்பலை விட மிகுந்த பேணுதலும், மிகுந்த இறையச்சமும். மிகுந்த மார்க்க அறிவும் கொண்ட எவரும் இல்லை''.

                இமாமவர்களின் நண்பராகவும் சமகாலத்தவராகவும் இருந்த அல்காசிம் பின் சலாம் அவர்கள் கூறியதாவது : கல்வி என்பது நான்கு பேரிடம் நிறைவடைகிறது. அவர்கள் அஹ்மத் பின் ஹன்பல், அலிபின் அல்மதீனி யஹ்யா பின் மயீன், அபூ பக்ர் பின் ஷைபா ஆகியோராவர், இவர்களில் அஹ்மத் அவர்கள் தான் மார்க்கச் சட்டங்களை மிக நன்கறிந்தவர்.

                சுன்னாவை குறித்து அஹ்மத் விட நன்கறிந்த எவரையும் நான் பார்த்ததில்லை என்றும் இந்த அல்காசிம் கூறியிருக்கிறார்.

                இந்தத் தொடரில் நான்கு பெரும் இமாம்களின் வரலாற்றை சுருக்கமாக பார்த்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்கி அருள் புரிவானாக ! முற்றும்.

 

Admin
585 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions