ஆய்வுகள்
November 16, 2024
கடக்கும் ஏமாற்றம்... நடக்கும் மாற்றம்...!!
கடக்கும் ஏமாற்றம்... நடக்கும் மாற்றம்...!! அம்ரு பின் தாவூது - வேதாளை ---------------------------------------------------- உளவியல் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். இறைவன் உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகின்றார். அதாவது, உங்கள் கடந்தகால வாழ்வில் நிகழ்ந்த எதிர்மறையான மற்றும் மாற்ற விரும்புகின்ற செயல்களை மாற்றுவதற்கு, ஒரு நிபந்தனையற்ற வாய்ப்பை இறைவன் தருகின்றார் எனில், நீங்கள் எவற்றை மாற்ற விருப்பம் தெரிவிப்பீர்கள்..? அந்த ஆசிரியர் இன்னும் கூடுதலாக தன்னுடைய கேள்வியை விளக்கிக் கூறலானார். குறிப்பாக, "நான் இந்தச் செயலை அன்று செய்யாமல் இருந்திருந்தால், இன்று என் நிலையே வேறு!" அல்லது "நான் அன்று இந்தக் காரியத்தைச் செய்திருந்தால், இன்றைக்கு இவ்வளவு நிற்கதியான சூழல் ஏற்பட்டிருக்காது!" இதைச் செவிமடுத்த மாணவர்களுள் ஒரு பிரிவினர் தமது வாழ்வில் நடந்த கசப்பான மற்றும் தவறிழைத்ததாக கருதுகின்ற அனுபவங்களை வெளிப்படையாக கூறுபவர்களாகவும், பிறிதொரு பிரிவினர் பழைய கடந்தகால விடயங்களைப் பேசுவதால் அல்லது அதைத் தற்போது மாற்ற விரும்புவதால் தங்களுடைய வாழ்வில் என்ன மாற்றங்கள் நிகழப்போகின்றது? என்றும் கூறினர். முதல் பிரிவு மாணவர்களில் ஒரு மாணவர், நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே கணினி பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்திருந்தால், இன்று கணினி சார்ந்த வேலைகளை மிகவும் நன்றாகக் கையாண்டிருப்பேன். என்றார். மற்றொரு மாணவர், நான் என் தந்தையின் சொல்கேட்டு உளவியல் துறையில் சேராமல், நான் பெரிதும் விரும்பிய வேளாண்மை துறையில் சேர்ந்திருந்தால், நான் இயற்கை வேளாண்மையில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றிருப்பேன். மற்றொரு மாணவர், நான் ஏழாவது படிக்கும் போது எனக்கொரு விபத்து ஏற்பட்டு, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 மாதங்கள் படுக்கையிலிருந்தேன். இதன் காரணமாக, என் ஒருவருட படிப்பு தடைபட்டது. அது நிகழாமல் இருந்திருந்தால், என் வாழ்வில் நானிழந்த காலங்களை மீண்டும் பெற்று புத்துணர்ச்சி பெற்றிருப்பேன் என்று கூறினார். இவ்வாறு ஒவ்வொரு மாணவரும் தத்தமது கதைகளைக் கூறினர். பிறகு மற்றொரு பிரிவு மாணவர்களிடம் ஆசிரியர், பழைய மற்றும் கடந்தகால விடயங்களைப் பற்றி பேசுவதாலோ அல்லது அவற்றை மாற்றுவதாலோ எந்த பயனுமில்லைதான். ஆனால், உங்களுக்கு இவ்வாறு ஓர் இறைவனின் நல்வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? நீங்கள் உங்களுடைய கடந்தகால அனுபவங்களை என்னிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் குறித்து தற்போதும் அங்கலாய்ப்பது அல்லது வெறுமை கொள்ளும் நிலைமை உங்களிடம் உள்ளதா? என்பதே என் கேள்வி, என்று ஆசிரியர் சொன்னதும் இந்தப் பிரிவினரும் அதை அங்கீகரிக்கும் முகமாக, தங்களது தலைகளை அசைத்தனர். ஆக, இத்தரப்பு மாணாக்கர்களும் ஆசிரியரின் கேள்வி மற்றும் எண்ண ஓட்ட அலைவரிசையில் ஒன்று சேர்ந்தனர். பிறகு, ஆசிரியர் பேச ஆரம்பித்தார். இதைக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் என்னுடைய விடையானது கீழ்க்கண்டவாறு அமையும். அதாவது, என்னுடைய கடந்தகால வாழ்வில் நிகழ்ந்த துக்கமான, துயரமான, எதிர்மறையான விடயங்களை மாற்றுமாறு ஒருபோதும் நான் கோரமாட்டேன். ஏனெனில், நான் இன்றைய தினத்தில் அடைந்திருக்கும் நன்மைக்கும் வெற்றிக்கும் அவையே வழிச்சாதனங்களாகும். அவற்றை என் வாழ்வில் இறைவன் நிகழ்த்தியது பெரும் பேறாகவே எண்ணுகின்றேன். அந்த எதிர்மறையான நிகழ்வுகள் அன்று எனக்கு நடக்காமல் இருந்திருந்தால், நான் சிறப்பான வளர்ச்சியை என் வாழ்வில் பெற்றிருப்பேன் என்று உங்களில் பலர் கூறினர். அவ்வாறன்று! நீங்கள் பெற்றிருக்கும் இந்த நிலைமைக்கு அந்த எதிர்மறை நிகழ்வுகளும் ஒரு காரணம் என்பதை மறவாதீர்கள்! இதற்கு வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கூறினால், உங்களுக்கு நன்கு விளங்கும்! எடுத்துக்காட்டு - 01: நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் வரலாறு! நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் வரலாற்றில் பல எதிர்மறையான சம்பவங்களை நம்மால் பட்டியலிட முடியும். அவற்றில், சகோதரர்களின் பொறாமை மற்றும் சூழ்ச்சியால் கிணற்றில் இறக்கிவிடுதல், அமைச்சரின் மனைவி மூலமாக ஏற்பட்ட சோதனை மற்றும் சிறைவாச வாழ்க்கை!நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவருடைய வரலாற்றை படிக்கும்போது, நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் எவ்வளவு துக்கங்களையும் துயரங்களையும் கடினங்களையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார் என்று நமக்கு வியப்பாக உள்ளது; கவலையும் மேலெழும்புகின்றது. ஆனால், நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதும் அவருக்கு உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கிய அரசாட்சி என்பது அவர் இத்தனை ஆண்டுகாலம் பட்ட துயரங்களின் விளைவே ஆகும். எடுத்துக்காட்டு - 02: நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் வரலாறு: நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாக நாம் எண்ணிக் கொண்டிருக்கின்ற, மனிதர் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் இருக்கிறது. ஆனால், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவருக்கு அச்சம்பவம்தான் அவருடைய வாழ்க்கையின் ஏற்றங்களுக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. காரணம், அந்தக் கொலை சம்பவத்திற்குப் பிறகே, நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் திருமணம் செய்தார்கள்; வேலை கிடைத்தது; ஒரு நபி (ஷுஐப்) உடனான தொடர்பும் உறவும் கிடைத்தது! உயர்ந்தோன் அல்லாஹ் உடனான பேசும் வாய்ப்பும் நபித்துவமும் கிடைத்தது. இவ்வாறு நாம் பல வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம். இருப்பினும் இவற்றில் வெளிப்படும் பாடங்களை நாம் அறிவது அவசியமாகும். ஏனெனில், நபி யூசுஃப் அவர்களும் சரி, நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் சரி, தம்முடைய வாழ்வில் நிகழ்ந்த எந்தவோர் எதிர்மறையான சம்பவங்களையும் அல்லாஹ்வின் மீதான குறையாக ஒருபோதும் எண்ணியதே இல்லை. மாறாக, அவையாவும் தங்கள் வாழ்க்கையில் அல்லாஹ்வால் திட்டமிட்டு நடத்தப்பட்ட அவனுடைய சட்டம் என்று நன்றாகவும் ஆழமாகவும் உறுதியாகவும் நம்பியிருந்தார்கள். இந்த எண்ண ஓட்டமே அவர்களுடைய கடந்தகால எதிர்மறையான கசப்பான நிகழ்வுகளை நேர்மையாகவும் இனிமையாகவும் எடுக்க உதவி செய்தது என்று ஆசிரியர் கூறி தன்னுடைய விளக்கத்தை நிறுத்தினார். இதைச் செவிமடுத்த மாணவர்கள் அனைவருடைய உள்ளமும் தெளிவும் புத்துணர்ச்சியும் அடைந்தன. மேலும், தங்களை இவ்வளவு நாள்களாகப் பீடித்திருந்த மனநோய்கள் யாவும் அகன்ற, பாரங்கள் நீங்கிய ஒரு மாற்றத்தை அவர்களின் முகங்கள் (மகிழ்ச்சியால்) வெளிப்படுத்தின. "கடந்தகால வாழ்க்கையில் நடந்தவற்றை எண்ணி எண்ணி கவலைக் கொள்வதோ அல்லது அவற்றின் துயரங்களை மறந்ததுபோல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதோ ஓர் ஆக்கப்பூர்வமான நேர்மறை சிந்தனையுடைய நன்றியுணர்வு உடைய மனிதனின் மனப்பான்மையில்லை" என்பதை ஆழமாகப் புரிந்து, உறுதியாக நம்பிக்கைக் கொண்டனர். இன்னும், கடந்தகால கசப்பான நிகழ்வுகளை மறைமுகமாக நினைவில் நிறுத்தி வாழ்வதும் இறைச் செயலின் மீதான கெட்டெண்ணமே என்பதையும் உணர்ந்தனர்; வருந்தினர்; தெளிர்ச்சியடைந்தனர். கடந்தகால ஏமாற்றங்களை மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்த நாம், அவை யாவும் தற்போது நடக்கும் மாற்றங்களுக்கான தூண்டுகோலும் காரணமுமாகும் என்பதை அறிந்து, படைத்த இறைவனின் மீது என்றும் என்றென்றும் நல்லெண்ணம் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நோக்கத்தின் ஊக்கம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆக்கப்பூர்வமான மனிதனாக வாழ இக்கட்டுரையைப் படிக்கும் நம் ஒவ்வொருவரையும் வல்ல இறைவன் மாற்றுவானாக! இறுதியாக, நான் தற்போது கூறப்போகும் வாக்கியங்களை வாயைத் திறந்து மூன்று முறை சப்தமாகக் கூறவும். இவை உங்கள் வாழ்க்கையில் அனுதினமும் ஒலிக்க வேண்டிய மாற்றத்திற்கான ஏற்றச் சொற்களாகும். கூறுங்கள்...! என் வாழ்க்கையில், இதுவரைக்கும் இறைவன் எனக்கு நல்லதையே நாடியுள்ளான்! இனிமேலும் நல்லதைத் தான் நாடுவான்! (இன் ஷா அல்லாஹ்!)
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.