அகீதா
November 16, 2024
பாசத்திற்குரிய ரஹ்மானும், நஷ்டத்திற்குரிய அடியானும்
பாசத்திற்குரிய ரஹ்மானும், நஷ்டத்திற்குரிய அடியானும் அல்லாஹ்வின் அன்பும் அக்கறையும் நம்மை படைத்த இறைவன் நம்மீது மிகவும் பிரியமானவன்; அன்பானவன்; அக்கறையானவன். அவனைப் போன்ற ஒரு அன்பை, இறக்கத்தை இவ்வுலகில் யாரும் நம்மீது வைத்து விட முடியாது. உலகில் எதுவெல்லாம் மிகப் பெரிய அன்பின் உறவாக, அக்கறையின் உறவாக பார்க்கப்படுகிறதோ அந்த உறவுகளின் அன்புகள் எல்லாம் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்புக்கு முன் ஒன்றுமில்லை. உலகில் நெருங்கிய உறவுகள் தங்களுக்கு மத்தியில் வைத்திருக்கும் பாச நேசத்தை விட அதிகமான பாசத்தையும் நேசத்தையும் அல்லாஹ் அடியார்கள் மீது வைத்திருக்கிறான். அல்லாஹ் நமக்கு என்றென்றும் இலகுவை மட்டுமே நாடுகின்றான். நாம் கஷ்டப்படுவதை, சிரமப்படுவதை அவன் விரும்புவதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (அல்குர்ஆன் 2:185) ஆகவேதான், அல்லாஹ் நமக்கு மிகவும் இலகுவான, சிரமமில்லாத, எல்லோராலும் பின்பற்றுவதற்கு தகுதியான ஒரு மார்க்கத்தை தந்திருக்கிறான். மார்க்கம் என்பதே இலகுவானது தான். மார்க்க அமல்களை செய்வது என்பதும் லேசானது தான். ஆக, மார்க்க அமல்களை, நல்லறங்களை நாம் செய்யும்போது அதற்கான கூலிகளை அல்லாஹு தஆலா அதிகப்படுத்தி, மிகைப்படுத்தி, பன்மடங்காக்கி, இரட்டிப்பாக்கி அள்ளித் தருகிறான். சிறிய அமலுக்கும் பெரிய நன்மையைத் தருகிறான். சிறிய வார்த்தையை கூறுவதற்கும் மகத்தான வெகுமதிகளை வாரி வழங்குகிறான். வாருங்கள்! அந்த பேரருளாளனின் பேரருள் பற்றி வரக்கூடிய ஒரு சில செய்திகளை நினைவு கூறுவோம்! நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். இன்னும், (அவர்கள் செய்தது) நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். இன்னும், தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான். (அல்குர்ஆன் 4:40) அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2:261) அழகிய கடனாக அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? (அல்லாஹ்) அவருக்கு அதைப் பல மடங்குகளாக பெருக்கித் தருவான். (அல்குர்ஆன் 2:245) ஒன்னுக்கு பத்தும் ஒன்னுக்கு ஒன்னும் இப்படி அல்லாஹு தஆலா நாம் செய்யக்கூடிய நல்லறங்களை ஏற்று, அதை பன்மடங்காக பெருக்கி, நமக்காக அதை சேமித்து வைக்கிறான். நாம் செய்யக்கூடிய நல்லமலின் கூலி ஒன்றாக இருந்தாலும் அதை அந்த பேரருளாளன் பேரன்பாளன் ஒன்றிலிருந்து பத்து வரையும், பத்திலிருந்து ஏழுநூறு மடங்கு வரையிலும், இன்னும் அதிகமான அளவுக்கு அமல் செய்பவரின் நன்மையை பெருக்கிக் கொடுக்கிறான். அதுமட்டுமல்ல, நாம் ஒரு நல்லமலை செய்ய நாடுகிறோம் இன்னும் அதை செய்யவில்லை என்றால் கூட நாம் நாடிய அந்த நாட்டத்திற்கும் ரப்புல் ஆலமீன் நன்மையை பதிவு செய்கிறான். ஆனால், தீமையைப் பொருத்த வரை அப்படி அல்ல. எத்தனை தீமை செய்தோமோ அந்த அளவு மட்டும்தான் தீமை பதிவு செய்யப்படும். தீமையை நாடினால் கூட தீமை பதிவு செய்யப்படாது. தீமையை நாடி இறையச்சத்தின் காரணமாக அதை கைவிட்டு விட்டால் அதற்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். தீமைகளுக்கு இரட்டிப்பான புள்ளிகள் பதிவு செய்யப்படாது. அதுமட்டுமல்ல, தீமை செய்த உடனே மனம் வருந்தி, இறைமன்னிப்பின் பக்கம் திரும்பினால் நாம் செய்த பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, தீமை செய்த பிறகு உடனே நல்லமல்களின் பக்கம் விரைந்தால் நாம் செய்த நல்லமல்கள் ஏற்கனவே நாம் செய்த பாவங்களையும் போக்கி விடும். ஸுப்ஹானல்லாஹ்! ஸுப்ஹானல்லாஹ்! ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்! (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே -அதைச் செயல்படுத்தாவிட்டாலும்- அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். (புகாரி – 6491) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன். யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன். (முஸ்லிம்-5215) பாவங்கள் நன்மைகளாக!, நன்மைகள் சேமிப்பாக! பாவம் செய்வது மனித இயல்பு. பாவம் செய்யும் பண்புடையவனாகத்தான் இறைவன் மனிதனை படைத்திருக்கிறான். ஆக, அந்த பாவம் செய்த பிறகு யார் இறைவனை பயந்து, பாவத்தை கைவிட்டுவிட்டு, இறைமன்னிப்பின் பக்கமும் தனது ஆன்மாவை பரிசுத்தப்படுத்துவதின் பக்கமும் விரைந்து வருகிறோனோ அவன் செய்த எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். மன்னிப்பதோடு மட்டுமல்ல அவன் செய்த அந்த தவ்பாவின் காரணமாக அதை நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹு அக்பர்! இன்னும், (நபியே!) பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவு கூர்பவர்களுக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்ஆன் 11:114) எனினும், எவர்கள் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, நம்பிக்கைக் கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 25:70) நபி (ஸல்) அவர்கள் அபூ தர் ரழி அவர்களுக்கு கூறினார்கள்: நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! இன்னும் நீ ஒரு தீமை செய்தால் அதைத் தொடர்ந்து அந்தத் தீமையை அழிக்கக் கூடிய ஒரு நன்மையை செய்து கொள்! இன்னும், மக்களுடன் நற்குணத்துடன் பழகு! (திர்மிதி – 1987) இப்படி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் செய்த பாவங்களை நமது தவ்பாவின் மூலமும் நல்லமல்களின் மூலமும் அவற்றைப் போக்கி அதை நன்மைகளாக மாற்றுகிறான். அதே நேரத்தில், நாம் செய்த நன்மைகளை அவன் அழிக்க மாட்டான். அவற்றை வீணடிக்க மாட்டான். இணைவைப்பு என்கிற கொடிய பாவத்தில் ஈடுபாடாதவரை. அது அல்லாமல் பொதுவாக அல்லாஹ் நமது நல்லறங்களை, நல்லமல்களின் கூலிகளை வீணடிக்க மாட்டேன் என்றும் அவற்றை பாதுகாத்து வைத்திருக்கிறேன் என்றும் நமக்கு வாக்களிக்கின்றான். நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ, - (இவ்வாறு) மிக அழகிய செயலை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம். (அல்குர்ஆன் 18:30) அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்படும் கிருபையினாலும், அருளினாலும், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் கூலியை வீணாக்க மாட்டான்’’ என்பதினாலும் அவர்கள் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 3:171) இன்னும், பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான். (அல்குர்ஆன் 11:115) அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அடியார்களே! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அது அல்லாததைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்! (முஸ்லிம் – 5033) நன்மைகளை நாசமாக்கும் இணைவைப்பு இதுவைரை, நாம் செய்யக்கூடிய நல்லமல்களுக்கு ரஹ்மான் கொடுக்கக்கூடிய கூலி பற்றியும், அது, ஒன்றிலிருந்து பத்து வரை, பத்திலிருந்து ஏழுநூறு மடங்குவரை, அதிலிருந்து இன்னும் அதிகமான மடங்குகள் வரை கூலிகள் பன்மடங்காக்கிக் கொடுக்கப்படுவதைப் பற்றியும், நாம் செய்த பாவங்கள் நல்லமல்களின் மூலம் மன்னிக்கப்பட்டு, நன்மைகளாக மாற்றப்படுவதைப் பற்றியும் பார்த்தோம். அதுபோன்று, நாம் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, நேரம் ஒதுக்கி இறைதிருப்தியை மட்டும் நாடி செய்யக்கூடிய நல்லமல்களை, பொருளாதார வணக்கங்களை ரப்புல் ஆலமீன் வீணடிக்காமல் அதை தனது அடியார்களுக்காக பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதைப் பற்றியும் பார்த்தோம். இப்படியெல்லாம் நம்மீது மிகப்பெரிய பாசமும், பரிவும், அக்கறையும், அன்பும் கொண்ட நமது ரப்பு, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் சமரசம் செய்ய மாட்டான். அதிலே பாவப் பரிகாரம் பார்க்க மாட்டான். அதிலே தயவுதாட்சண்யம் காட்ட மாட்டான். அது என்ன விஷயம்? என்று கேட்டால் அதுதான், அவனுடைய ஹக்கில் - உரிமையில் செய்யப்படக் கூடிய அநீதி ஆகும். அதாவது, அவனுடைய அதிகாரத்தில், ஆற்றலில், கடவுள் தன்மையில் அவனுக்கு இணையாக, கூட்டாக ஒருவரை அல்லது ஒன்றை கொண்டு வருவது. இதை அந்த ரப்பு பொறுத்துக் கொள்ளவே மாட்டான். அதை ஜீரணிக்கவே மாட்டான். அவன் மலையளவு, கடலளவு, வானம் பூமியின் இடைவெளி அளவு பாவம் செய்து வந்திருந்தாலும், ஷிர்க் என்கிற பெரும் அநீதத்தை செய்யாமல் மறுமையில் வந்தால் அவன் கொண்டு அந்த பாவங்களின் அளவுக்கு ஏற்ப அல்லாஹ்வின் மன்னிப்பை அவன் கண்டு கொள்வான். அதுபோன்று, அவன் மலையளவு, கடலளவு, வானம் பூமியின் இடைவெளி அளவு நன்மைகள் செய்திருந்து ஷிர்க் என்கிற இந்த ஒற்றைப் பாவத்தை மட்டும் செய்து விட்டு மறுமை நாளில் வந்தால் அவன் செய்த அத்தனை நல்லமல்களையும் அல்லாஹ் அழித்து விடுவான். அதற்கு எந்த எடையும் இருக்காது. அது, தராசுத் தட்டில் நிறுவையில் நிறுக்கப்படாது. மாறாக, அவற்றை அல்லாஹ் புழுதியாக, தூசியாக ஆக்கிவிடுவான். அது எவ்வளவு பெரிய வணக்கமாக இருந்தாலும் சரி, தொழுகையாக இருந்தாலும், பசித்திருந்து தாகித்திருந்து வைத்த நோன்பாக இருந்தாலும், பல ஆயிரங்கள், பல இலட்சங்கள் செலவு செய்து செய்த ஹஜ்ஜாக இருந்தாலும், ஸகாத்தாக இருந்தாலும், ஸதகாவாக இருந்தாலும் சரிதான். அதுமட்டுமல்ல, எந்த சொர்க்கத்தைப் பெறுவதற்காக அந்த நல்லமல்களை அவன் செய்தானோ அது தவறிப்போய் அவன் செய்த அந்த இணைவைப்பு என்கிற ஒரு பாவத்தால் இறுதியில் அவன் நரகத்தை சந்திப்பான். அல்லாஹ் பாதுகாப்பானாக! அவ்வளவு பெரிய கடுமையான, அழுத்தமான எச்சரிக்கையை நம்முடைய மார்க்கம் இணைவைப்பு விஷயத்தில் கூறுகிறது. வாருங்கள்! ஷிர்க் குறித்து குர்ஆன் கூறக்கூடிய ஒரு சில எச்சரிக்கைகளை பார்வையிடுவோம். நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும். (அல்குர்ஆன் 31:13) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அதைத் தவிர மற்றதை அவன், தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணையை ஏற்படுத்துவாரோ அவர் திட்டமாக (அல்லாஹ்வின் மீது) பெரும் பாவத்தை இட்டுக் கட்டிவிட்டார். (அல்குர்ஆன் 4:48) திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.” (அல்குர்ஆன் 39:65) இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி நடத்துகிறான். இன்னும், அவர்கள் (-மேற்கூறப்பட்ட நபிமார்கள்) இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88) “நிச்சயமாக அல்லாஹ் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: “இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை. (அல்குர்ஆன் 5:72) அல்லாஹ்வே! நல்லமல்கள் செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பளிப்பாயாக! எங்களுடைய அமல்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! அவற்றை நீ பாதுகாத்து வைப்பாயாக! இக்லாஸுடன் கூடிய நல்லமல்களுக்கு அருள் புரிவாயாக! சிறிய இணைவைப்பான முகஸ்துதியை விட்டும் எங்கள் அமல்களை பாதுகாப்பாயாக! ஷிர்க் என்கிற மிகப் பெரிய அநீதத்தை விட்டும், அமல்களை அரிக்கக்கூடிய அந்த கரையானை விட்டும் எங்களை தூரமாக்கி வைப்பாயாக! ஈமான் இஸ்லாமுடன் வாழ்ந்து அதனுடனே மரணிப்பதற்கும், அதே நிலையிலே மறுமையில் உன்னை வந்து சந்திப்பதற்கும் எங்களுக்கு நல்லருள் புரிவாயாக! ஆமீன்! இமாமுத்தீன் ஹஸனீ MA
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.