ஆய்வுகள்
November 16, 2024
அநீதம் செய்யாதீர்கள்
அநீதம் செய்யாதீர்கள் எல்லாப் புகழும், புகழ்ச்சியும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவனது சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்! இஸ்லாத்தை பொறுத்த வரை மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் தெளிவாக சொல்லி தந்துள்ளது. எப்படி செயல் படவேண்டும், எப்படி செயல் படகூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்று பல விஷயங்களை கற்றுதந்துள்ளது. ஒரு முஸ்லிம் எப்பொழுதும் பிற மனிதர்களுக்கு நலவு நாடக்கூடியவனாக இருக்க வேண்டுமே தவிர பிற மனிதர்களுக்கு எந்த விதத்திலும் அநியாயம் செய்யக்கூடாது. தனது உறுப்புகளால் அல்லது அவரது ஏதேனும் பொருளை அபகரித்தலாலும் அநியாயம் செய்யக்கூடாது. ஹதீஸே குதுஸி ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான் ; என் அடியார்களே அநீதத்தை என் மீது நான் தடை செய்து விட்டேன். உங்களிடையேயும் அதை நான் தடுத்திருக்கிறேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதம் செய்யாதீர்கள். (முஸ்லிம்:2577) அநீதம் செய்தால் அல்லாஹ்வின் அருளை விட்டும் அவன் தூரமாகிவிடுவதுடன் பல விதமான தண்டனைகளுக்கும் அவன் ஆளாகிவிடுகின்றான். மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).(25:19) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி 2447) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயம் செய்வதை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயம் கியாமத் நாளின் இருள்களாக இருக்கும். பிறரின் நிலத்தை அபகரித்தவரின் நிலை: அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் அடுத்தவர் பூமியில் ஒரு சான் அளவு அநியாயமாகப் பறித்து தம் பூமியுடன் சேர்த்துக் கொள்கிறாரோ, அவருக்கு, கியாமத் நாளில் ஏழு நிலங்கள் (சுமையான) மாலையாக அணிவிக்கப்படும். (நூல்: புகாரி முஸ்லிம்) அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை அஞ்சிக்கொள்: .இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அநீதத்தை இஸ்லாம் மூன்று வகையாக பிரிக்கிறது. 1, மனிதன் தன்னை படைத்த இறைவனுக்குச் செய்கின்ற அநீதம்: “யார் ஈமான் கொண்டு பின்பு தங்கள் ஈமானை அநீதத்தைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ அவர்களுக்கே பாதுகாப்பு உண்டு. மேலும் அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்” என்ற (6: 82) இறைவசனம் இறங்கிய போது ஸஹாபாக்களுக்கு அது கவலையை ஏற்படுத்தியது. எங்களில் யார் தான் தனக்கு அநீதம் செய்யாமல் இருக்கிறார்? (அதாவது எங்களில் யார் தான் பாவம் புரியாமல் இருக்கிறார்? இந்த வசனத்தின் படி எங்களில் யாருமே நேர்வழி பெற்றவர்கள் இல்லையா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டு நபியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்கள்) அதற்கு நபி ﷺ அவர்கள் இந்த வசனத்தில் நீங்கள் நினைப்பதைப் போன்ற அநீதத்தை அல்லாஹ் கூற வில்லை. நிச்சயமாக இணை வைத்தல் பெரும் அநீதமாகும் என்று லுக்மான் அலை அவர்கள் தன் மகனைப் பார்த்துக் கூறிய இணை வைப்பைத்தான் குறிப்பிடுகிறான் என்றார்கள். (முஸ்லிம்: 124) 2. மனிதன் தனக்குத் தானே அநீதி செய்து கொள்வது: அதாவது இறைவன் வகுத்த கட்டளைக்கு மாறு செய்வது, அல்லாஹ் தடுத்த பாவகரமான காரியங்களில் ஈடுபடுவது, இதன் மூலமாக இறை கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகிவிடுகின்றான். அந்த அடிப்படையில் தான் தனக்கு தானே அநீதம் செய்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது. “இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்;” 65:11 பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநீதம்: பிற மனிதர்களின் உரிமையை பறிப்பது,. அவர்களின் மான மரியாதைகளில் விளையாடுவது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, குறிப்பாக அநாதைகளின் பொருட்களில் அத்து மீறுவது பிற மனிதர்களின் நிலங்களை கைப்பற்றுவது, தனது மேல் அதிகாரிகளுக்கு விசுவாசம் இல்லாமல் நடந்து கொள்வது, தன்னிடம் பணிபுரியம் பணியாளர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் மோசடி செய்வது, இப்படி மற்றவரின் உரிமைகளில் தலையிட்டு அநீதம் செய்வது அனைத்தும் அடங்கும். பிறரின் உரிமைகளைப் பறித்திருந்தால் மரணத்திற்கு முன்னே பரிகாரம் தேடவேண்டும்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி 2449) இறைத்தூதர் அவர்கள் யாருக்கும் அநீதம் செய்து விடக்கூடாது, யாரின் உரிமையையும் பறித்து விடக்கூடாது என்பதில் அதிக கவனத்தை எடுத்துக் கொண்டார்கள். பத்ர் பயணத்தின் போது ஒட்டகங்கள் குறைவாக இருந்ததினால் மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று பிரித்து கொடுக்கப்பட்டது.மூவரும் முறை வைத்து அதில் பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் அபூலுபாபா ரலி, அலி ரலி, நபி ﷺ அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.இருவர் ஒட்டகத்தின் மீது அமர வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்த வேண்டும். இது தான் முறை. ஆனால் அந்த இரு ஸஹாபாக்களும் யாரசூலல்லாஹ்! நீங்கள் இறங்க வேண்டாம். நாங்கள் இருவர் மட்டும் மாறி மாறி இறங்கிக கொள்கிறோம் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட நபி ﷺ அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட பலசாலிகள் அல்ல.மேலும் நன்மையைப் பெறுவதில் நான் தேவையற்றவனும் அல்ல என்று கூறினார்கள்.பத்ருடையபோர்க்கள பயணத்தின் போது வாகனங்கள் குறைவாக இருந்த காரணத்தினால் மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று பிரித்து கொடுக்கப்பட்டது. மூன்று நபர்கள் முறை வைத்து அதில் பிரயாணம் செய்ய வேண்டும் அதனடிப்படையில் அபூலுபாபா ரலி, அலி ரலி, இறை தூதர் அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.இருவர் ஒட்டகத்தின் மீது அமர வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழி நடத்த வேண்டும். இது தான் முறை. ஆனால் அந்த இரு ஸஹாபாக்களும் இறை தூதர் அவர்களே நீங்கள் வாகனத்தை விட்டும் கீழே இறங்க வேண்டாம். நாங்கள் இருவர் மட்டும் மாறி மாறி இறங்கிக கொள்கிறோம் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட நபி அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட பலசாலிகள் அல்ல.மேலும் நன்மையைப் பெறுவதில் நான் தேவையற்றவனும் அல்ல என்று கூறினார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் யாருக்கும் எந்த வழியிலும் அநீதம் இளைத்து விட கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். பள்ளிக்கூடத்தை பொறுத்தவரை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அமானிதம் அந்த அமானிதத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவது ஆசிரியர்களின் கடமை. அதை பாழ் படுத்துவது அநீதமாகும். அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் விட்டு தூரமாக்க கூடிய அநீதத்தை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! மௌலவி தர்வேஸ் ஹஸனி M.A B.Ed. அரபிக் ஆசிரியர், யூனிட்டி பப்ளிக் ஸ்கூல் சென்னை 9790933067
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.