ஆய்வுகள்
November 08, 2024
நாவுக்கு சில நல்ல புத்திகள்...
நாவுக்கு சில நல்ல புத்திகள்... தரமான தயாரிப்பு மகா ஆற்றலுள்ள மாபெரும் சக்தியுள்ள நம்முடைய இறைவனாகிய அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் ஆவான். அவனுடைய படைப்பு ஒவ்வொன்றும் மிக நேர்த்தியானதும் மிக்க அழகானதும் ஆகும். அவனது படைப்பில் ஆகச் சிறந்த படைப்பாக பார்க்கப்படுவது மனிதப் படைப்பு தான். எத்தனை முகங்கள்! எவ்ளோ அழகு! எவ்ளோ வலிமை! என்ன திறமை! என்ன அமைப்பு! ஸுப்ஹானல்லாஹ்! அந்த மனிதப் படைப்பை அல்லாஹ் செம்மையாக படைத்திருப்பது அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். அவனது தலை முடியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் மிக நேர்த்தியானவை; மிக்க அழகானவை; சரியான அமைப்பு கொண்டவை ஆகும். எந்த உறுப்பு எங்கு இருக்க வேண்டுமோ அதை அதன் இடத்தில் அழகாய் அமைத்திருக்கிறான் அல்லாஹ். திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4) அந்த அழகிய மனித படைப்பில் மனிதனின் உணர்வையும் அவனது திறமையையும் அழகாய் வெளிப்படுத்தும் கருவி தான் அவனது நாக்கு என்பது. ஆம்! மனித உடலில் நாக்கு மிக முக்கியமான உறுப்பு ஆகும். அது, வாய்க்குள் மறைந்திருக்கும் செவிகளுக்கு ஓசை எழுப்பும்; அது, மனிதத் திறமையை எடை போடும் எடைக் கருவி; செவிகளுக்கு இனிய ஓசை எழுப்பும் இசைக்கருவி அது. இன்னும் பலருக்கு அந்த நாவு தான் மூலதனம் என்றால் கூட அது மிகையல்ல. மழலைப் பேச்சு, மங்கையர் பேச்சு, அழகுப் பேச்சு, தீப்பொறி பேச்சு, சிந்தனைப் பேச்சு என பல அடைமொழிகளை தனக்குள் வைத்திருக்கிறது இந்த நாக்கு. இப்படி பல நற்பேறுகளுக்கு காரணமாய் இருப்பது தான் இந்த நாக்கு என்பது. அதே சமயம் அந்த நாக்கானது பெரும்பெரும் வினைகளையும், வில்லங்கங்களையும் மனிதனுக்கு தேடித் தரும். பேசிய பேச்சுக்காக வேண்டி பல் உடைக்கப்படும். உடலுக்கு சிறந்த முறையில் மசாஜ் செய்யப்படும். இந்த சிறு உறுப்பு பேசியதற்காக மொத்த உடலும் படாத பாடு படும். ஆகவே, இந்த எலும்பில்லாத நாக்கிற்கு நேர்மறையும் இருக்கிறது எதிர்மறையும் இருக்கிறது. அதை நாம் எந்த முறையில் பயன்படுத்துகிறோம் என்பதை கவனித்தே அது அமையும். எனவேதான் மார்க்கம் நாவின் மூலம் நல்ல பேச்சுகளை பேசி நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கட்டளையிடுகிறது. யோசித்துப் பேசச் சொல்கிறது. இடம் பொருள் அறிந்து பேசச் சொல்கிறது. நல்ல பேச்சு பேசுவதை ஈமானின் அடையாளம் என்று அடையாளப்படுத்துகிறது. நல்ல வார்த்தைகளை உச்சரிப்பதற்கு நற்கூலி வழங்குகிறது. ஸலாம் என்கிற முகமன் கூறி பேச்சை ஆரம்பிக்கச் சொல்கிறது. நலம் விசாரிக்கச் சொல்கிறது. நோயாளியிடம் சென்று நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல சொல்லி ஆர்வமூட்டுகிறது. இது எதுவும் முடியவில்லை என்றால் வாய் மூடி மௌனமாக இருப்பது சிறந்தது என்று வலியுறுத்துகிறது. வாய குடுத்து வாங்கி கட்டிக்கிறத விட வாய மூடிட்டு வம்பில்லாம இருப்பது மேல். நாவு எனக்கு சொந்தமானது என்று யாரும் எதை வேண்டுமானாலும் பேசி விட முடியாது. உலக அடிப்படையிலும் அதற்கு ஒரு வரைமுறை உண்டு. மார்க்கமோ நாவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாருங்கள்! இந்த நாவு குறித்து மார்க்கம் கூறக்கூடிய ஒரு சில அறிவுரைகளை தெரிந்து கொள்வோம்! நாவு குறித்து மார்க்கம் நம்முடைய பேச்சுக்கள் பதியப்படுகின்றன. நமது கை, கால்களால் செய்யப்படும் செயலைப் போல நமது நாவால் நாம் பேசும் ஒரு செயலாக – ஒரு அமலாகத்தான் மார்க்கத்தின் பார்வையில் இருக்கின்றது. ஆகவே, நாம் எதைப் பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எந்தளவு பேசுகிறோம் என்று யோசித்து கவனமாக பேச வேண்டும். பேசிவிட்டு பிறகு வருந்தும்படியான பேச்சுகளை பேசாமல் தவிர்த்து விடுவதே மேல். இஸ்லாமிய மார்க்கத்தில் பேச்சுக்கு என்றே பல ஒழுக்கங்கள், வரைமுறைகள் உள்ளன. அவற்றைத்தான் பின்வரும் குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் நாம் பார்க்க இருக்கின்றோம். أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா? ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் ஆக்கவில்லையா)? (அல்குர்ஆன் 90 : 8,9) وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا மக்களிடம் அழகியதைக் கூறுங்கள். (அல்குர்ஆன் 2 : 83) وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ மேலும், (நபியே!) என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் (தங்களுக்குள்) மிக அழகியதை பேசவும். (அல்குர்ஆன் 17:53) مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர. (அல்குர்ஆன் 50:18) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது இரு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் தனது இரு கால்களுக்கு மத்தியில் உள்ளதையும் தான் பாதுகாப்பேன் என்று எனக்கு உறுதி கொடுப்பாரோ (பிறகு அவ்வாறே அவர் நடந்துகொண்டால்) அவருக்கு நான் சொர்க்கத்திற்கு உறுதி கொடுப்பேன். புகாரி – 6474. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது வாய்மூடி மவுனமாக இருக்கட்டும். இன்னும், யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வாரோ அவர் தனது அண்டை வீட்டாருக்கு தொந்தரவு தர வேண்டாம். இன்னும், யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வாரோ அவர் தனது விருந்தாளியை கண்ணியமாக உபசரிக்கட்டும். புகாரி – 6475. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வாய்மூடி) அமைதியாக இருப்பவர் ஈடேற்றம் அடைவார். திர்மிதி – 2501. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அடியார்கள் பல விஷயங்களை பேசுகிறார்கள். அவற்றில் அவர்களுக்கு தெளிவு இருப்பதில்லை (அந்த பேச்சுக்கள் நல்லதா, கெட்டதா என்று). ஆகவே, அவற்றின் காரணமாக அவர்கள் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் உள்ள தூரத்தைவிட அதிக தூரம் நரகத்தில் விழுவார்கள். புகாரி – 6477. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அடியார்கள் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உட்பட்ட நல்ல பேச்சுகளை பேசுவார்கள். அப்படி பேச வேண்டும் என்று அவர்களுக்கு மனதில் நாட்டம் இருக்காது. அல்லாஹ் அந்த பேச்சுகளின் காரணமாக அவர்களை பல தகுதிகள் உயர்த்துகின்றான். இன்னும், நிச்சயமாக அடியார்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உட்பட்ட தீய பேச்சுகளை பேசுவார்கள். அப்படி பேச வேண்டும் என்று அவர்களுக்கு மனதில் நாட்டம் இருக்காது. அவற்றின் காரணமாக அவர்கள் நரகத்தில் விழுவார்கள். புகாரி – 6478. படிப்பினைகள்: நாவு, அல்லாஹ்வின் படைப்புகளில் அற்புதமான படைப்பும் அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் மிகப் பயனுள்ளதும் ஆகும். நாம் நாவு என்று இங்கு சொல்வது வெறும் நாவு என்ற உறுப்பை மட்டும் கூறவில்லை. மாறாக, அந்த நாவின் மூலம் அல்லாஹ் வழங்கிய பேசும் ஆற்றலை சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறோம். பேச்சில் பலவகை உண்டு. நல்ல பேச்சுக்கள், கெட்ட பேச்சுக்கள், அழகிய பேச்சுக்கள், ஆபாசமான பேச்சுக்கள், நன்மையான பேச்சுக்கள், பாவமான பேச்சுக்கள், பலனுள்ள பேச்சுகள், வீணான பேச்சுக்கள், அல்லாஹ் விரும்புகின்ற பேச்சுகள், அல்லாஹ் வெறுக்கின்ற பேச்சுக்கள் இப்படியாக பேச்சுகளின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அல்லாஹ்வும் ரஸூலும் எதை விரும்புவார்களோ அதுதான் அழகிய பேச்சாகும். அல்லாஹ் மற்றும் ரஸூல் உடைய வழிகாட்டலுக்கு ஏற்ப தனது பேச்சை அமைத்துக் கொள்பவர்கள்தான் புத்திசாலிகள். நல்லறிவுள்ள கல்விமான்கள் எதை அழகான பேச்சு என்று கூறுவார்களோ அதைத்தான் நாம் பேச வேண்டும். வீணர்கள், ஒழுக்கமற்றவர்கள், முரடர்கள், வம்பர்கள் பேசுகின்ற பேச்சுகளை ஒருபோதும் நாம் பேசக்கூடாது. ஆகவேதான், அறிவீனர்களிடம் பேச்சை தொடராமல் ஸலாம் என்கிற ஒற்றை வார்த்தையை கூறி பேச்சை முடிக்கச் சொல்கிறது. இன்னும், அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி (விலகி சென்று) விடுவார்கள். (அல்குர்ஆன் 25:63) பல சூழ்நிலைகளில் மனிதன் தனது கட்டுப்பாட்டை இழந்து பேசிவிடுகிறான். பிறகு வருந்துகிறான். சில நேரம் அவனுக்கு அந்த பேச்சு சிறிய அல்லது பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. பலர் தங்கள் பேச்சினால் தமது தலையை இழந்துள்ளார்கள். பலர் பல காலம் சிறைவாசம் சென்றுள்ளார்கள். இன்னும் பலர் தங்கள் பேச்சினால் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். பல சமயம் முறையற்ற பேச்சினால் உறவுகள் முறிந்து விடுகின்றன. நண்பர்களுக்கு மத்தியில் பகைமை நிலவி விடுகின்றது. இப்படியாக இந்த பேச்சினால் விளையும் தீமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு வார்த்தை போதும் இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டு இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழப்பதற்கு. உறவினரின் சில பேச்சு குடும்பங்களை பிரித்து கணவன் மனைவி உறவுகளை அறுத்துவிட்டிருக்கிறது. ஆம், இதற்கெல்லாம் என்ன காரணம்? ஷைத்தான் நம்மை தூண்டி விடுகிறான், அவன் நமக்குள் ஆத்திரத்தையும் கோபத்தையும் மூட்டி விடுகிறான். பிறகு, போதை தலைக்கேறியவன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாதது போல் நாமும் நாம் என்ன சொல்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை உணராமல், புரியாமல் பேச ஆரம்பித்து விடுகிறோம். கோபம் மனிதனின் கட்டுப்பாட்டை தடுமாற செய்துவிடும். மனிதனின் நிலையை ஒரு பைத்தியத்தின் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ஆகவேதான் அந்த ஒரு நிலை ஏற்படும் என்று உணர்ந்தாலே உடனே ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேட வேண்டும் என்று அல்குர்ஆன் நமக்கு வழிகாட்டுகின்றது. கோபத்தின் தொடக்கம் பைத்தியம், அதன் முடிவு கைசேதம் என்று அரேபிய பழமொழியில் கூறுவார்கள். கோபமான நேரத்தில் தீர்ப்பு சொல்வது தடுக்கப்பட்டுள்ளது. கோபத்தை எப்படி அடக்க வேண்டும் என்பதற்கு தனியாக ஒரு அழகிய வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கற்பித்து தந்துள்ளார்கள். எப்போதும் நல்ல அழகிய பேச்சுகளை பேசுபவர்கள் அல்லாஹ்விடமும் அவனது அடியார்களிடமும் போற்றத்தகுந்த மக்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நண்பர்களும் நேசர்களும் அதிகம் இருப்பார்கள். அவர்களை விரும்புகின்றவர்களும் அவர்களோடு பழகுகின்றவர்களும் எப்போதும் நிம்மதியையும் மன ஆறுதலையும் உணர்வார்கள். ஆகவேதான் நல்லதைத் தவிர எதையும் பேச வேண்டாம் என்றும் அப்படி இல்லை என்றால் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்றும் நபி அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். அத்துடன் தனது நாவை சரியான முறையில் பேணி, அல்லாஹ்வின் விஷயத்திலும் அடியார்களின் விஷயத்திலும் தடுக்கப்பட்ட எதையும் பேசாமல் பாதுகாத்து வந்தவருக்கு சொர்க்கத்திற்கான பொறுப்பை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். கண்மூடித்தனமாக, வாய்க்கு வந்ததெல்லாம் பேசுபவர் நரகப் படுகுழியில் சறுக்கி விழுவார் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். நாம் பேசுகின்ற பேச்சு ஷிர்க்கை அல்லது குஃப்ரை அல்லது நிஃபாகை ஏற்படுத்தி விடக்கூடாது. அது நிரந்தர நரகத்திற்கு வழி செய்துவிடும். இது அல்லாஹ்வின் விஷயத்தில் ஆகும். அடியார்களின் விஷயத்தில் புறம் பேசுவது, கோல் சொல்வது, இட்டுக்கட்டுவது, பழி சுமத்துவது, பொய் சொல்வது, பிறர் மனதை காயப்படுத்துவது, வன்மையான சொற்களால் பேசுவது, திட்டுவது, ஏசுவது, பிறர் கண்ணியத்தை பங்கப்படுத்துவது, பிறரை பரிகாசம் செய்வது, மனம் நோகும்படி கேலி கிண்டல் செய்வது, தன்னிடம் இல்லாததைக் கொண்டு வீண் பெருமையடிப்பது, தற்புகழ்ச்சி செய்து கொள்வது இப்படியாக ஒரு நீண்ட பட்டியலை நாம் கூறலாம். அவையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பேச்சுகளாகும். இவற்றின் காரணமாகவும் மனிதன் நரகத்தில் தள்ளப்படுவான். நிரந்தரமாக இல்லை என்றாலும் நரகம் என்ன சும்மா சொகுசு இல்லமா அது!? அங்கு யார் தங்க முடியும்? அதன் வேதனையை யார் அனுபவிக்க முடியும்? இவ்வுலகில் பல லட்சம் ஆண்டுகள் துன்பப்படுவதை விட நரகத்தில் ஒரு நிமிடம் துன்பப்படுவது பயங்கரமானது ஆகும். அல்லாஹ் பாதுகாப்பானாக! நாம் நம்மை கட்டுப்படுத்த வேண்டும். நல்லதையும் அழகியதையும் சிறந்ததையும் அனுமதிக்கப்பட்டதையும் மட்டும் பேச வேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும். அவ்வப்போது நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது பேச்சை நாமே கண்காணிக்க வேண்டும். நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். சில நேரம் தேவைப்பட்டால் மார்க்க எல்லைக்கு உட்பட்டு நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும். மறுமையின் தண்டனையை புரிந்தவருக்கு இவ்வாறு நடப்பது சிரமமல்ல. இங்கு கண்மூடித்தனமாக நாவை அவிழ்த்துவிட்டு பிறகு நரக வேதனையை அனுபவிப்பதுதான் மிகப் பெரிய சிரமம் என்பதை நாம் உணர வேண்டும். நமது முன்னோர் நாவு குறித்து கூறி இருக்கின்ற அநேக உபதேசங்கள், அறிவுரைகள் உள்ளன. அவற்றை படித்து, உணர்ந்து நாம் படிப்பினைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் பொருத்தம் எதுவோ அதுவே நமது பேச்சாக இருக்க வேண்டும். அவனது பொருத்தத்திற்குள் வராத எதையும் நமது நாவு பேசிவிடக்கூடாது. அல்லாஹ் என்னையும் உங்களையும் நாவின் தீமையிலிருந்து இம்மையிலும் மறுமையிலும் பாதுகாப்பானாக! நாவின் மூலம் நல்ல வார்த்தைகள் பேசி நன்மைகள் பெறுவதற்கு வல்ல ரஹ்மான் வாய்ப்பளிப்பானாக! ஆமீன்! இமாமுத்தீன் ஹஸனீ MA
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.