பொதுவாக பிறை விசயத்தில் உள்நாட்டு பிறை, வெளிநாட்டு பிறை என்று இரண்டு கருத்துகளும் ஹதீஸின் அடிப்படையில் பேசப் படுவதால், யாருடைய கருத்து ஆய்வின் அடிப்படையில் மிக சரியாக இருக்கிறதோ அவருக்கு இரண்டு கூலிகளும், யாருடைய கருத்து ஆய்வின் அடிப்படையில் பிழைத்து விடுகிறதோ அவருக்கு ஒரு கூலியும் என்று சர்ச்சைகளுக்கு இஸ்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறது.
எனவே யாரும் யாரையும் விமர்சனம் செய்ய தேவை கிடையாது. இதையும் மீறி நாங்கள் மட்டும் தான் சரி மற்றவர்கள் வழிகேடர்கள் என்று பேசுவார்களேயானால் அவர்கள் மார்க்க அறிவில்லாதவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதே நேரம் பிறர், முன் வைக்கும் கேள்விகளுக்கு இரண்டு தரப்பினரும் மாறி, மாறி தனது கருத்துக்களை தெளிவுப் படுத்தும் முகமாக அழகான முறையில் பதிலளிக்கலாம்.
அந்த வகையில் சவூதி பிறையின் அடிப்படையில் அறபா நோன்பை நோற்பவர்களை மைய்யப் படுத்தி முன் வைக்கும் கேள்விகளுக்கு அல்லது விமர்சனங்களுக்கு தெளிவுப் படுத்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
கேள்வி - (01)
நபியவர்கள் மதீனாவில் இருக்கும் போது மக்கா பிறையை எதிர் பார்க்கவில்லை, அப்படி என்றால் மதீனாவில் பிறை ஒன்பது அடிப்படையில் தான் நபியவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள் பிறகு எப்படி வெளிநாட்டு பிறையை எடுக்க முடியும் என்று கேள்வியை சிலர் முன் வைக்கின்றனர். அதாவது மதீனா பிறை மதீனாவிற்கும், மக்கா பிறை மக்காவிற்கும்.
பதில் - மதீனாவில் மட்டுமல்ல அன்றைய காலத்தில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இருந்தார்களோ அவர்களும் அந்த, அந்த ஊரின் பிறை அடிப்படையில் தான் நோன்பு பிடித்தார்கள். அதற்கு காரணம் தொலை தொடர்பு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஏன் என்றால் இன்று மக்கா பிறையை மதீனாவும், மதீனா பிறையை மக்காவும், அதையும் தாண்டி சவூதியில் எங்கு பிறை தென்பட்டாலும் சவூதி முழுவதும் ஏற்றுக் கொள்கிறது. பிறை சாட்சி வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் இன்று தொலை தொடர்பு தாராள வசதியாக இருப்பதால் அது இன்று நடைமுறைக்கு சாத்தியமாக இருக்கிறது.
வெளிநாட்டு பிறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், இன்றைய சவூதியின் பிறை மாற்றத்திற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள். ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா முழுவதும் நபியவர்கள் கைவசம் ஆகிவிட்டது. நபியவர்கள் தலைமையில் ஒரே நாடாக இருந்த சமயத்திலும் மக்காவிற்கு தனி பிறை, மதீனாவிற்கு தனி பிறையாக தான் இருந்தது. நபியவர்கள் காலத்தை முன் வைத்து வாதம் புரிபவர்கள் இப்போது சவூதிக்கு என்ன தீர்ப்பு அளிக்க போகிறார்கள். இல்லை இப்போது சவூதி ஒரு நாடு என்ற வாதத்தை முன் வைத்தால், ஹிஜ்ரி எட்டுக்கு பிறகும் நபியவர்கள் காலத்தில் சவூதி ஒரு நாடாக தான் இருந்தது. எந்த மதீனாவை முன் வைத்து இப்படி தான் நபியவர்கள் நடைமுறைப் படுத்தினார்கள், எனவே நாங்களும் அப்படி தான் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று பேசினால், சவூதிக்குள்ளேயே ஒரு பிறையை வைத்து நடைமுறைப் படுத்த முடியாது. பிறை விசயத்தில் சவூதியை பல கூறாக போட வேண்டி வரும்.
சவூதி மட்டும் அல்ல உலகில் ஒவ்வொரு பகுதியிலும் அப்படி தான் நடைமுறைப் படுத்த வேண்டும். ஏன் என்றால் தொலை தொடர்பு இல்லாத காலத்தில் நிலைமை அப்படி தான் இருந்தது. உதாரணமாக நமது இலங்கையை எடுத்து கொண்டால் அறவே தொலை தொடர்பு இல்லாத காலத்தில் எந்த, எந்த பகுதியில் எப்போது பிறையை கண்டார்களோ அதன் படி தான் செய்தார்கள். ஆனால் இன்று ஒரே பிறை. காரணம் தொலை தொடர்பு வளர்ந்து விட்டது. எனவே தான் பிறை செய்தி உறுதிப் படுத்தப் பட்டு வருகிறது என்றால், எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறோம். இல்லை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் சவூதி உட்பட உலகில் எந்த நாட்டிலும் நாட்டிற்கு ஒரு பிறையை கொண்டு நடைமுறைப் படுத்த முடியாது. எப்படி நபியவர்கள் காலத்தில் மக்காவிற்கு தனி பிறை, மதீனாவிற்கு தனி பிறை என்று இருந்ததோ அப்படி தான் இப்போதும் ஊருக்கு ஊர் பிறை இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அனைவரும் வர வேண்டும். ஏதோ ஒரு வகையில் நீங்களும் நபியவர்கள் காலத்தில் இருந்ததை மாற்றி, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கிறீர்கள்.
நபியவர்கள் காலத்தில் ஊருக்கு ஊர் பிறை பார்த்தல் இருந்தாலும், இப்போது உடனுக்குடன் செய்தி கிடைப்பதால், நாட்டுக்குள் விரிவுப் படுத்தி நடை முறைப் படுத்தலாம் என்றால், நாங்களும் அதைத் தான் சொல்கிறோம். தொலை தொடர்பு வளர்ந்து விட்டதால் சாட்சியின் செய்தியை வைத்து, நாடுகள் தாண்டியும் உடனே செய்திகள் கிடைக்கிறது. எனவே அதை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம் என்கிறோம. முடியாது பிழை என்றால் நாட்டு பிறை அல்ல ஊர் பிறை தான் நபியவர்கள் காலத்தில் இருந்தது. நாட்டு பிறையும் பிழை என்ற முடிவுக்கு அனைவரும் வர வேண்டும்.
கேள்வி (02)
நபியவர்களின் ஆரம்ப காலத்தில் ஹஜ் கடமைகள் சரியாக ஒழுங்கு படுத்தப் பட வில்லை, துல்கஃதாவிலும் ஹஜ் நடந்துள்ளது, எனவே நபியவர்கள் அறபா நாளை மைய்யப் படுத்தி அறபா நோன்பை பிடிக்கவில்லை, பிறை ஒன்பதை முன் வைத்து தான் அந்த அறபா நோன்பை பிடித்துள்ளார்கள். ஹாஜிகள் அறபாவில் ஒன்று கூடும் நேரத்தில் நோன்பு பிடிக்க வேண்டும் என்றால் நபியவர்களோ, ஸஹாபாக்களோ அப்படி செய்யவில்லை எனவே அறபாவை மைய்யப் படுத்தி இந்த நோன்பை பிடிக்க அவசியம் இல்லை. மாறாக அந்த, அந்த நாட்டின் பிறை அடிப்படையில் தான் நோன்பு பிடிக்க வேண்டும். ?
பதில் - ஹஜ் கடமை நபியவர்கள் காலத்தில் புதிதாக நடைமுறைப் படுத்த வில்லை. மாறாக ஹஜ் கடமை இப்றாஹீம் நபி காலத்தில் இருந்து தொடராக வருவதால், ஜாஹிலிய்யா காலம் வரை ஹஜ் வணக்கம் நடைமுறையில் இருந்தது. இஸ்லாம் வந்த பிறகு நபியவர்கள் வஹியை முன் வைத்து அந்த ஹஜ் கடமையை ஒழுங்குப் படுத்தி, நெறிப்படுத்தினார்கள்.
அதை புகாரியில் (1665) கவனிக்கலாம். அதாவது ஹஜ்ஜை முடித்து விட்டு அனைவரும் அறபாவிலிருந்து திரும்புவார்கள். அதே நேரம் ஹூம்ஸு குலத்தார்கள் முஸ்தலிபாவிலிருந்து திரும்புவார்கள். அது சம்பந்தமாக தான் (2 - 199) இந்த குர்ஆன் வசனம் இறங்கியது. அது போல ஜாஹிலியா காலத்தில் மதீனாவாசிகள் மதீனாவிற்கு அருகிலுள்ள மனாத், மற்றும் இஷாப், நாயிலா போன்ற சிலைகளுக்காக இஹ்ராம் கட்டுவார்கள். இதை புகாரி (1643, 1790) காணலாம். இப்படி மாறி, மாறி இருந்த ஹஜ் வணக்கத்தை நபியவர்கள் ஒழுங்குப் படுத்துகிறார்கள். எது எப்படியோ அன்றைய ஆரம்ப காலத்தில் இருந்து ஹஜ் வணக்கத்தில் மாற்றங்கள் இருந்தாலும் அரபாவும் முக்கியமான கடமையாக இருந்துள்ளது. பொதுவாக நபியவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்த எத்தனையோ அமல்களில் வஹியை முன் வைத்து மாற்றங்கள் நடந்துள்ளன. உதாரணமாக ஆரம்ப காலத்தில் தொழுகையில் பேசிக் கொள்வார்கள். பிறகு மாற்றப் படுகிறது. (புகாரி -1200) அது சம்பந்தமாக (2-238) வசனம் இறங்கியது. ஆரம்பம் காலத்தில் கிப்லா திசை பைத்துல் முகத்திஸை நோக்கி இருந்தது. பிறகு கஃபாவை நோக்கி மாற்றப் பட்டது. இப்படி பல அமல்களை சுட்டி காட்டலாம். அதே நேரம் மாற்றப் படுவதற்கு முன் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது கிடையாது. எனவே அமல்கள் ஒழுங்கு படுத்தப் பட்ட பிறகு அந்த, அந்த அமல்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். எனவே தான் ஹஜ் கடமைகள் ஒழுங்கு படுத்தப் பட்ட பிறகு அறபாவிற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. ஹஜ் என்பது அறபாவில் தங்குவதாகும். அதாவது ஹாஜிகள் அறபாவில் தங்கா விட்டால் ஹஜ்ஜையே இழக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு அரபா முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் முஸ்லிமில் (2623) பின் வரும் ஹதீஸை கவனிக்கலாம். " அரபா நாளன்று நரகத்தில் இருந்து அதிகமானவர்களை அல்லாஹ் விடுதலை செய்கிறான். மேலும் அல்லாஹ் நெருங்கி வந்து மலக்குமார்களிடம் அறபா வில் தங்கி இருக்கும் ஹாஜிகளைப் பற்றி பாராட்டி பேசுகிறான் என்பதை நபியவர்கள் கூறுகிறார்கள்.
அறபா மைதானம் எல்லா காலங்களிலும் இருந்தாலும் மேற்ச் சொல்லப் பட்ட சிறப்புகள் ஹஜ் காலத்தில் பிறை ஒன்பது அன்று மட்டும் தான் நடக்கிறது. அது ஹாஜிகளுக்கு சொல்லப் பட்ட சிறப்புகளாக இருந்தாலும் அந்த, அந்த நாட்டில் உள்ளவர்கள் அறபா நோன்பை நோற்பதின் மூலம் இரண்டு வருட பாவங்கள் அழிக்கப் படுகிறது என்ற சிறப்பை அடைகிறார்கள். அதனால் தான் சவூதி பிறை ஒன்பது அன்று அறபா நாள் என்பது பத்து நாளைக்கு முன் உலகத்திற்கே தெரிந்து விடுகிறது. அப்படியானால் அறபா நாளன்றே உலக மக்களில் அதிகமானவர்கள் நோன்பை பிடிக்க முடியும் என்று சொல்கிறோம். துல்கஃதா மாதத்தில் ஹஜ் நடந்துள்ளது, ஹஜ் ஒழுங்கு படுத்த படாமல் இருந்த காலங்களில் அல்லது ஆரம்ப காலங்களில் அறபா நாளை கவனிக்காமல் அந்த, அந்த நாட்டின் அடிப்படையில் ஒன்பதாவது நாள் பிறையின் அடிப்படையில் அறபா நோன்பு பிடித்தவர்களுக்கும் அதே நன்மைகளும் சிறப்புகளும் கிடைக்கும். ஆனால் அன்றைய காலத்தை விட இன்று தெளிவாக இருக்கும் போது ஆரம்ப காலத்தையே சுட்டி காட்டுவது பொருத்தமில்லை. அப்படியே ஆரம்ப காலத்தையே மைய்யப் படுத்தி பேசுவதாக இருந்தால், முதலாவது கேள்விக்கான பதிலில் சொன்னது போல நாட்டு பிறை சாத்தியமில்லை. நபியவர்கள் காலத்தில் ஊர் பிறை தான் இருந்தது எனவே அனைவரும் நாட்டு பிறையை விட்டு, விட்டு ஊர் பிறைக்கு மாற வேண்டும்.
கேள்வி (03)
ஹதீஸில் அறபா என்ற பெயர் இடம் பெற்று இருப்பதால், அறபா நாளன்று தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்பது கிடையாது. உதாரணமாக அமெரிக்காவில் வேல் சென்டர் தாக்கப் பட்ட அன்று ஒருவர் பிறக்கிறார். நான் வேல் சென்டர் தாக்கப் பட்ட அன்று பிறந்தேன் என்று சொல்வதால், இவருக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தம் கிடையாது. மாறாக அன்றைய நாள் இவர் பிறந்திருக்கிறார் என்று விளங்கிக் கொள்வோம். அது போல அறபா என்ற பெயருடன் சேர்ந்து இருப்பதால் அறபா நாளில் தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்பது கிடையாது, நமது நாட்டு பிறை ஒன்பதில் பிடிக்கலாம்.?
பதில்
பொதுவாக காலங்களோடும், இடங்களோடும் வரக் கூடிய அமல்களை எடுத்து நோக்கினால் நிறைய சிறப்புகளோடு பின்னிப்பிணைந்திருப்பதை காணலாம்.
உதாரணமாக
திங்கள், வியாழன் நாட்கள் பிடிக்கும் நோன்புகள். திங்கட்கிழமையன்று நோன்பு பிடிப்பதால், அதை திங்கள் நோன்பு என்கிறோம். வியாழக்கிழமையன்று நோன்பு பிடிப்பதால் அதை வியாழன் நோன்பு என்கிறோம். அதே நேரம் அன்றைய நாட்களில் நிறைய நன்மைகளையும் கவனிக்கலாம். திங்கள், வியாழன் நாட்களில் சுவனத்து வாசல்கள் திறக்கப் படுகின்றன. திங்கள், வியாழன் நாட்களில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப் படுகின்றன. திங்களன்று நான் பிறந்தேன் அதனால் அன்றைய நாளில் நான் நோன்பு பிடிக்கிறேன் என்று நபியவர்கள் கூறினார்கள். இங்கு இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். முதலாவது திங்கட் கிழமைக்கும் நோன்புக்கு சம்பந்தம் இருக்கிறது. அதனால் தான் திங்கட்கிழமை நோன்பு என்கிறோம். வியாழக்கிழமை நோன்பு என்கிறோம். இரண்டாவதாக அன்றைய நாளில் நிறைய சிறப்புகளும் இருப்பதால் அந்த நோன்புகளை பிடிக்க ஆர்வமூட்டப் படுகிறது.
அதே போல மாதத்தில் மூன்று நோன்புகள். இவைகள் மாதத்தோடு சம்பந்தப் படுவதால் மாதத்தில் மூன்று நோன்புகள் என்கிறோம். அந்த மூன்று நோன்புகளை பிடித்தால் முப்பது நோன்புகள் பிடித்த நன்மைகள் கிடைக்கும். இங்கு ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த மூன்று நோன்புகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
அதேபோல ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள். அந்த மாதத்திற்கும் நோன்புகளுக்கும் தொடர்புள்ளன. அதனால் தான் ஷவ்வாலுடைய நோன்பு என்கிறோம்.
முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், மற்றும் பத்தாம் நாட்களின் நோன்புகள். முஹர்ரம் மாதத்திற்கும் அந்த இரண்டு நோன்புகளுக்கும் சம்பந்தம் உள்ளன. அதனால் தான் முஹர்ரம் மாத நோன்புகள் என்கிறோம். ரமழான் மாதம் நோன்புகள். ரமழான் மாதத்திற்கும் அந்த நோன்புகளுக்கும் சம்பந்தம் உள்ளன. அதனால் தான் ரமழான் மாத நோன்புகள் என்கிறோம். இந்த வரிசையில் அறபா நோன்பு, அறபா தினத்திற்கும் அந்த அறபா நாளுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் தான் ஹதீஸில் "யவ்மி ஸவ்மி அறபா" அறபா நாளின் நோன்பு என்று இடம் பெற்றுள்ளது. எனவே தான் நாம் அறபா நோன்பு என்கிறோம்.
தொடர்பில்லை என்று போற போக்கிலே தவறாக சொல்லக் கூடாது. உங்களுக்கு பொருத்தமான விளக்கத்தை வேண்டுமானால் சொல்லி கொள்ளுங்கள். அதற்காக நேரடியாக ஹதீஸில் வந்த சொல்லை இல்லை என்று சொல்ல வேண்டாம். ஹதீஸில் அறபா நாள் என்று தான் வந்துள்ளது. சம்பந்தம் இல்லாமல் நபியவர்கள் சும்மா சொல்ல மாட்டார்கள். என்றாலும் நாம் இப்படி தான் விளங்க வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.
எனவே நாம் என்ன சொல்கிறோம் என்றால், ஹதீஸில் நேரடியாக அறபா தின நோன்பு என்று வந்துள்ளது. மேலும் அன்றைய நாள் ஹாஜிகளை மைய்யப் படுத்தி அதிகமான சிறப்புகள் வந்துள்ளன. மேலும் பத்து நாட்களுக்கு முன் எந்த தடையுமின்றி பிறை தகவல் கிடைத்தது விடுகிறது. மேலும் அன்றைய நாளே பிடிப்பதற்கு அனைத்து சூழலும் நமக்கு சாதகமாக இருக்கிறது. எனவே அறபா நாளிலே அந்த நோன்பை பிடிப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
*****