குர்ஆன்

July 19, 2023

அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி


அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது!


யானை படை


அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன? ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது? என அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றீர்களா? வாருங்கள் கதைக்குள் செல்வோம்


மக்கா புனித பூமி என்பதை அறிவீர்கள். அதற்கு ‘உம்முல் குரா” – நகரங்களின் தாய்- என்ற பெயரும் உண்டு. அங்குதான் ‘பைதுல் அதீக்” எனப்படும் பழமையான ஆலயமான ‘கஃபா” உள்ளது. கஃபாவை மக்கள் பெரிதும் மதித்து வந்தனர். யமனில் ‘ஆப்ரஹா” என்றொரு மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் ‘ஸன்ஆ”வில் மிகப் பிரம்மாண்டமான கலை நுணுக்கம் மிக்க ஒரு ஆலயத்தைக் கட்டினான். மக்கள் கஃபாவை விட்டு விட்டு இந்த ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்தான். அவனது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.


கஃபாவின் மதிப்பைக் கெடுக்க முனைந்த அவனது நாட்டம் நிறைவேறவில்லை. இதே வேளை, இந்த மன்னனின் சதியால் ஆத்திரமுற்ற சிலர் அந்த ஆலயத்தையும் அசிங்கப்படுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமுற்ற மன்னன் கஃபாவைத் துண்டு துண்டாகத் தகர்த்துவிட்டால் அதன் பின்னர் தனது ஆலயத்தை நோக்கித்தான் மக்கள் வர வேண்டும் என்று கணக்குப் போட்டான். ஒரு நாள் அவன் மிகப் பெரும் யானைப் படையுடன் மக்கா நோக்கிப் படையெடுத்தான். கஃபாவை மதித்து வந்த சில அரபிகள் அவனுடன் சண்டையிட்டு தோல்வி கண்டனர்


அப்துல் முத்தலிப்


அவன் கஃபாவிற்கு அருகில் வந்த போது அங்குள்ள கால் நடைகளைக் கைப்பற்றிக் கொண்டான். நபி(ச) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களது 200 ஒட்டகங்களையும் பிடித்துக் கொண்டான். கஃபா அருகில் வந்த ‘ஆப்ரஹா” மக்காவாசிகளுக்கு ஒரு செய்தி அனுப்பினான். ‘எனக்கு உங்களுடன் போர் செய்யும் எண்ணம் இல்லை. கஃபாவை உடைப்பது மட்டுமே எனது நோக்கம்” என்பதுதான் அந்தச் செய்தி! மக்காவின் தலைவர் அப்துல் முத்தலிப் மன்னன் ஆப்ரஹாவைச் சந்தித்தார். மன்னனும் அவரது அழகிய தோற்றம், வயது என்பவற்றைக் கண்ணுற்று அவரை மதித்தான். அவர் மன்னனிடம், ‘உங்கள் தளபதிகள் என் 200 ஒட்டகங்களை எடுத்துக் கொண்டார்கள். அதை திருப்பித் தாருங்கள்” என்றார். இது கேட்ட மன்னன், ‘உங்களது ஆலயத்தை நான் உடைக்க வந்துள்ளேன். நீங்கள் அது பற்றிப் பேசுவீர்கள் என நினைத்தேன் ஆனால், நீங்கள் உங்கள் ஒட்டகத்தைப் பற்றிப் பேசுகின்றீர்களே” என ஆச்சரியத்துடன் கேட்டான்


அதற்கு அப்துல் முத்தலிப், ‘ஒட்டகத்திற்கு உரிமையாளன் நான். எனவே, அது பற்றி நான் பேசுகின்றேன். இந்த ஆலயத்திற்கு உரிமையாளனான ஒரு இறைவன் இருக்கின்றான். அதை அவன் பார்த்துக் கொள்வான்” என்று கூறினார்.


அப்துல் முத்தலிபிடம் அவருக்குச் சொந்தமான ஒட்டகம் கொடுக்கப்பட்டது. அவர் கஃபாவுக்கு வந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இந்தப் படையை எதிர் கொள்ள நம்மிடம் பலம் இல்லையே என வருந்தி அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள். பின்னர் மலை உச்சிகளுக்குச் சென்றுவிடுமாறு மக்களுக்கு அப்துல் முத்தலிப் உத்தரவிட்டார்கள். அதோ அந்தப் படை ஆணவத்துடன் கஃபாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. திடீரென தலைமை யானை கஃபாவை நோக்கிச் செல்லாது அடம்பிடிக்க ஆரம்பித்தது. அது கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்தது. யமன் நோக்கிச் செல்லத் திருப்பினால் செல்லத் தயாரானது. கஃபாவை நோக்கி நகர்த்தினால் படுத்துக் கொண்டது. எவ்வளவு முயன்றும் அதை அசைக்க முடியவில்லை.


அபாபீல்


அப்போது தான் பல்லாயிரக்கணக்கான ‘அபாபீல்” எனும் சிறு பறவைக் கூட்டம் வந்தது. அவற்றின் கால்களிலும் சொண்டுகளிலும் சிறு சிறு கற்கள் இருந்தன. அவை அவற்றை அந்தப் படை மீது வீசின. அந்தக் கற்கள் பட்டவர்கள் செத்து மடிந்தனர். ஆணவத்துடன் வந்த யானைப் படை சிதறுண்டு போனது. அந்தப் படையுடன் மன்னன் ஆப்ரஹாவும் அழிக்கப்பட்டான். இந்த நிகழ்வால் கஃபாவின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது. இன்ஷா அல்லாஹ் உலக அழிவு நெருங்கும் வரை யாரும் இந்த கஃபாவை எதுவும் செய்ய முடியாது!


உலக அழிவு நெருங்கும் போது இந்தக் கஃபா உடைக்கப்படும். யானைப் படை அழிக்கப்பட்ட அந்த ஆண்டு ‘ஆமுல் பீல்” -யானை வருடம்- என்று கூறப்படும். இந்த நிகழ்வு நடந்த ஆண்டில்தான் இறுதித் தூதர் முஹம்மத் ( ச ) அவர்கள் பிறந்தார்கள்.


அழிக்கப்பட்ட இந்த யானைப் படை பற்றி சூறா ‘அல் பீல்” – யானை வருடம் – எனும் (நூற்றி ஐந்தாவது) அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

***

Admin
483 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions