குர்ஆன்

October 25, 2023

கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்…

கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… 

- ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில்  தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை.


அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால் சிலர் பொருளாதார மோகம் கொண்டனர். ஆண்டவன் கட்டளையை தந்திரம் மூலம் மீற முற்பட்டனர். வெள்ளி இரவு வலை போட்டு, ஞாயிறு காலை வலை இழுத்து மீன் பிடித்தனர். மேலும், வாய்க்கால் வெட்டி சனிக்கிழமை மீன்கள் ஒரு குழியில் வந்து விழுமாறு செய்து ஞாயிற்றுக்கிழமை அதைப் பிடித்தனர். படைத்தவனுக்கு துரோகம் செய்தனர்.


இதைக்கணுற்ற அந்தக் கிராமத்து நல்ல மக்கள், “இப்படிச் செய்யாதீர்கள் . இது கூடாது . அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனுக்குத் துரோகம் செய்ய முற்படாதீர்கள். இது சட்டத்துடன் விளையாடுவதாகும் . இந்த விளையாட்டு விபரீதத்தை உண்டுபண்ணும்” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் தலையில் அதுவெல்லாம் ஏறவில்லை.


அந்த ஊரில் இன்னொரு மக்கள் பிரிவினர் இருந்தனர். அவர்கள் மீன் பிடிக்கவில்லை . ஆனால் அவர்கள் தவறைத்தடுக்கவும் இல்லை. அவர்கள் இந்த தவறைத் தடுப்பவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டனர்.


“அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை அல்லாஹ் தண்டிப்பான். அல்லது அழிப்பான். அல்லாஹ் சொல்லியே கேட்காதவர்கள் நீங்கள் சொன்னால் கேட்கவா போகிறார்கள்” என்று தவறைத் தடுப்பவர்களைத் தடுத்தார்கள்.


அதற்கு அந்த நல்லவர்கள், “இரண்டு நோக்கங்களுக்காக நாம் தவறைத் தடுக்கின்றோம். ஒன்று தவறு நடக்கும் போது தடுக்காமல் இருப்பது தவறாகும். நாம் அல்லாஹ்விடம், தப்புவதாக இருந்தால் தவறைத் தடுத்துத்தான் ஆக வேண்டும் .அடுத்தது நாம் சொல்வதைக் கேட்டு அவர்கள் சிலவேளை தவறை விடலாம் ” என்றனர்.


ஆம். தவறைக் கண்டால் தடுக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் தண்டிக்கப்படுவோம். அந்த கிராமத்தில் இருந்த மீனவர்கள் தமது தவறை விடவில்லை. அல்லாஹ்வின் வேதனை வந்தது. ஒருநாள் அவர்கள் உறங்கச் சென்றனர் . காலையில் நல்ல மக்கள் பார்த்தார்கள். மக்களைக் காணவில்லை. அவர்களது வீடுகள் மூடப்பட்டிருந்தன.


எட்டிப் பார்த்தபோது அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டிருந்தனர். குரங்கில் இருந்து மனிதன் வந்ததாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மனிதர்களில் சிலர் குரங்குகளாக மாற்றப்பட்ட சம்பவம் இது! இந்த சம்பவத்தை திருக்குர்ஆனில் 7:163 – 166 வசனங்களில் நாம் காணலாம்.


அத்தியாயம்-7: ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)


(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை – அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (163)


(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.” (164)


அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். (165)

தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (166)

*****

Admin
516 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions