ஆய்வுகள்
November 12, 2023
மறுமையில் ஓர் உரையாடல்...
மறுமையில் ஓர் உரையாடல்...
- மௌலவி யூனுஸ் தப்ரீஸ்...
கண்ணியத்திற்குரிய உலமாக்களே,! பெரியவர்களே,! சகோதர, சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
மறுமை நாளில் நடக்க இருக்கும் ஒரு காட்சியை நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள்.
அந்த காட்சியை பின்வரும் ஹதீஸின் மூலம் நிதானமாக வாசித்து விட்டு, உங்களை ஒரு தரம் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்" கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் - 5021 )
அன்பிற்குரியவர்களே ! நாம் நாளாந்தம் சந்திக்கும் சம்பவங்களை தான் நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள். நமது பக்கத்து வீட்டில் அல்லது நாம் வசிக்கும் பகுதியில் அல்லது நமது உறவுக்காரர் அல்லது நமது நண்பர் நோயாளியாக இருப்பதை கேள்விப்பட்டால் அதற்காக நேரம் எடுத்து நோய் விசாரிக்க செல்ல வேண்டும். அதற்காக நிறைய நன்மைகள் ஒருபுறம், மறுபுறம் ஒரு நோயாளியை நலம் விசாரிக்கும் போது நம்மைப் பார்த்து அல்லாஹ் சந்தோசம் அடைகிறான். மேலும் ஒரு நோயாளியை நலம் விசாரித்து அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறும் போது அந்த நோயாளி மனநிறைவு அடைந்து நிம்மதி அடைகிறார். ஒரு நோயாளியை நலம் விசாரிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட, நோயாளியை சந்திப்பதால் அல்லாஹ் என்னைப் பார்த்து சந்தோசம் அடைகிறான் என்பதை நினைக்கும் போது, அதை விட பெரிய சந்தோசம் எதுவும் இருக்காது. எனவே அல்லாஹ்வை சந்தோசப் படுத்தும் காரியங்களில் ஈடுபடுங்கள் அல்லாஹ் உங்களை சந்தோசப் படுத்துவான்.
அதேபோல பசித்தவருக்கு உணவளியுங்கள் அந்த சந்தர்ப்பத்திலும் உங்களைப் பார்த்து அல்லாஹ் சந்தோஷம் அடைவான். வீட்டு வாசலில் ஒருவர் உணவு கேட்டு நிற்கும் போது, அல்லது வீதியிலோ, அல்லது நமது கடைகளுக்கு முன் பசியோடு உங்கள் முன் நிற்கும் போது, அவருக்கு உணவளித்து அவரை சந்தோசப் படுத்துங்கள், அல்லாஹ் உங்களைப் பார்த்து சந்தோசம் அடைவான். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பாய் என்பார்கள். அதாவது மேற்ச் சென்ற ஹதீஸின் வாசகம் தான் அதுவாகும். நீ ஏழையை சிரிக்க வைத்தால், அந்த இடத்தில் அல்லாஹ்வை கண்டு கொள்வாய். அதாவது அல்லாஹ் உங்களைப் பார்த்து சந்தோசம் அடைவான். எனவே பிறருக்கு உணவளித்து அல்லாஹ்வை சந்தோசப் படுத்துங்கள்.
மேலும் "தோழர் அபூ தல்ஹா (ரலி) அவர்களும், அவர்களது மனைவியும் தனது பிள்ளைகளுக்கு வைத்திருந்த உணவை ஏழை விருந்தாளிக்கு விருந்தளித்து அவரை சந்தோசப் படுத்தினார்கள். அந்த இருவரின் செயலைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான் (முஸ்லிம் -4175,6)என்ற வரலாற்றிக்கு சொந்தக்காரர்கள் நாம். எனவே இறைவன் ஆச்சரியப்படும் அளவிற்கு பிறருக்கு நாம் உணவளிப்போமாக !
மேலும் தாகித்தவருக்கு தண்ணீர் கொடுக்கும் போது, அப்போதும் உங்களைப் பார்த்து அல்லாஹ் சந்தோசம் அடைகிறான். எனவே எந்த, எந்த காரியங்கள் மூலம் நாம் அல்லாஹ்வை சந்தோசப்படுத்தும் படி நபியவர்கள் நமக்கு வழிகாட்டினார்களோ அந்த, அந்த காரியங்களை உற்சாகத்துடன் தொடராக செய்வதற்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
****
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions