ஆய்வுகள்
November 18, 2023
ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?
ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
மனிதன் பலவிதமான பாவங்களுக்கு மத்தியில் படைக்கப் பட்டுள்ளான்.
யார், யார் எந்த, எந்த விசயங்களில் பலகீனமோ அந்த விசயங்களை ஷைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதர்களை பாவத்தின் பக்கம் தூண்டக் கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் பாவங்களில் ஆபாசமே முதன்மையானதாக பரவியுள்ளது.
யாருமே தப்பிக்க முடியாத அளவிற்கு வீட்டிற்குள் இருந்து வீதி எங்கும் ஆட்டிப் படைப்பதை காணலாம்.
ஆபாசங்களை மனிதன் விலை கொடுத்து வாங்கியுள்ளான்.
மனிதன் விரும்பியோ விரும்பாமலோ தான் விலைக் கொடுத்து வாங்கிய கைபேசி (fபோன்) மூலமாக பலவிதமான ஆபாசங்களைப் பார்த்து, தன்னை அதன் பக்கம் இழக்க கூடிய ஓர் அவல நிலையை காணலாம்.
விளம்பரங்களில் ஆபாசம், விளையாட்டுகளில் ஆபாசம், சுவரில் ஒட்டப் படும் சுவரொட்டிகளில் ஆபாசம், அரை குறை ஆடை அணிந்து வீதிகளில் ஆபாசம், சீரழிக்கும் சினிமாக்களில் ஆபாசம் திரும்பும் இடமெல்லாம் ஆபாசம் மலிந்து இருப்பதை காணலாம்.
எனவே இந்த ஆபாசங்களிலிருந்து தவிர்ந்து கொள்வது எப்படி என்ற வழிக் காட்டியாக இந்த கட்டுரை எழுதப் படுகிறது.
ஒரு மனிதன் எந்த விசயத்தில் அடிமையாகிவிடுகிறானோ அந்த விசயத்தில் இருந்து வெளியேறுவது மிகவும் கஷ்டமான காரியமாகும்.
மக்கத்து மண்ணில் இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன் ஜாஹிலியா காலம் என்ற மடமையான காலத்தில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
பலவிதமான பாவங்களுக்கு மத்தியில் ஆபாசத்தின் உச்சக்கட்டத்தில் மிதந்தார்கள்.
பெண்களுக்கு எந்த விதமான உரிமைகளையும், சலுகைகளையும் கொடுக்காமல், பெண்களை தேகத்திற்கு போகப் பொருளாக மாத்திரம் பயன்படுத்தினார்கள்.
ஒரு கையில் மது என்றால் மறு கையில் மாது இருப்பாள். மது உச்சந்தலைக்கு ஏறிவிட்டால் தாய்க்கும், தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.
மேலும் அடிமை என்ற பெயரில் பெண்களை தன் இச்சைக்கு இறையாக்கினார்கள்.
மேலும் எந்த ஆணின் மூலம் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கிறதோ அந்த ஆணிடம் தன் மனைவியை அனுப்பி, மனைவி கர்ப்பம் தரிக்கின்றவரை மாற்றானுக்கு மனைவியாக கணவனே முன் வந்து கொடுத்து விடுவார்.
இப்படி பலவிதமான ஆபாசமான அசிங்கங்களுக்கு மத்தியில் சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல இஸ்லாம் மக்கத்து மண்ணில் பரவ ஆரம்பித்தது.
இஸ்லாத்தை கவர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்ற தோழர்களை உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பக்குவப்படுத்தி அவர்களை உலகம் போற்றும் உத்தமர்களாகவும், நாடாளும் மன்னர்களாகவும், இறையச்சத்திற்கு முன்மாதிரியாகவும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் மாற்றிக் காட்டினார்கள்.
ஆபாசத்தில் புரண்டவர்கள் அந்த அருவருப்பான செய்தியை கேட்டாலே தூர ஒதுங்கிப் போகக்கூடிய நிலையை நபியவர்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்கள்.
ஆபாசத்தின் பின்னணி...
...............................................................
ஒவ்வொரு விசயத்துக்கும் ஒருவர் பின்னணியாக இருப்பார். அந்த வரிசையில் பாவங்களுக்கு பின்னணியாக ஷைத்தான் இருக்கின்றான். குறிப்பாக மானக்கேடான விசயங்களை ஷைத்தான் தூண்டுகின்றான் என்பதை குர்ஆன் உறுதிப்படுத்துகின்றது.
"ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்தி, தீயவற்றை (மானக்கேடானவற்றை) தூண்டுகின்றான்"...(2:268)
ஷைத்தான் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஆபாசங்களை தூண்டுகின்றான்.
"அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 4386. )
ஷைத்தான் மனிதனோடு பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்து இருக்கின்றான்.
"மேலும் விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)
விபச்சாரத்தில் ஈடுபடுவது என்பது ஒரு பகுதி, அதையும் தாண்டி அந்த விபச்சாரத்தை ஈர்க்கக்கூடிய செயல்பாடுகளின் பக்கம் நெருங்காதீர்கள் என்று இஸ்லாம் எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டுகின்றது.
இதைப் படித்தால் அல்லது இதை வாசித்தால் அல்லது இதைக் கேட்டால் எனது உள்ளம் மானக்கேடான செயலின் பக்கம் தூண்டப் படும் என்ற நிலை இருக்கும் என்று சொன்னால் அப்படியான விஷயங்களில் அறவே ஈடுபடக் கூடாது. அவைகளை முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
(ஆதாரம் புகாரி 6243)
மானக்கேடான விசயங்களுக்கு அடிப்படையாக அமைவது நமது கண்களும், நமது நாவும், நமது சிந்தனையுமாகும். எனவே அவைகளை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தினால் அனைத்தும் நலவாக இருக்கும். அவைகளை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தினால் அனைத்தும் தீயவைகளாக இருக்கும்.
" முஃமினான ஆண்களிடம் அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே !) நீ கூறுவீராக ! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும் நிச்சயமாக அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
மேலும் முஃமினான பெண்களிடம் அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் கூறுவீராக !...(24:30,31)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தமது பார்வைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அல்லாஹ் நமக்கு அழகிய முறையில் வழிகாட்டுகின்றான். ஏனென்றால் கூடுதலான ஆபாசங்கள் இந்த பார்வைகள் மூலமாகவே நடக்கின்றன.
பொதுவாக மனிதன் மறுமை நாளின் விசாரணைகளை பயந்து இந்த உலகத்தில் சகல விதமான காரியங்களிலும் ஈடுபட வேண்டும். ஏனென்றால் நமது உறுப்புகளே மறுமையில் நமக்கு எதிராக சாட்சியாளராக நிற்கும் என்ற எச்சரிக்கையை அல்லாஹ் குர்ஆனுடாகவும், நபி அவர்கள் ஹதீஸின் மூலமாகவும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்கள்.
" இறுதியாக அவர்கள் அங்கு வந்ததும், அவர்களது செவிப்புலனும் அவர்களது பார்வைகளும் அவர்களது தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். (41:20)
மேலும்" இன்றைய தினம் அவர்களது வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து அவர்களது கைகள் நம்முடன் பேசும். மேலும் அவர்களது கால்கள் சாட்சி கூறும்." (36:65)
மேலும்" ... அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும்...( முஸ்லிம் -5678)
எனவே இந்த உலகத்தில் பகிரங்கமாக மானக்கேடான விசயத்தில் ஈடுபட்டாலும் சரி அல்லது இரகசியமான முறையில் மானக்கேடான விசயத்தில் ஈடுபட்டாலும் சரி யாருமே பார்க்காவிட்டாலும் கூட மறுமை நாளில் நமது சகல உறுப்புகளும் நமக்கு எதிராக சாட்சி சொல்லும் என்ற பயத்தில் இவைகளை முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மானக்கேடான விஷயத்தை பார்க்கும்போது அல்லது கேட்கும் போது அல்லது சிந்திக்கும் போது எனது உறுப்புகள் எனக்கு எதிராக மறுமையில் நிற்கும் என்ற பயத்தில் அப்படியான பாவங்களை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும்.
தொழுகையை சரியான முறையில் தொழும் போது, இப்படியான மானக்கேடான விசயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள முடியும்.
" ... நிச்சயமாக தொழுகை மானக்கேடானதையும், வெறுக்கத்தக்கதையும் விட்டும் தடுக்கும்...(29:45)
நபியவர்கள் வழிக் காட்டியதின் அடிப்படையில் இறையச்சத்தோடு தொழுகையை தொடர்ந்து தொழும் போது மானக்கேடான, அசிங்கங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள முடியும். ஏன் என்றால் பாவங்களை விட்டும் தடுக்கும் சக்தி தொழுகைக்கு உள்ளது.
உதாரணமாக ஆரம்ப காலத்தில் வாழ்ந்த ஒரு வணக்கசாலி மனிதர் ஜூரைஜ் என்பவரைப் பற்றி நபியவர்கள் சொல்லும் போது அவர் ஒரு வணக்கசாலி அவரை தவறான முறையில் அடைய ஒரு விபச்சாரி முயற்சி செய்தும் அவள் தோற்று போய் விட்டால்... (ஆதாரம் முஸ்லிம் 4986)
இது ஒரு நீண்ட ஹதீஸாகும். அதில் பல படிப்பினைகள் இருந்தாலும், முக்கியமாக இறைவனின் கடமைகளை நிறைவாக நடைமுறைப் படுத்தினால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உறுதிப் படுத்துகிறது.
பாவம் செய்வதற்கு நூறுவீதம் சூழல்கள் சாதகமாக இருந்ததும், தனியாக இருந்த ஜூரைஜ் அவர்களிடம் இவளின் ஆபாச ஆசை வார்த்தைகள் எடுபடவில்லை என்றால், அதற்கு இறை வணக்கமே காரணமாகும்.
வணக்கத்தின் மூலம் உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொண்டால், எந்த ஆபாசஙகளும் உள்ளத்தை தாக்காது.
மேலும்
" யார் தனது இரண்டு தொடைகளுக்கு மத்தியில் உள்ளதையும், இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் பாதுகாப்பதில் உத்தரவாதம் தருகிறாரோ அவருக்காக சுவனத்தை பெற்று தருவதில் நான் உத்தரவாதம் தருகிறேன் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி 6807)
பாவங்களுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த நாவையும், மர்மஸ்தானத்தையும் சுட்டிக் காட்டி இதை பாதுகாத்தால் சுவனம் கிடைக்கும் என்பதை இஸ்லாம் நமக்கு உறுதிப் படுத்துகின்றது என்றால், சுவனத்திற்காக நாம் நம்மை தயார் செய்ய வேண்டும்.
பாவங்களை காணும் போது இந்த ஹதீஸை நம் கண் முன்னே கொண்டு வந்து, நான் பாவத்தில் ஈடுபடக் கூடாது என்று அதிலிருந்து தவிர்ந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும்
"நபியவர்கள் ஸஹாபாக்களுடன் இருக்கும் போது ஓர் இளைஞர் வந்து யா ரஸூலுல்லாஹ் ! எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள் என்றார். அப்போது ஸஹாபாக்கள் கோபம் அடைந்தார்கள். இறுதியில் நபியவர்கள் அந்த இளைஞரை தனக்கு பக்கத்தில் அமர வைத்து, உனது தாயுடன் அல்லது உனது மகளுடன் அல்லது உனது சகோதிரியுடன் அல்லது உனது சாச்சியுடன் அல்லது உனது மாமியுடன் யாராவது விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீரா ? அதற்கு அந்த இளைஞர் நான் விரும்பமாட்டேன் என்றார். அதை போல தான் மற்றவர்களும் தனது தாயுடனோ அல்லது தனது மகளுடனோ அல்லது தனது சகோதிரியுடனோ அல்லது தனது சாச்சியுடனோ அல்லது தனது மாமியுடனோ விபச்சாரம் செய்ய விரும்ப மாட்டார்கள். என்று நபியவர்கள் கூறி விட்டு, அவரது நெஞ்சின் மீது கை வைத்து பின் வருமாறு பிரார்த்தித்தார்கள்.
யா அல்லாஹ் ! இவருடைய பாவத்தை மன்னிப்பாயாக ! இவரது உள்ளத்தை சுத்தப் படுத்துவாயாக ! இவரது மர்மஸ்தானத்தை ( பாவத்தை விட்டும்) பாதுகாப்பாயாக ! அதன் பிறகு ஸினா என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு அருவருப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். (ஆதாரம் அஹ்மது)
மானக்கேடான பாவத்தை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு ஓர் அழகான வழிக் காட்டல். அதாவது பாவமான காட்சிகளை பார்க்கும் போதோ அல்லது பாதையில் செல்லும் போதோ ஒரு பெண்ணை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால், எனது மனைவியை அல்லது எனது மகளை பிறர் தவறாக பார்த்து இரசிப்பதை நான் விரும்ப மாட்டேன். இவரும் ஒருவருக்கு மனைவியாக இருப்பார் அல்லது ஒருவருக்கு மகளாக தானே இருப்பார் என்று பார்வையை திருப்பிக் கொள்ள வேண்டும்.
இப்படி பெண்களை பார்க்கும் போது நினைத்தால் இப்படியான ஆபாசத்தில் இருந்து எங்களை பாதுகாத்து கொள்ள முடியும். குறிப்பாக அடிக்கடி இப்படியான அசிங்கங்களை பார்க்க மாட்டேன் என்று மனதில் சபதம் எடுத்துப் பாருங்கள் உங்களிடம் நீங்கள் ஒரு மாற்றத்தை காண்பீர்கள்.
*****
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions