தோன்றின் எடுப்போடு தோன்றுக!
மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இத்தொடரில் பார்த்து வருகிறோம். முந்தைய தொடர்களில் புன்னகை, அன்பளிப்பு வழங்குதல், பிறர் பேசுவதை கவனத்துடன் செவியேற்றல் ஆகியவை பிறரின் நேசத்தை அடைவதற்கு அவசியமான வழிமுறைகளாக அமைந்திருப்பதைக் குறித்து பார்த்துள்ளோம்.
இத்தொடாரில், ஒருவரின் நல்ல தோற்றமும் பிற மனிதர்களை ஈர்ப்பதற்கும் அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கும் சிறந்த சாதனமாக அமைவது குறித்து பார்ப்போம். ஒருவருடைய சுத்தமான, எடுப்பான வெளித்தோற்றம் மற்றவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும். அவர்களின் விருப்பத்தையும் பெற்றுத் தரும். அலங்கோலமான தோற்றம் பிறரிடமிருந்து கிடைக்க வேண்டிய மதிப்பை இழக்கச் செய்யும். அதனால் அவர்களின் திருப்தியும் கிடைக்காமல் போகும்.
தோற்றம் என்று சொன்னாலே அதில் முதலாவது வருவது ஆடைதான். ஒருவரை நாம் பார்க்கிறோம் என்றால் அவருடைய ஆடை நினைவுக்கு வரும். ‘ஆள் பாதி ஆடை’ எனும் தமிழ் முதுமொழியிலும் ஆடையின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. நமக்கு கிடைக்கும் மதிப்பில் ஒரு பாதி ஆடையை வைத்தே கிடைக்கிறது என்ற கருத்து இந்த முது மொழியில் உள்ளடங்கி இருக்கிறது.
ஆடை எப்படி இருக்க வேண்டும்?
நாம் உடுத்தும் ஆடை ஒழுங்காகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூராக ஆக்கபடுவதின் துவக்கமாக ‘ஓதுவீராக!’ என்று தொடங்கும் ‘அலக்’ அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் இறைவனின் புறத்திலிருந்து வானவரால் இறக்கப்பட்டன. இவ்வாறு இறக்கப்பட்டதைத் தொடர்ந்து இறைவழியில் மக்களை அழைக்க வேண்டிய தீர்க்கதரிசிதான் அவர்கள் என்று அறிவுறுத்தப்பட்டார்கள்.
இதற்குப் பின் மிகச் சிறிய கால இடைவெளிக்குப் பின் இறைச் செய்தியை எடுத்துச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டு இறக்கப்பட்ட வசனங்களைப் பாருங்கள் : “(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக! மேலும் உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம் ஆடைகளை தூய்மையாக்கிக் கொள்வீராக! மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி)விடுவீராக!” திருக்குர்ஆன் 74 : 1 – 5
இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம், முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக ஆக்கப்பட்ட பின் மக்களிடம் சென்று இறைச் செய்தியை சொல்லுங்கள் என்று முதல் முதலாக இறைவன் உத்தரவிட்ட போது ஆடை தூய்மையாக்கி இருக்கும் நிலையில் தான் செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.
ஆக இந்த உத்தரவுப்படி இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக சென்ற நபி (ஸல்) அவர்கள் தூய்மையான ஆடையோடுதான் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிகிறோம். தூய்மையான ஆடையுடன் மக்களை சந்திப்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது.
நாம் சிலரைக் காணும் போது அவர்களின் உடை நம் கவனத்தை ஈர்க்கிறது. சிலரை காணும் போது அவர்களின் ஆடையினாலேயே அவர்களுக்கு மரியாதை செய்யும் எண்ணம் தோன்றும். அப்படியானால் இதில் நாம் ஏன் கவனக் குறைவாக இருக்க வேண்டும்?
நான் இறைபக்தி கொண்டவன்; நன்னடத்தை கொண்டவன், அதனால் என் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தத் தேவையில்லை என்கிற சிந்தனையை சன்மார்க்கம் ஆதரிக்கவில்லை.
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள் : நான் மோசமான உடையணிந்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் என்னிடம், “உமக்கு ஏதேனும் செல்வம் இருக்கிறதா?” என்று வினவினார்கள்.
நான் : ஆம் எல்லாச் செல்வமும் உள்ளது!
நபி : எந்த வகைச் செல்வம்?
நான் : ஒட்டகங்கள், ஆடுகள், குதிரைகள், அடிமைகள் ஆகிய செல்வங்களை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறான்!
நபி : இறைவன் உமக்கு செல்வத்தை வழங்கியிருக்கும் போது, அவனுடைய அருட்கொடைகள் மற்றும் அவனுடைய ஈகையின் பிரதிபளிப்பு உம்மீது காணப்பட வேண்டும்!
நூல் : சுனனுந் நஸாயீ – 5224 மற்றும் அபூதாவூது.
“நறுமணம் கொண்ட சுத்தமான ஆடையணிந்த, வணக்க வழிபாட்டில் ஈடுபடும் இளைஞனே என்னை கவர்பவன்” என்று கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சொன்னதாகசில நூல்களில் காணப்படுகிறது.
ஒரு இளைஞன் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது நல்ல விசயம். ஆனால் அது மட்டுமே உமர் (ரலி) அவர்களை ஈர்க்கவில்லை. தூய உடையணிந்து நல்ல தோற்றத்துடன் வணக்க வழிபாட்டில் ஈடுபடும் இளைஞனே அவர்களை ஈர்த்துள்ளான்.
தலைவரும் வழிகாட்டியுமான உமர் (ரலி) அவர்களை உடையினால் ஏற்படும் நல்ல தோற்றம் வயப்படுத்தி இருக்கிறது. மற்றவர்களை இலகுவாக வயப்படுத்துமல்லவா?
நாம் உடுத்தும் உடை பிறரை விரும்பும் விதத்தில் அமைய வேண்டும் என்பதற்கு விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. நாம் அணியும் ஆடை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக வேண்டும். நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!
நம்மைப் பற்றி அறியாதவர்கள் நம்முடைய ஆடையை வைத்தே நம்மை மதிப்பார்கள். அதனால், அது பிறர் முகம் சுளிக்கும் விதத்தில் அமைந்திருக்கக் கூடாது. முக்கியமாக நாம் அணிந்திருக்கும் ஆடை அழுக்காக இருக்கக் கூடாது! அழுக்கான ஆடையுடன் இருந்த ஒரு மனிதரைக் கண்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தனது ஆடையை துவைத்துக் கொள்வதற்கு இவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று (கடிந்து கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். நூல் : அபூதாவூது 4062
நம்முடைய தோற்றத்தில் பெரும் பகுதியை உடையே வெளிப்படுத்துவதால் உடை குறித்து நாம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்! அடுத்து, நம் உடலில் வெளிப்படையாகத் தெரியும் பகுதிகள் விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தலைமுடியை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். முறையாக தலைவாரி இருக்க வேண்டும். இதுவெல்லாம் கூட முக்கியம்தான்.
தலைமுடிகள் கலைந்து பரட்டைத் தலையுடன் இருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், தனது தலைமுடியை படிய வைக்கக் கூடிய (எண்ணெய், சீப்பு போன்ற) எதுவும் இவருக்கு கிடைக்கவில்லையா? என்று (கடிந்து கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். நூல் : அபூதாவூது
யாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதை கண்ணியப்படுத்தட்டும்! என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். நூல் : அபூதாவூது
அதாவது அதனை ஒழுங்காகவும் சீவியும் வைத்திருக்க வேண்டும் என்பது இதன் கருத்து.
அழகாயிருப்பதை இறைவன் விரும்புகிறான். ஒருவரின் இதயத்தில் அணு அளவு பெருமை இருந்தாலும் அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், “ஒரு மனிதர் தனது ஆடையும் செருப்பும் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – (இது பெருமையாகுமா)” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நிச்சயமாக இறைவன் அழகானவன் அவன் அழகாக இருப்பதை விரும்புகிறான். பெருமை என்பது உண்மையை ஏற்க மறுப்பதும் மனிதர்களை தாழ்வாக கருதுவதுமாகும்” என பதிலளித்தார்கள். நூல் : முஸ்லிம்
இங்கு இறைவன் அழகாக இருப்பதை விரும்புகிறான் என்று சொல்லப்படுவது உடல் மற்றும் முகத்தில் இருக்கும் அழகை குறித்து அல்ல. ஒருவர் தாமாக முயற்சித்து தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் நல்ல தோற்றத்தையே குறிக்கும்.’
தீர்க்கதரிசிகளின் நடைமுறை
மக்கள் முன் நல்ல தோற்றத்துடன் தோன்றுவது நபிமார்களின் நடைமுறை. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : “நல்ல வழிமுறை, நல்ல தோற்றம், நடுநிலை ஆகியவை நபித்துவத்தின் இருபத்தைந்து பாகங்களில் ஒரு பாகமாகும்.”
நூல் : அபூதாவூது 4776
நபித்துவம் (நுபுவ்வத்) என்பது இறைச் செய்தியை பெறும் தகுதியாகும். அதன் முழுமையான நிலை நபி என்றழைக்கப்படும் தீர்க்கதரிசிகளிடம் இருந்தது. இறைச் செய்தி பெற்று மக்களை வழிநடத்திய நபிமார்கள் மக்கள் முன்னிலையில் நல்ல தோற்றத்துடனேயே வருவார்கள் அதனையே நீங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இங்கு நபிகள் நாயகம் நமக்கு சொல்ல வரும் செய்தி.
நடைமுறைப்படுத்துவோம் மனங்களை கவர்வோம்!
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்…
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil