ஆய்வுகள்

May 15, 2017

ரமளானை பயனுள்ளதாக்குவோம்

நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தை பொறுத்தே அமைகிறது. நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும், அதற்கு நன்மை கொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படை. அதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லை என்பது தான்.

இமாம் இப்னுல் முபாரக் அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ அற்பமான செயல்களைக்கூட நிய்யத் மிகப்பெரியதாக மற்றிவிடுகிறது, எத்தனையோ மிகப்பெரிய செயல்களைக்கூட நிய்யத் அற்பமானதாக மற்றிவிடுகிறது. (பார்க்க இமாம் இப்னு ரஜப் அல்ஹம்பலி அவர்களின் ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் பக்கம் 69)

சரியான நிய்யத் தான் அச்செயலை நன்மையானதாக மாற்றும் எனவே நாம் நிய்யத்தை சீராக்குவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இமாம் சுஃப்யானுஸ்ஸவ்ரி அவர்கள் கூறினார்கள்: என்னுடைய நிய்யத்திற்கு நான் சிகிட்ச்சை அளிப்பதற்கு சிறமப்பட்டதைப் போன்று வேறு எதற்கும் நான் சிறமப்பட்டதில்லை. ஏனெனில் எனது நிய்யத் அடிக்கடி புறண்டுகொண்டே இருக்கிறது. (பார்க்க இமாம் இப்னு ரஜப் அல்ஹம்பலி அவர்களின் ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் பக்கம் 69)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நிய்யத்தையே எல்லா செயல்களுக்கும் அடிப்படை என்று கூறியுள்ளார்கள்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள். ஸஹீஹுல் புஹாரி 1

ரமளானை அடைவதற்கு முன் நிய்யத்தை சீர்செய்வோம்.

நபியவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகிறான், எனது அடியான் நனமை செய்யவேண்டுமென்று எண்ணினால் நான் அவனுக்கு நன்மையை எழுதிவிடுகிறேன் . அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலி , நூல் ஸஹீஹ் முஸ்லிம்: 129.

ரமளானின் முழுநன்மையும் பெற பின் வருமாறு நாம் நிய்யத் கொள்வோம்:

இந்த ரமளானில் தக்வாவை அடையவேண்டுமென்று நிய்யத்கொள்ளவேண்டும்.

நோன்பின் நோக்கமே இறையச்சம் தான், அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகக்கூடும் . அல்குர்ஆன் 2:183

அல்லாஹ் இவ்வசனத்தில் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள் என்று கூறாமல், ஆகக்கூடுமென்று கூறுகிறான். எனவே நமது நிய்யத்து தான் நாம் உண்மையான இறைச்சமுடையவரா இல்லையா என்பதை தீர்மனிக்கும். பாவங்களை விட்டொழித்து எல்லா நிலையிலும் அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்ற இறையச்ச உணர்வை நாம் இந்த ரமளானில் வளர்த்துக்கொள்ளவேண்டும் .

இந்த ரமளானில் குர் ஆனை அதிகமாக ஓதவேண்டு மென்று நிய்யத்கொள்ளவேண்டும்.

குர்ஆன் அருளப்பட்டதன் மூலம் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது.
ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடியதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185

நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி 6.

நபி(ஸல்) அவர்களின் மரணித்திற்கு முந்திய ரமளானில் இருமுறை ஜீப்ரீல் அவர்களிடம் ஓதிகாட்டினார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரமளானில் நாமும் குர்ஆனை பலமுறை ஓதவேண்டுமென்று நிய்யத் கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க எண்ணம் கொள்வோமாக.

உண்மையான முறையில்பவமன்னிப்புக்கோரவேண்டுமென்று நிய்யத்கொள்ளவேண்டும்

ரமளானை பாவங்களிலிருந்து விலகி பாவமன்னிபுக்கோருவதற்கான சிறந்ததோர் மாதமாக அல்லாஹ் அக்கியுள்ளான்
நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஸஹீஹுல் புஹாரி 38.

இம்மாதத்தை அடைந்த பின்னரும் யார் தமது பாவங்களுக்கான மன்னிப்பை பெறவில்லையோ அவன்தான் மனிதர்களில் மிகப்பெரிய நஷ்டவாளி.

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் அவர்கள், யார் ஒருவர் அவரிடம் எனது பெயர் நினைவுகூறப்பட்ட பின்னரும் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் இழிவடையட்டும். யார் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்த பின்னரும் அவனது பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் ரமளான் அவனை விட்டும் கடந்து விடுகிறதோ அவனும் இழிவடையட்டும் .வயது முதிர்ந்த பெற்றோர் தன்னிடமிருந்தும் அவர்கள் மூலமாக யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவனும் இழிவடையட்டும் என்று கூறினார்கள் என அபூஹுரைரா அவர்கள் அறிவித்தார்கள் நூல் ஜாமிஉத் திர்மிதி 3545.

அல்லாஹ் கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற முறையில் அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்.  – அல்குர்ஆன் 66:8

கலப்பற்ற முறையிலான தவ்பா என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கையில் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக வருந்தி வரும்காலாத்தில் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டு நிகழ்காலத்தில் பாவங்களை விட்டு தூரமாவது தான் தவ்பதுன் நஸூஹா என்பது என்று கூறினார்கள். ( பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர்)

நன்மைகளை முழுமையாக அடைவதர்க்கு நிய்யத் கொள்ளவேண்டும்

ரமளான் மாதம் நன்மையின் மாதம் இதனை சரியாக பயன்படுத்தி நோன்பு நோற்பது, ஃபர்ளான, உபரியான தொழுகையைத் தொழுவது, குர்ஆன் ஓதுவது, அதிகமாக திக்ருகளைச்செய்வது, துவா செய்வது, தர்மம்செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டும் என்று நிய்யத் கொள்ளவேண்டும்

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும்,அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள்,பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்! என்று உரக்கச் சொல்வார். ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ்வால் நரகிலிருந்து விடுவிக்கப்படும் மக்கள் உள்ளனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:ஜாமிஉத் திர்மிதி682,சுனனு இப்னுமாஜா1642.

நம்மை சீர்படுத்த வேண்டுமென்று நிய்யத்கொள்வோம்

நோன்பு என்பது பசியும் தாகமுமல்ல இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதர்க்காத்தான் என்பதை நாம் அறிந்தோம். அவ்வாறு இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும் நாம் நமது குணத்தை அழகாக்க வேண்டும். இப்படிப்பட்ட எண்ணமில்லாமல் நோன்பு நோற்பதனால் அந்நோம்பினால் எவ்வித பயனுமில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள்
பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி1903.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்யான பேச்சைiயும், பொய்யான நடவடிக்கைகளையும். அறியாமையையும் கைவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ஸஹீஹுல் புஹாரி6057.

லைலத்துல் கத்ரை அடைய நிய்யத் கொள்ளவேண்டும்

புண்ணியமிக்க ரமளானின் அனைத்து நன்மைகளையும் , இன்னும் ஒரு மனிதனின் ஆயுள் அளவிற்கான நன்மைகளையும் அடைவதற்கு பொருத்தமான ஒர் இரவுதான் லைலத்துல் கதர் இரவு என்பது. அந்த இரவில் முழு உற்சாகத்தோடும் ஈமானிய உணர்வோடும் இபாதத்தில் ஈடுபடவேண்டுமென்று நாம் நிய்யத் கொள்ள வேண்டும். அந்த நாளை நாம் தவறவிடக்கூடாது. அல்லாஹ் கூறூகிறான்:

நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமிக்க) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் இறக்கி வைத்தோம். கண்ணியமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?அதில் வானவர்களும் ரூஹும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள். அந்த இரவு சாந்தி நிலவக்கூடியதாகும் ; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். அல்குர்ஆன் 97:1-5

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு ரமளான் மாதம் வந்துள்ளது அது பரகத்பொருந்திய மாதமாகும். அதில் அல்லாஹ் நோன்பை உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதில் வானத்தின் வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், அழிச்சாட்டியம் செய்யக்கூடிய ஷைத்தான் விலங்கிடப்படுவான். அல்லாஹ்விற்கு அதில் ஓர் இரவுள்ளது அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும், யார் அதில் நன்மைகள் இழந்துவிடுகிறாறோ அவர் அனைத்து நன்மையையும் இழந்தவர் ஆவார். அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் சுனனுந்நஸாயி 2106.

இந்த ரமளானை நாம் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள ரமளானில் கடைபிடிக்க உள்ள அனைத்து செயல்களிலும் நிய்யத்தை சீராக்கி நன்மையை பெறுவோமாக!

 

Admin
3161 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions