ஆய்வுகள்

February 18, 2014

மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா?

தற்காலத்தில் தமிழ்நாட்டில் சிலர் மார்க்கப் பணிக்கு ஊதியம் பெறக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கியிருப்பதோடு ஊதியம் பெறுவோரைக் கடும் வார்த்தைகளாலும் விமர்சிக்கிறார்கள். நாமறிந்தவரை இந்தச் சகோதரர்களின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும் இவர்களது கருத்தை மார்க்க ஆதாரங்களின் பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

 ஊதியம் கூடாது என்போரின் ஆதாரங்கள்:

மார்க்கக் கல்வியைக் கற்ப்பிக்க ஊதியம் பெறக்கூடாது என்று முற்கால ஹனஃபி அறிஞர்களும் வேறு சிலரும் கூறுகின்றனர். அவர்கள், குர்ஆனைக் கற்பிக்கக் கூலி பெறுவதைத் தடுக்கும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

ஊதியம் பெறுவது ஆகுமானது என்ற கருத்துடைய ஹதீஸ் விளக்கவுரை நூல்களிலேயே ஆகுமானதல்ல என்போரின் கூற்றுகளும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக இமாம் பைஹகீ (ரஹ்) தமது சுனனுல் குப்றாவில், குர்ஆனைக் கற்ப்பிக்கவும் அதைக் கொண்டு ஓதிப்பார்கவும் ஊதியம் பெறுவது பற்றிய பாடம் (பாபு அக்தில் உஜ்ரத்தி அலா தஃலீமில் குர்ஆனி வர்ருக்யத்தி பிஹி) என்ற தலைப்பையும், அதை அடுத்து, அதற்க்கு ஊதியம் பெறுவதை வெறுத்தவர் பற்றிய பாடம் (பாபு மன் கரிஹ அக்தல் உஜ்ரத்தி அலைஹி) என்ற தலைப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தத் தலைப்பில் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனைக் கற்பிக்கக் கூலி பெறுவதைக் கண்டித்ததாக வரும் மூன்று ஹதீஸ்களை பதிவு செய்திருக்கிறார்கள். இவை செயல்படுத்துகிற அளவுக்கு வலுவானவை அல்ல என்பதையும் அங்குக் குறிப்பிடுகிறார்கள். (பைஹகீ 6/124)

இதே போல் இமாம் இப்னு அபீஷைபாவும் தனது முசன்னஃபில், ஆசிரியருக்கான ஊதியம் பற்றி (ஃபீ அஜ்ரில் முஅல்லிமி) என்ற தலைப்பில் மார்க்கக்கல்வி கற்பிக்க ஊதியம் பெறுதல் கூடும் என்று ஸஹாபாக்கள், தாபிஈன்கள் கூற்றாகப் பல செய்திகளை பதிவுசெய்துள்ளார்கள்.

அதை அடுத்து, ஆசிரியருக்கான கூலியை வெறுத்தவர் (மன் கரிஹ அஜ்ரல் முஅல்லிமி) என்ற தலைப்பையும் தந்து அதில் இரு ஹதீஸ்களையும் (அதில் ஓன்று இமாம் பைஹகீ குறிப்பிட்டது) ஸஹாபாக்கள், தாபிஈன்களின் கூற்றுகளையும் பதிவுசெய்துள்ளது. (முஸன்னஃப் இப்னு அபீஷைபா 5/97,98)

அந்த ஹதீஸ்களும் பலவீனமும்

எமனைச் சேர்ந்த ஒருவருக்கு உபை இப்னு கஅப் (ரலி) குர்ஆனைக் கற்றுக்கொடுத்தார்கள். அவர் ஒரு வில்லை அன்பளிப்புச் செய்தார். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “அதை நீ பெறுவதென்றால், நரகிலிருந்து ஒரு வில்லை அதற்குப் பகரமாகப் பெறுஎன்று கூறினார்கள். (பைஹகீ 6/126)

இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே இது பலவீனமான அறிவிப்புகளில் ஒரு வகையான (முன்கத்திஃ) அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் என்கிறார்கள். இக்கருத்தில் வரும் அபூதர் அறிவிப்பையும் பதிவுசெய்துஅதுவும் பலவீனமே என்கிறார்கள்இந்த ஹதீஸ் அடிப்படையே இல்லாதது என்று துஹைம் எனும் ஹதீஸ்துறை அறிஞர் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். (பைஹகீ 6/126)

உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) கூறுகிறார்கள்: திண்ணைத் தோழர்கள் சிலருக்கு எழுதுவதையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தேன். அவர்களில் ஒருவர் எனக்கு ஒரு வில்லை அன்பளிப்புச் செய்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் தெரிவித்தபோது, “இந்த வில்லுக்குப் பகரமாக நரக நெருப்பிலிருந்து ஓன்று உன் கழுத்தில் மாட்டப்பட வேண்டுமென நீ விரும்பினால் அதை ஏற்றுக்கொள்என்றார்கள்." (இப்னுமாஜா 2157)

இதையே இமாம் பைஹகீ (ரஹ்) தமது சுனனுல் குப்ராவில் (6/125) பதிவுசெய்துவிட்டு, இதில் இடம் பெரும் அஸ்வத் இப்னு ஸஃலயி என்கிற அறிவிப்பாளர் மட்டும் (மஜ்ஹுல்) அறியப்படாதவர் என்றும், அவர் அறிவித்ததாக இது தவிர வேறு ஹதீஸை நாம் காணவில்லை என்று இதன் தரம் பற்றி அறிஞர் இப்னுல் மதீனி அவர்களின் கூற்றுப்படி இந்த ஹதீஸ் பலவீனம் என்கிறார்கள்.

குறை கூறப்பட்ட அறிவிப்பாளர் பகிய்யா மூலமும் இச்செய்தி அறிவிக்கப்படுவதாகவும், அறிவிப்பாளர் பெயரில் முரண்பாடு உள்ளதாகவும் மேற்கண்ட ஹதீஸை அடுத்து இமாம் பைஹகீ பதிவு செய்கிறார்கள். அத்துடன் கூலி பெறுவதை அங்கீகரிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் (ரலி) ஆகியோரது ஹதீஸ்கள் இதனை  விட வலுவானது என்றும் எழுதுகிறார்கள்.

கூலி ஆகுமானது என்ற கருத்தில் மேற்கண்ட ஹதீஸ்கள் தொடர்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) எழுதுவதாவது:

"பொதுவாக (கூலி பெறுவதைத் தடைசெய்யும் தெளிவான வாசகம் இந்த ஹதீஸ்களில் இல்லை. மாறாக, (அதை அங்கீகரிக்கும்) ஆதாரப்பூர்வ ஹதீஸ்களுக்கு ஒத்துவருகிற விதத்தில் கருத்துகொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளன. இவற்றில் ஆதாரத்திற்கு நிற்கக்கூடிய ஹதீஸ் எதுவுமில்லை. எனவே ஆதாரப்பூர்வ ஹதீஸ்களுக்கு இவை குறுக்கீடு செய்ய முடியாது." (ஃபத்ஹுல் பாரி, பாபு மாயுஃத்தா ஃபிர்ருக்யத்தி எனும் புகாரி பாடம் 7/118)

கருத்தில் வராத ஆதாரங்கள்

குர்ஆனை ஓதுங்கள். அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் அதிகப்படுத்த விரும்பாதீர்கள். அதனைப் புறக்கணிக்காதீர்கள். அதிலே வரம்பு மீறாதீர்கள்(அஹ்மத் 14986)

யார் குர்ஆனை ஓதுகிராரோ அவர் அதன் மூலம் அல்லாஹுவிடமே கேட்கட்டும்.   சில கூட்டத்தினர் வருவார்கள், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள், அதன் மூலம் மனிதர்களிடம் கேட்பார்கள்(திர்மிதி 2841, அஹ்மத் 19039)

உண்மையில் இந்த ஹதீஸ்கள் குர்ஆனை ஓதிவிட்டு, அதற்காக உலகப் பலனை எதிர்பார்ப்பதைத்தான் தடுக்கிறது. உதாரணமாக, குர்ஆனை ஓதி அதன் மறுமைப் பலனை இறந்த ஒருவருக்கு சேர்ப்பதாகக் கூறி அதற்க்குக் கூலியாக பணமோ, பொருளோ பெறுவதைக் குறிப்பிடலாம். ஒதியதற்கான கூலியை மறுமையில் அல்லாஹுவிடம் எதிர்பார்க்காமல், இன்னொரு மனிதனுக்கு அதன் நன்மையைச் சேர்த்ததாகக் கூறி, அதற்குப் பகரமாகச் சாப்பாடோ, பணமோ பெறுவது மார்க்கம் அங்கீகரிக்காத செயலாகும். இது போன்றதையே இந்த ஹதீஸ்கள் தடுக்கின்றன.

ஆனால் குர்ஆனையும் மார்க்கக்கல்வியையும் கற்ப்பிக்கும் ஆசிரியர் நிலை இதிலிருந்து வேறுபட்டது.

தவறாகப் புரியப்படும் வசனங்கள்

இறைத்தூதர்கள் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது: "இதற்காக எந்தக் கூலியையும் நான் உங்களிடம் கேட்கவில்லை, எனது கூலி அகிலத்தாரின் ரட்சகனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை" என்றார்கள்.

இவ்வாறு நூஹ், ஹூத், சாலிஹ், லூத், ஷுஐப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் தங்கள் சமூகத்தாரிடம் கூறியதை பல வசனங்களில் பார்க்கிறோம் (26:109,127,145,164,180 10:72 6:90) ஆனால், அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்துரைக்க நபிமார்கள் செய்த பிரச்சாரமும், மார்க்கக் கல்வியைக் கற்றுத்தர ஆசிரியர் பணி செய்வதும் வெவ்வேறானது.

சத்தியத்தையே அறியாத மக்களிடம் அவர்கள் நன்மையை நாடி எடுத்துச் சொல்வதாகக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் ஏதேனும் உலகலாபத்தை எதிர்பார்ப்பவருக்கும், ஒரு நிறுவனத்தில் ஆசிரியராக சேர்ந்து அந்நிறுவனம் குறிப்பிடும் நேரத்தில், உத்தரவிடும் இடத்தில் பாடம் நடத்தி, அந்த நிறுவனம் முன்பே ஒப்புக் கொண்டு தருகிற ஊதியத்தை பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இதனால் தான் நபித்தோழர்கள் காலத்திலிருந்து இன்று வரை இச்செயல் குற்றமாகக் கருதப்படவில்லை. இதைக் குற்றமாகக் கருதிய சில அறிஞர்கள் கூட இந்த வசனங்களை, தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் காட்டவில்லை என்பதை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும், குர்ஆன் விளக்கவுரையிலும் இதைப் பார்க்க முடியவில்லை.

வேறு சில வசனங்கள்.

"மேலும் என் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்; எனக்கே அஞ்சி நடங்கள். "(2:41 5:44)

இக்கருத்தில் வரும் வசனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர். உண்மையில் இவை எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிய வேண்டும். அல்லாஹ்வின் வேத வசனங்களில், தான் அறிந்ததைச் சொன்னால் தனக்குக் கிடைக்கும் உலக இலாபம் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக அதனைச் சொல்லாமலிருப்பதும், மறைப்பதுமே இங்குக் கண்டிக்கப்படுகிறது.

பின்வரும் வசனங்களில் தெளிவாகக் காணலாம்.

"நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியதை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்ப்பக் கிரயத்தை வாங்குகிறார்களோ அத்தகையவர்கள் தங்களின் வயறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) உட்கொள்ளவில்லை, மறுமைநாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு.

அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, நரக நெருப்பின் மீது இவர்களைப் பொறுமை கொள்ள வைத்தது எது?" (2:174, 175)

அல்லாஹ்வின் வசனங்களை சொற்ப விலைக்கு விற்பதென்பது, அவனது வசனத்தை சொல்லாமல் மறைப்பதையும், அதன் மூலம் அடையும் உலக இலாபத்தையுமே குறிக்கிறது என்பதை இங்குப் புரியலாம். மார்க்கத்தைக் கற்ப்பிக்கும் ஆசிரியர், அதற்காக ஊதியம் பெறுவதை இந்த வசனங்கள் தடுக்கவில்லை. (அவரோ மார்க்கத்தை மறைக்காது அதைக் கற்றுக்கொடுப்பவராயிற்றே!)

முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறுவோரில் பலர் தங்களின் வருமானத்திற்கு இடையூறு என்றால் மார்க்கத்திற்கு விரோதமான, பெரும் தவறுகளைக் கூட சுட்டிக்காட்டுவதில்லை. மேற்கண்ட வசனங்களில் இதற்க்குக் கடும் கண்டனம் இருக்கிறது.

இப்படிப் பட்டவர்கள் பெரும் பாவத்தில்தான் ஈடுபடுகிறார்கள். இவர்களின் இந்த இழிநிலைக்கு ஈமானிய பலவீனமும், அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்க வேண்டிய அளவுக்கு வைக்காததுமே காரணம். இவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை.

சில கேள்விகளும் விளக்கங்களும்

நபி(ஸல்) காலத்தில் மார்க்கக் கல்விக்கு ஆசிரியர் வேலை என்ற ஓன்று இருந்ததாக எந்தச் செய்தியுமில்லயே... இப்போது மட்டும் அதை எப்படி ஏற்ப்படுத்தலாம்?

இதற்குரிய விளக்கம்:

இக்கோணத்தில் பார்த்தால், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திராத முக்கியச் செயல்பாடுகளையும், அவற்றைச் செய்யலாமா என்று கேள்வி எழும், அதில் முக்கியமாக குர்ஆனை   விற்று சம்பாதிப்பதைச் சொல்லலாம். நபியவர்கள் காலத்தில் குர்ஆனை அல்லது அதன் சில பகுதிகளை எழுதித் தேவைப்படுவோருக்கு கொடுத்து அதற்காக ஊதியம் பெறுவது இருக்கவில்லை. தேவை குறைவாக இருந்ததால் ஒருவருக்கொருவர் உதவுகிற அடிப்படையில் அது நடந்திருக்கலாம். ஆனால், நபி(ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனை  எழுதி விற்றுச் சம்பாதிக்கிற வழி உருவாகிவிட்டது. அதனைப் பெரும்பாலான அறிஞர்கள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அங்கீகரிக்கின்றனர்.

சில ஸஹாபாக்கள் குர்ஆனை எழுதி பிரதி எடுத்து ஊதியம் பெறக்கூடாது என்று கூறியிருக்கின்றனர்.

குர்ஆன் பிரதிகளை விற்பனை செய்பவர்களின் கைகள் வெட்டப்பட வேண்டுமென்று நான் கருதுகிறேன் என இப்னு உமர்(ரலி) கூறினார்கள். (முசன்னப் அப்துர் ரஸ்ஸாக் 14525)

இதுபோல் பிரபல தாபிஈன்கள் சிலரும் குர்ஆனை விலைக்கு விற்பது கூடாதெனக் கருதியதாக  நூலில் பதிவாகியுள்ளது. (14519)

காரணம் என்ன?

பிரபல தாபிஈ ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் குர்ஆன் பிரதிகளை விற்பது பற்றிக் கேட்கப்பட்டபோது, அதனை வெறுப்பதாகக்  கூறிவிட்டு, முன்பு மக்கள் இவ்வாறு செய்துகொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்கள். (முசன்னப் அப்துர் ரஸ்ஸாக் 14516)

ஆக நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள் காலத்தின் முற்பகுதியிலும் இல்லாத இவ்வழக்கம், தாபிஈன்கள் காலத்தில் அதிகரித்துள்ளது. இதை அவர்கள் வெறுத்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஷகீக் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

ஆசிரியருக்குச் சன்மானம் வழங்குவது வெறுக்கத்தக்கது. நபித்தோழர்கள் அதனை வெறுப்பவர்களாக இருந்தார்கள். அதனைக் கடுமையாகவும் கருதினார்கள். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா 5/98)

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத, அவர்களின் நேரடி அங்கீகாரம் பெறாத செயல் என்பதனாலே சிலர் இதனை கூடாது என்றார்கள். இருப்பினும், இதைத் தடை செய்ய தகுந்த காரணம் இல்லை என்பதால் பெரும்பாலான அறிஞர்கள் ஆகுமானதுதான் என்றனர்.

இதுபோலவே குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் வேலை என்பதும் நபி(ஸல்) காலத்தில் இல்லாததால் அதற்காக ஊதியம் பெறுவது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்ப்ப்படும்போது அதற்காக ஊதியம் பெறலாம் என்பதை சில ஹதீஸ்களின் மூலம் புரிய முடிகிறது. அதனால்தான் உமர்(ரலி) அவர்கள் போன்ற ஆட்சி செய்த ஸஹாபாக்கள் அத்தகைய ஆசிரியர்களுக்கு ஊதியம் அளித்துள்ளனர்.

இன்னொரு கேள்வி:

ஜீவனத்திற்கு ஏதேனும் தொழில் அல்லது வேலை செய்துவிட்டு, மீதியுள்ள நேரத்தில் மார்க்கப்பணி செய்யலாமே... அப்போது ஊதியம் தேவையில்லையே?

அப்படியும் செய்ய முடியும் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் எந்த அளவிற்க்குச் சமுதாயத்திற்குப் பயனளிக்க வேண்டுமோ அந்த அளவிற்குப் பயனளிக்க முடியாது போகும்.

தான் செய்கிற குறைந்த அளவு மார்க்கப் பணியையும் தனது தொழில் அல்லது வேலையின் காரணமாக அரைகுறையாகவே அவர் செய்வார். எதார்த்தத்தில் இதைப் பார்க்கவே செய்கிறோம்.

மிக அரிதாக சில அறிஞர்கள் ஊதியம் பெறாமலும் மார்க்கப்பணியை நிறைவாக செய்வதுண்டு. அது அவர்களுக்குள்ள கூடுதல் சிறப்புதான். ஆனால் இந்த நிலையை அல்லாஹ் எல்லோருக்கும் வழங்கவில்லை. அப்படி எல்லோர் மீதும் கடமையாக்க்கவுமில்லை; நடைமுறைக்கு அது சாத்தியமுமில்லை.

ஊதியம் ஆகுமானது என்போரின் ஆதாரங்கள்

முதல் ஆதாரம்:

ஒரு பெண்மணி நபி அவர்களுக்குத் தம்மை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார். அவரைப் பார்த்த நபியவர்கள், அவர் மீது விருப்பமில்லாதவர்களாக பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். அப்போது ஒரு நபித்தோழர் அப்பெண்ணைத் தமக்கு மணமுடித்து வைக்குமாறு கேட்டார். உடுத்திய கீழாடை தவிர எதுவுமற்ற அவருக்கு, அவர் மனனம் செய்திருந்த குர்ஆன் வசனங்களையே மஹராக ஆக்கி நபியவர்கள் திருமணம் செய்துகொடுத்தார்கள். (சுருக்கம்)

ஸஹீஹுல் புகாரியின் பிரபல விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரீயில் இமாம் இப்னு ஹஜ்ர் (ரஹ்) இந்த ஹதீஸின் விளக்கத்தில், “ஹனஃபி அறிஞர்கள் தவிர எல்லா அறிஞர்களும் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க கூலிபெருதல் ஆகுமானதுஎன்று காளி இயாள் (ரஹ்) கூறுவதாக எடுத்தெழுதியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ, புகாரி ஹதீஸ் எண் 4752இன் விளக்கம்)

இமாம் பைஹகீ (ரஹ்) தமது மஃரிஃபத்துஸ் ஸுனன் வல்ஆஸார் நூலில் இதே ஹதீஸைப் பதிவுசெய்து, அதன் கீழ் குர்ஆனைக் கற்ப்பிக்க ஊதியம் பெறுதல் ஆகுமானது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். அது கூடாதென மறுக்கும் சிலருக்கு விளக்கத்தையும் பதிந்துள்ளார்கள். (12/1314)

இதே ஹதீஸை ஆதாரம் காட்டியே சவூதி அரேபியாவின் அல்லஜ்னா அத்தாஇமா ஃபத்வா சபையும் தீர்ப்பளித்துள்ளது. (ஃபத்வா எண் 3210, பாகம் 15 பக்கம் 96)

வளீன் இப்னு அத்தா (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

மதீனாவில் மூன்று ஆசிரியர்கள் சிறுவர்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதா மாதம் பதினைந்து திர்ஹம்களை வாழ்வாதார (ஊதிய)மாக உமர்(ரலி) வழங்கிக்கொண்டிருந்தார்கள். (பைஹகீ 6/124, முசன்னஃப் இப்னு அபீஷைபா 5/97)

அடுத்து குர்ஆன், ஹதீஸ் வழிநடந்த முற்கால மூத்த அறிஞர்களும் ஊதியம் பெறுதலை ஆகுமானதுதான் என்று ஆதாரங்களுடன் கூறியுள்ளார்கள்.

இரண்டாம் ஆதாரம்

இமாம் புகாரி (ரஹ்) தமது ஸஹீஹுல் புகாரியில், “ஓதிப்பார்ப்பதற்காக கொடுக்கப்படும் பொருள்” (பாபு மாயுஃத்தா அலா ருக்யத்தி) எனும் தலைப்பில் ஒரு பாடம் அமைத்திருக்கிறார்கள். அதன் கீழ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

·         நீங்கள் கூலி பெறுவதற்கு மிகத் தகுதியானது அல்லாஹ்வின் வேதம்தான் என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

·         மார்க்கக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தமக்குக் கூலி வேண்டும் என்று நிபந்தனயிடக் கூடாது. ஆனால், அவருக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்ளட்டும் என்று ஷஅபீ (ரஹ்) கூறினார்கள்.

·         ஹகம்(ரஹ்) அவர்கள் மார்க்க கல்வி கற்பிக்கும் ஆசிரியர் கூலி பெறுவதை எந்த அறிஞரும் வெறுத்துப் பேசி நான் கேட்டதில்லை என கூறினார்கள்.

·         ஹசன்(ரஹ்) தமது ஆசிரியருக்குப் பத்து திர்ஹம்களைக் கொடுத்துள்ளார்கள்.

இதிலிருந்து இமாம் புகாரி (ரஹ்) மார்க்க கல்வியைக் கற்ப்பிக்க ஊதியம் பெறுதல் ஆகுமானது என்ற கருத்தையே கொண்டிருந்தார்கள் எனத் தெரிகிறது.

மேற்கண்ட கூற்றுகளுக்குக் கீழே இப்னு ஹஜ்ர் (ரஹ்) குறிப்பிடுவதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸின் மூலம், குர்ஆனைக் கற்றுக்கொடுக்க ஊதியம் பெறுவது ஆகுமானது என்ற பெரும்பான்மை அறிஞர்களின் கூற்றுக்கு இமாம் புகாரி ஆதாரம் காட்டியிருப்பதுடன், ஹனஃபி அறிஞர்களின் கருத்துக்கு மாற்றுக்கருத்தும் கொண்டிருக்கிறார்கள். (ஃபத்ஹுல் பாரீ 7/118)

இங்கு குறிப்பிடப்படும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் ஹதீஸை புகாரி எண் 5737இல் முழுமையாகக் காணலாம். அதன் சுருக்கம் இதுவே: நபித்தோழர்கள் ஒரு பயணத்தில் விஷக்கடி பட்ட ஒருவரைச் சந்தித்தார்கள். அப்போது ஒரு நபித்தோழர் சில ஆடுகளைத் தரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சூறா அல்பாதிகாவை ஓதி ஊதினார். அம்மனிதரும் விஷத்திலிருந்து நிவாரணம் அடைந்த்கார். இதன் பிறகு ஆடுகளைப் பெற்றுக் கொண்டு நபித்தோழர்கள் மதீனா திரும்பியபோதே நபி(ஸல்) அவர்கள் மேற்க்கண்டவாறு கூறினார்கள் என்கிறது அந்த ஹதீஸ்.

இதே கருத்தில் அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்களும் கூறிய செய்தியில் (5736) நபி(ஸல்) அவர்களும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைக் கேட்டதாக வந்துள்ளது.

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்களும் இதைப் பதிவுசெய்து அதில் கீழ்வருமாறு எழுதுகிறார்கள்:

குர்ஆனைக் கற்றுக் கொடுக்க கூலி பெறுவது ஆசிரியருக்கு ஆகுமானது; அதற்க்குக் கூலி வேண்டும் என நிபந்தனை வைக்க அவருக்கு உரிமை உள்ளது என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள். அதற்க்கு இந்த ஹதீஸையே ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்கள். (திர்மிதி 1989)

 ஹதீஸ் விளக்கவுரை நூல்களில்...

குர்ஆனை மகராக்கி நபியவர்கள் திருமணம் செய்து வைத்ததாக ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமிலும் (2554) உள்ளது. இதன் விளக்கத்தில் இமாம் நவவீ (ரஹ்) எழுதுவதாவது:

இந்த ஹதீஸில் குர்ஆனைக் கற்பிப்பது மஹராக இருப்பது ஆகுமானது என்பதற்கும், குர்ஆனைக் கற்பிக்கக் கூலி வழங்குவது ஆகுமானது என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. இவ்விரண்டும் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களிடம் ஆகுமானதாகும். இவ்வாறே அத்தா, ஹஸன் இப்னு ஸாலிஹ், மாலிக், இஸ்ஹாக்(ரஹ்) மற்றும் பல அறிஞர்களும் கூறுகின்றனர். சிலர் இதைத் தடுத்துள்ளனர். அவர்களில் ஸுஹ்ரீ, அபூஹனீஃபா (ரஹ்) ஆகியோர் உள்ளனர்.

ஆனால் இந்த ஹதீஸும், நீங்கள் ஊதியம் பெற மிகத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமே என்ற ஸஹீஹான ஹதீஸும் ஊதியம் பெறுவதைத் தடுப்பவர்களின் கூற்றுக்கு மறுப்பாக இருக்கின்றன. மேலும், குர்ஆனைக் கற்பிக்க ஊதியத்திற்கு (ஆள்) அமர்த்துவது ஆகுமானது என்று அபூஹனீஃபா தவிர எல்லா அறிஞர்களும் கூறுவதாக காளி இயாள் (ரஹ்எடுத்தெழுதியுள்ளார்கள். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 5/134)

இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) தமது ஃபுலூகுல் மராம் நூலில், நீங்கள் கூலி பெறுவதற்கு மிகத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும் என்ற ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். அதன் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த விஷயத்தில் பல ஆதாரங்கள் இருந்தாலும் புகாரியின் அறிவிப்பை மட்டும் ஆசிரியர் (இப்னு ஹஜர் (ரஹ்) ) அவர்கள் குறிப்பிடுவதற்குக் காரணம், இமாம் புகாரி (ரஹ்) குர்ஆனைக் கற்றுக்கொடுக்க ஊதியம் பெறுதல் ஆகுமானது என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். இந்த ஹதீஸ் மூலம் இமாம் புகாரி (ரஹ்) கூறும் கருத்து, விஷ ஜந்துவால் தீண்டப்பட்டவர், ஓதிப்பார்ப்பவர் மூலம் பயனடைந்தார். இதிலிருந்து, ஒரு மனிதர் குர்ஆனைக் கற்றுக்கொள்ளும்போது பயனடைகிறார். எனவே, அவ்வாறு கற்றுக்கொண்டவருக்கு விஷ ஜந்துவால் தீண்டப்பட்டவருக்கு கிடைத்ததுபோல் பயன் கிடைத்துள்ளது. குணமடைதல் மூலம் நோயாளி அடைந்த பயனுக்காக கூலி பெறுவது சரியென்றால் கற்பித்தல் மூலம் பயனடைந்தவரிடம் கூலி பெறுவதும் சரிதானே! இமாம் புகாரியின் இந்தக் கருத்து தெளிவான, மிக வலுவான ஆய்வு என்று கருதுகிறேன். (ஷரஹு ஃபுலூகுல் மராம் (ஆசிரியர், அதிய்யாபின் முஹம்மத் ஸாலிம்) ஃபுலூக்கும் மராம் ஹதீஸ் எண் 859 விளக்கத்தில், தலைப்பு: ஹுக்மு அக்தில் உஜ்ரத்தி அலா தஃலீமில் குர்ஆன்)

சரியான முடிவு

மேற்கண்ட விளக்கங்கள், ஆதாரங்களின்படி, மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறுதல் ஆகுமானது என்ற முடிவே சரியானதாகும்.

மார்க்கப் பணிகள் யாவை?

குர்ஆனைப் படித்துக் கொடுத்தல், மார்க்கக் கல்வியைக் (குர்ஆன் விளக்கம், ஹதீஸ், பிக்ஹ் போன்றவற்றைக்) கற்பித்தல், குர்ஆன் ஹதீஸ் விளக்கவுரை மற்றும் மூல நூலை மொழிபெயர்த்தல், மார்க்கப் பாடங்களைத் தொகுத்தல், மார்க்கக் கல்வியைப் பரப்பும் பத்திரிகை நடத்துதல், ஒரு நிறுவனத்தின் கீழ் பிரச்சாரப்பணி போன்றவற்றை மார்க்கப் பணி என்கிறோம். இதற்காக கற்பவர் ஜமாஅத் அல்லது பைத்துல் மால் அல்லது அதற்குரிய நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெறுவது ஆகுமானதே.

இமாமாக பணியாற்றுபவருக்கு, அவர் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு மார்க்க கல்வி கற்பிக்க வேண்டும். மார்க்கத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைத்து வழிநடத்த வேண்டும். இதற்க்கான ஊதியமும் ஆகுமானதே.ஆனால், வெறும் ஐவேளை தொழுகையை நடத்த மட்டுமே ஊதியம் வழங்குவதாகக் கூறினால் அது தவறாகும். பொதுவாக அப்படி வழங்கப்படுவதும் இல்லை.

அதேபோல் முஅத்தினுக்குக் கொடுக்கப்படும் சம்பளமும், பள்ளிவாசலின் மற்ற வேலைகளையும் கவனித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டால் ஆகுமானதே! வெறும் பாங்கு சொல்வத்கர்க்காக மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டால் அது தவறு.

தனது அதானுக்காகக் கூலி பெறாத முஅத்தினை ஏற்ப்படுத்திக்கொள் என்பது நபிமொழி. (அபூதாவூத் 447)

புரோகித(ம்)ர்

மார்க்கப் பணி செய்பவர்களைப் பொத்தாம் பொதுவாகப் புரோகிதர்கள் என்கிறார்கள் சிலர். யாரை அவ்வாறு சொல்லலாமெனில், “நீங்கள் நேரடியாக அல்லாஹ்விடம் வேண்டி பெற முடியாது, நாங்கள்தான் அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்எனக் கூறி சில செயல்களைச் செய்துகொண்டு அதன் மூலம் ஊதியம் பெறுபவர்களை வேண்டுமானால் புரோகிதர்கள் என்று கூறலாம். மாறாக, மார்க்கப்பணி செய்து அனுமதிக்கப்பட்ட வழியில் ஊதியம் பெறுபவர்களையும், மார்க்கக் கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியராகவும், எழுத்தின் மூலம் மார்க்கத்தை பரபபுபவர்களாக பணியாற்றுபவர்களையும் புரோகிதர் என்று சொல்வது பெரும் தவறு.

அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணி செய்து கொண்டு புரோகிதர் தொழிலையும் ஒருவர் செய்தால் இரண்டாவதைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும். அவருடைய எல்லாப் பணிகளையும் குறை கூறக்கூடாது.

இறுதியாக

மார்க்கப்பணிக்குஊதியம் பெறுதல் கூடும் என்கிற கருத்தை, அது இல்லாமல் மார்க்கப்பணியே சாத்தியமில்லை என்றோ, பணிபுரிபவர்களின் குடும்ப ஜீவனம் எப்படி நடைபெறும் என்றோ நாமாகக் காரணம் கூறி நியாயப்படுத்தவில்லை. மார்க்கம் அங்கீகரிக்கிறது என்பதின் அடிப்படையிலேயே இதனைச் சரி காண்கிறோம்.

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரீ 61ஆம் ஆண்டில் பிறந்து 101இல் இறந்தார்கள். அனஸ் (ரலி) போன்ற பிரபல நபித்தோழர்களிடம் பாடம் பயின்றார்கள். சிறந்த ஹதீஸ் அறிவிப்பாளராகவும் மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்தார்கள். ஸஹாபாக்களின் ஆட்சிக்காலத்திற்கு அடுத்து வந்த தாபிஈன்கள் ஆட்சியாளர்களிலேயே ஒரு முன்மாதிரி கலீஃபாவாக விளங்கினார்கள். மார்க்கக்கல்வி ஆசிரியருக்கு ஊதியம் வழங்கும் விஷயத்தில் அவர்களின் செயல்பாடு பற்றி ஒரு செய்தி.

அபூ கைலான் (ரஹ்)  அறிவிக்கிறார்கள்:

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், யஜீத் இப்னு அபீமாலிக்கையும் ஹாரிஸ் இப்னு யம்ஜுதையும் கிராமப்புறத்தில்  மக்களுக்கு மார்க்கக் கல்வி கற்பிப்பதற்காக அனுப்பி வைத்து, அவ்விருவரின் வாழ்வாதாரத்திர்க்குரிய தொகையையும் அதிகாரிகள் மூலம் வழங்கினார்கள். யஜீத் அதை வாங்கிக் கொண்டார். ஹாரிஸ் மறுத்துவிட்டார். இது பற்றி உமர் இப்னு அப்துல் அஸீஸுக்குக் கடிதம் எழுதி தெரிவிக்கப்பட்டது. அதற்க்கு கலீஃபா அவர்கள், “யஜீத் தொகையைப் பெற்றதில் தவறு இருப்பதாக நாம் அறியவில்லை. மேலும், ஹாரிஸ் போன்றோரை அல்லாஹ் நம்மிலே அதிகமாக்குவானாக!” என்று பதிலளித்தார்கள்(அல்அம்வால், அபூஉபைத் அல்காஸிம்).

[இந்த கட்டுரை அப்துர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் எழுதி  2011 ஏப்ரல்  மாத "சமுதாய ஒற்றுமை" மாத இதழில் வெளிவந்தது.]

 

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

Admin
2563 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions