ஆய்வுகள்
June 02, 2021
நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு)
நல்லவர்கள்தான்! ஆனாலும் குறிப்பிடத்தக்க தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் செய்யும் தவறை தவறென்று உணர்வதில்லை. இப்படியான தவறுகள் குறித்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். இந்த மாத தொடரில் நம்மில் பலர் மார்க்கச் சட்ட விஷயத்தில் செய்யும் ஒரு தவறைக் குறித்து பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.
மார்க்கச் சட்டங்களில் சிலவற்றில் ஆதிகாலம் முதல் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. மார்க்க ஆதாரங்களை புரிந்து கொள்வதில் ஏற்படும் வித்தியாசமும் ஆய்வுக் கண்ணோட்டங்களில் ஏற்படும் வித்தியாசமும் இந்தக் கருத்து வேறுபாடுகளுக்குக் காரணங்களாக உள்ளன.
இவ்வாறான காரணங்களால் கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பிடம் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லலாம். எதிர் தரப்பு ஏற்றுக்கொள்ளாத போது அவர்களோடு சண்டை சச்சரவு செய்வதோ ஏசுவதோ முறையல்ல.
ஆனால் இதுபோன்ற விஷயங்களில் கடும் வாக்குவாதங்கள் செய்வதும் கேவலமாகப் பேசுவதும் சண்டையிடுவதும் சமுதாயத்தில் நடைமுறையில் உள்ளது.
பிறை சொல்லும் சேதி...
இதற்கு பிறை விஷயத்தை ஓர் எடுத்துக்காட்டாக கூறலாம். ரமளான் மாதம் நெருங்குகிறது. ரமளான் ஆரம்பத்திலும் முடிவிலும் துல்ஹஜ் மாத ஆரம்பத்திலும் கோபதாபங்களோடு பிறை குறித்த சச்சரவுகள் நடக்கின்றன.
ரமளானில் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டிய உயர்ந்த வணக்கமான நோன்பு நோற்று அல்லாஹ்வின் அருளையும் மறுமை நன்மையையும் பெற வேண்டும்.
அதேபோல் துல் ஹஜ்ஜில் அரஃபா நோன்பு நோற்று, குர்பானி கொடுத்து அல்லாஹ்வின் அருளையும் மறுமை நன்மையையும் பெற வேண்டும்.
இதுதான் குறிக்கோள் எனும் போது அந்தக் குறிக்கோளை நாம் அடைந்து விட வேண்டும் என்பதில் தான் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். அதை அடைவதற்கான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.
மற்றவர் சரியான நாளில் நோன்பு வைப்பதில்லை என்று கருதும்போது அவருக்காக அனுதாபப்பட வேண்டும். முறையாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வளவுதான். முறையாக எடுத்துச் சொல்லியும் கேட்காவிட்டால் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாலோ, கோபப்படுவதாலோ பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கலாம். இதை நாம் இரண்டு தரப்புக்கும் சொல்கிறோம்.
பிறை சம்பந்தப்பட்ட தகவல் வெளிநாடுகளிலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியான கருத்து. ஆனால் இதற்கு எதிர் தரப்பில் பல வழிமுறையைச் சார்ந்த அறிஞர்களும் இருக்கிறார்கள்.
தத்தமது பகுதியில் பார்த்த பிறையை வைத்து செயல்பட வேண்டுமென்று வாதிப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மதிக்கக் கூடிய பழங்கால இமாம்களெல்லாம் கூட உலகத்தில் எங்கு பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்தாலும் எடுத்துச் செயல்பட வேண்டும் என்ற கருத்தை அக்காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஹனஃபீ மத்ஹப் ஃபிக்ஹ் நூலான ஃபத்ஹுல் கதீரில் இடம் பெறுவது, பாகம் : 2, பக்கம் 313, ஷாமிலா பதிப்பு)
பிறை பார்த்தது ஒரு நகரத்தில் உறுதியானால் எல்லா மக்களுக்கும் நோன்பு அவசியமாகிவிடும். எனவே மேற்குத் திசைக்காரர்கள் பிறை பார்த்தால் கிழக்குத் திசைக் காரர்களுக்கும் அவசியமாகும். இதுதான் மத்ஹபின் வெளிப்படையான கூற்று. இதற்கு மாற்றமான கருத்து உள்ளதாகவும் அதே நூலில் சொல்லப்பட்டுள்ளது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது அக்காலத்து மத்ஹப் நூல்களிலேயே தூரமான பிரதேசங்களிலிருந்து வரக்கூடிய பிறைத் தகவலை எடுத்துக் கொள்வது தான் சரி என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மாற்றமான கருத்து ஒரு கூற்று என்ற அளவில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் பிறைத் தகவல் வெளிநாடுகளிலிருந்து வந்தாலும் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்ற சரியான கருத்தைக் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. இதே கருத்தை கொண்ட குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் மார்க்க அறிஞர்கள் மாற்றுக் கருத்தை எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்பது தான் அது!
தூரத்திலுள்ள நாடுகளில் பிறைபார்க்கப்பட்ட தகவலை ஏற்று நோன்பு வைக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு “பிறை பார்க்கப்பட்டதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டும் . உதயமாகும் இடங்கள் வேறுபடுவதை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்பதே சரியாகும்” என்று பதிலளிக்கும் சஊதி அரேபியாவின் முன்னால் தலைமை முஃப்தி ஷைக் இப்னுபாஸ்(ரஹ்) அவர்கள் கீழ்வரும் கருத்தையும் பதிவு செய்கிறார்கள்.
அறிஞர்களில் ஒரு கூட்டத்தினர், “ஒவ்வொரு நாட்டிலும் அங்கு பிறை பார்க்கப்பட்டதை வைத்தே செயல்பட வேண்டும்” என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இந்தக் கூற்றை சஊதி அரேபியாவின் மூத்த உலமா சபை உறுப்பினர்கள் சரி கண்டுள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடும் ஷைக் இப்னு பாஸ் அவர்கள் இந்தக் கருத்தைக் கூறும் அறிஞர்கள் எந்தவிதமான ஆதாரங்களை காட்டுகிறார்கள் என்பதையும் எடுத்தெழுதுகிறார்.
பார்க்க : மஜ்மூஉ ஃபதாவா இப்னு பாஸ், (பாகம்: 15, பக்கம்: 83, 84 ஷாமிலா பதிப்பு)
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மாற்றுக் கருத்து கொண்டவர்கள் புரிந்தது சரியோ தவறோ, ஒரு ஆதாரம் வைத்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களெல்லாம் குற்றவாளிகள் என்று ஷைக் இப்னு பாஸ் அவர்கள் பேசவில்லை!
ஆய்வுக் கண்ணோட்டம் மாறுபடுவதால் பிறை பார்த்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது இப்படி கருத்து வேறுபாடு ஏற்படும்போது எதிர் தரப்புக்கு சகோதரத்துவ அடிப்படையில் நலம் நாடி தத்தமது ஆதாரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கு மாற்றமாக கோபதாபத்துடன் சச்சரவு செய்து கொண்டிருந்தால் வேற்றுமை பெரிதாவதற்கு வாய்ப்பாக அமையும்.
வெளிப்படையான வழிகேட்டிலும் பெரும்பாவத்திலும் உழல்பவனுக்குக் கூட முறையாக எடுத்துச் சொல்வதுதான் நமது கடமை.
எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுவது, நீங்கள் (இறைத்தூதராகிய) அவருக்கு கீழ்ப்படிந்தால் நேர்வழியடைவீர்கள். மேலும் தெளிவாக எடுத்துக் கூறுவதைத் தவிர (வேறெதுவும் இறைத்) தூதர் மீது கடமையில்லை (அல்குர்ஆன் 24:54 மற்றும் 29:18, 42:48)
சிறப்புக்குரிய ரமளானின் துவக்க நாட்களிலும் மிகச் சிறப்புக்குரிய ரமளானின் கடைசி நாட்களிலும் பிறை பார்த்தல் பற்றி சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களை செய்ய இயலாமல் போகும். நன்மைகளை அதிகமாக சம்பாதித்துக் கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து இழப்பை சம்பாதித்த நிலை ஏற்படும்.
பிறை உள்ளிட்ட கருத்துவேறுபாடுள்ள விஷயங்களில் மாற்றுக் கருத்துடையவர்களுடன் சரியான அணுகுமுறையைக் கையாண்டால் அனைவருக்கும் நன்மையாக அமையும்! வல்ல அல்லாஹ் நல்வழ¤காட்டுவானாக!
என்னால் இயன்ற வரை சீர்திருத்ததைத் தவிர்த்து வேறெதையும் நான் நாடவில்லை.
மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA,
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions