ஆய்வுகள்
November 21, 2021
கேம் விபரீதங்கள்
கேம் விபரீதங்கள்
அறிவியல் முன்னேற்றத்தினால்
நமக்கு கிடைத்திருக்கும் சாதனங்களால் அதிகமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் இவற்றை
முறையில்லாமல் பயன்படுத்துவதால் பலரும் தங்களின் இம்மை மறுமை வாழ்வுக்கு கெடுதலை ஏற்படுத்திக்
கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட சாதனங்களில்
முக்கியமானதாக நம் அனைவர் கைகளிலும் இருக்கும் அலைபேசி (செல்ஃபோன்) உள்ளது. இந்த சாதனம்
மூலம் மனித சமூகம் மிகப்பெரும் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் நம்மில்
சில பெரியவர்களும் பல இளைஞர்களும் சிறுவர்களும் இந்த சாதனத்தில் உள்ள பொழுதுபோக்கு
அம்சங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால் தங்களின் பொன்னான நேரத்தையும் ஆரோக்கியத்தையும்
வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்கும் செய்ய வேண்டிய
கடமைகளை வீணடிப்பதின் காரணமாக அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு
வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின்
பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்)
இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.(அல் குர்ஆன் 31: 6)
இத்தகைய பாதகமான பொழுதுபோக்குகளில்
இந்த சாதனத்தில் உள்ள விளையாட்டுக்கள் (கேம்கள்) குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
இந்த விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி பலருக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கு
நிகரானவையாக ஆகிவிட்டன. இந்த விளையாட்டுகளுக்காக மிக அதிகமான நேரங்களை செலவிடுவது இதற்கு
அடையாளமாக உள்ளது.
இந்த கேம்களால் விளையும் பாதகங்கள்
அதிகமாக உள்ளன. அவை:
_ பல மணி நேரங்களை இந்த விளையாட்டுகளில்
கழிப்பது. இவற்றில் அதிகப்படியாக செலவிடப்படும் நேரங்களில் எத்தனையோ நல்ல காரியங்களில்
ஈடுபடலாம், பயனுள்ள விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
_ தொழுகைகளில் அலட்சியம் ஏற்படுவது.
தொழுதால் கூட ஈடுபாடு இல்லாமலும் நிதானம் இல்லாமலும் தொழுவது.
_ கல்வி கற்பதில் பலவீனம் ஏற்படுவது.
பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போவதால் படிப்பில் பின்தங்குவது.
_ இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி
விடுவது. இவற்றுக்கு அடிமையாவதின் அடையாளம் எப்போதும் இந்த விளையாட்டுகளின் நினைவாகவே
இருப்பது, விளையாட்டை நிறுத்தும் படி
(பெற்றோரோ பெரியோரோ) சொல்லும்போது கோபப்படுவது. அதேபோல் விளையாட விரும்பும் நேரத்தில்
ஏதேனும் காரணத்தால் விளையாட முடியாமல் போனால் கடும் சோகத்துக்கும் மன நெருக்கடிக்கும்
உள்ளாவது.
_ அடிமையானவர்களில் ஒரு சிலர்
மனோரீதியான பாதிப்புக்கு ஆளாவது.
_ இளவயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுவது.
_ குடும்பத்தினர் மற்றும் சமூகத்தை விட்டு விலகி இருப்பது.
இப்படி பிறருடன் கலக்காமலிருப்பதால் மக்களுடன் நல்ல முறையில் பழகத்தெரியாமல் போகும்.
_ இந்த விளையாட்டுகளில் பணத்தை செலவிட்டு வீண்விரயம்
செய்வது.
_ இந்த விளையாட்டுகளில் சிலவற்றில் இணைவைப்பு உள்ளிட்ட
பாவமான காரியங்கள் கலந்திருக்கின்றன. இதனால் விளையாட்டு என்ற பெயரில் மார்க்கத்தின்
அடிப்படைக்கே எதிரான காரியத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும்.
இப்படி பல விதமான
விபரீதங்களை கொண்டவையாக இந்த விளையாட்டுகள் இருந்து கொண்டிருக்கின்றன.
இந்த விபரீதங்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பெற்றோர்கள்
தெரிந்திருக்க வேண்டும். அவை:
_ பிள்ளைகள் கேம் விளையாடும்போது பெற்றோரும் உடனிருக்கலாம்.
அப்போது அவற்றில் தவறான விஷயம் வந்தால் அதை சுட்டிக்காட்டலாம். அதிகப்படியான நேரத்தை
அவற்றில் செலவிடாமல் தடுத்து விடலாம்.
_ மூளைக்கு வேலையும் மனதுக்கு மகிழ்ச்சியும் தரக்கூடிய
பொழுதுபோக்கு விஷயம் எதையேனும் மாற்று ஏற்பாடாக செய்து கொடுக்கலாம்.
_ அவசியம் கேம் விளையாடித்தான் ஆக வேண்டும் என்றால்
குறிப்பிட்ட அளவு நேரம் மட்டும் என்று வரையறுத்துக் கொடுப்பது. (ஒரு நாளைக்கு ஒரு மணி
நேரம் அல்லது அரை மணி நேரம் என்பதுபோல்.) இப்படி வரையறுப்பதன் மூலம் அளவுக்கதிகமான
நேரம் கேம் விளையாடுவதை விட்டு தடுத்து விடலாம்.
_ தாய்மார்கள் பிள்ளைகளின் கத்துதலுக்கும்
அழுகைக்கும் இரக்கப்பட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கெல்லாம் செவி சாய்த்து விடக்கூடாது.
குறிப்பாக இந்த கேம்கள் விஷயத்தில் உறுதி தேவை.
_ வளரும் சிறு பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் மனிதர்களாகிய
நாம் படைக்கப்பட்டதின் நோக்கத்தை எடுத்துக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வை
வணங்குவதுதான் நாம் படைக்கப்பட்டதின் நோக்கம். அத்துடன் அல்லாஹ்வின் மார்க்கத்தை அறியாத
மக்களிடம் அவனது மார்க்கத்தை எடுத்துச் சொல்வதும் நன்மையை ஏவி தீமையை தடுப்பதும் நமது
முக்கிய பணி என்பதையும் அறிவுறுத்தவும் வேண்டும்.
_ நமது பிள்ளைகளுக்காக நாம் அதிகமாக அல்லாஹ்விடம்
பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர்கள் நேர்வழியில் இறுதி வரை நிலைத்திருக்கவும் எல்லாத்
தீங்குகளில் இருந்தும் அல்லாஹ் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்க வேண்டும்.
“எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக
அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே
இருக்கின்றான்” என்பது இறைவாக்கு.
(அல்குர்ஆன் 29:69)
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions