ஆய்வுகள்
December 27, 2021
நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?)
நல்லவர்கள் தான்! என்றாலும், அறியாமையினால் சில தவறுகளை
செய்கிறார்கள். அப்படிப்பட்ட தவறுகளை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.
இம்மாத தொடரில் பெண் பிள்ளைகளுக்கு வாரிசு சொத்தில்
உரிமை மறுக்கப்படும் தவறை குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரின் சொத்தில் உரிமையே
இல்லை என்று பொத்தாம் பொதுவாக மறுக்கக் கூடியவர்கள் பெரும் பாவிகள், அநியாயக்காரர்கள், இவர்கள் நல்லவர்களில் சேரமாட்டார்கள்.
நாம் இங்கு குறிப்பிடுவது மார்க்கத்தின் கடமைகளையும்
சட்டதிட்டங்களையும் பேணி நடக்கும் சிலர், தமது தவறான புரிதலால் சில காரணங்களைக் கூறி தம்
சகோதரிகளுக்கு தமது குடும்ப சொத்தில் பங்கு கொடுக்காமல் இருந்து விடுகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படும் சட்டத்தின்படி
பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில் பாதி பெண் பிள்ளைகளுக்கு
கொடுக்கப்பட வேண்டும்.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக்
கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில்
மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால்
இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு.
ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர்
தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்);
இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால்
அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது
அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;
உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில்
யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை)
அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும்
மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:11)
இந்த அல்லாஹ்வின் சட்டம் தெரிந்திருந்தால் கூட பெண்ணின்
திருமணத்தின் போது அவளுக்கு போடப்படும் நகைகள், அவளுக்காக கொடுக்கப்படும் சீர்வரிசைகளைக் காரணம்
காட்டி அவளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறார்கள் இந்த ஆண்
பிள்ளைகள். இதே காரணத்தை வைத்து தங்களின் மரணத்துக்குப் பின் தமது பெண் பிள்ளைகளுக்கு
தமது சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள் சில தந்தையர்.
பெண் பிள்ளைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்படும்
நகை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி வாரிசு சொத்துரிமையை மறுப்பது பெரிய தவறு.
பெண்ணைப் பொறுத்த வரை அவளுக்கு நகை என்பது இன்றியமையாததாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத்
தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (அல்லாஹ்வின் பிள்ளைகள் என்கின்றனர்). (அல்குர்ஆன் : 43:18)
அல்லாஹ்வுக்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக சொல்லிய மூட நம்பிக்கையாளர்களுக்கு
மறுப்பாக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கியுள்ளான்.
இந்த வசனத்தின் கருத்தை நன்கு கவனித்தால் பெண்ணிடம்
குறை உள்ளது.. அது ஆபரணம் அணிவதால் நிவர்த்தியாகிறது என்ற செய்தி உள்ளடங்கி இருப்பதை
புரியலாம்.
ஒரு கட்டத்தில் தகப்பனும் இன்னொரு கட்டத்தில் கணவனும்
பெண்ணுக்கு ஆபரணம் கொடுக்க வேண்டியுள்ளது. திருமணத்தின்போது தந்தையால் கொடுக்கப்படும்
நகை, சீர் வரிசையை காரணம்காட்டி
பெற்றோர் சொத்தை அவளுக்கு மறுக்கக்கூடாது.
திருமணத்தின் போது தன் வசதிக்கு மீறியோ அல்லது அளவுக்கு
அதிகமாகவோ தன் மகளுக்கு நகைகளும் சீர்களும் தகப்பன் வழங்கி இருந்தால் அது அவருடைய தவறு.
அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. அதற்காக அவளுக்கான வாரிசு சொத்தை தடுப்பது சரியல்ல!
அப்படித் தடுத்தால் அது இன்னொரு தவறாகத்தான் ஆகும்.
அடுத்து தந்தையின் தொழிலில் அவருடன் துணையாக இருந்து
உழைத்து தந்தையின் செல்வம் பெருகுவதில் ஆண் பிள்ளையின் உழைப்பே உள்ளது.அதனால் பெண்
பிள்ளைக்கு தந்தை விட்டுச் சென்ற சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லை என்று சிலர்
வாதிடலாம்.. இந்நிலை பல இடங்களில் இருக்கலாம் இது போன்ற காரணங்களுக்காகத்தான் பெற்றோரின்
சொத்தில் ஆண் பிள்ளைகளுக்கு இருமடங்கு என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இங்கு இன்னொன்றையும் நினைவில்
கொள்ள வேண்டும்.தந்தையின் தொழில் மற்றும் செல்வத்தின் வளர்ச்சியில் ஆண் பிள்ளைக்கு
எந்த தொடர்புமே இல்லாவிட்டாலும் கூட தந்தை விட்டுச் செல்லும் சொத்தில் அவனுக்கு இரண்டு
மடங்கு கிடைக்கத்தான் செய்யும்!ஆகவே நாமாக உருவாக்கும் வாதங்களை விட்டுவிட்டு அல்லாஹ்வின்
கட்டளையை அவன் சொன்னபடி நிறைவேற்ற நாம் முன்வர வேண்டும்.
பெண் பிள்ளைக்கு தன் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில்
இருந்து பங்கு கிடைப்பதால் பலவித பலன்கள் உள்ளன.
அவளுடைய கணவனின் வருவாய் குறைந்து நெருக்கடிக்குள்ளாகும்
போது பெற்றோர் வழியில் கிடைத்த செல்வம் அவளுக்கு உதவியாக அமையும். அல்லது கணவனின் தேவைகளுக்கு
தன்னிடமுள்ள செல்வத்தின் மூலம் ஒத்தாசை புரியலாம்!
அதேபோல் கணவன் மரணித்து விட்டாலோ அல்லது விவாகரத்தாகி
பிரிந்து விட்டாலோ அவளுடைய வாழ்வாதார தேவைக்கு இந்த செல்வம் பயன்படும்.
பெண் பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய சொத்தின் பாகம்
குறித்து பேசும் இறை வசனம்:
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு
இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு
உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால்
அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால்
ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்;
(அல்குர்ஆன் : 4:11)
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். உடன் பிறந்த
சகோதர சகோதரிகள் தங்களில் ஒருவரின் தேவை மற்றும் சூழ்நிலையை கவனித்து அவர்களுக்கு கிடைக்க
வேண்டிய பாகத்தை விட்டுக்கொடுப்பது அனுமதிக்கப்பட்டதே!தேவையுள்ள அவருக்கு உதவி செய்வதால்
அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுத்தரும் நற்செயலாகவும் ஆகும்!
இங்கு சொத்து விஷயத்தில் சில பெற்றோர் செய்யும்
மிகப் பெரிய தவறையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளில்
சிலருக்கோ, ஒருவருக்கோ தங்களின் சொத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் உயிரோடு
இருக்கும் போதே (எழுதி வைத்தல், சொல்லி வைத்தல் போன்ற) சில தவறான காரியங்களை செய்கிறார்கள்.
இது பெரிய அநியாயமும், பாவமமும் ஆகும்.
பெற்றோர் உயிர் வாழும் போதே தேவை, சூழ்நிலை கருதி தங்கள் பிள்ளைகளில்
ஒருவருக்கோ அல்லது சிலருக்கு மட்டுமே தங்களின் சொத்துக்களை கொடுக்க விரும்பினால் மற்ற
பிள்ளைகளின் திருப்தியோடும் விருப்பத்தோடும் தான் கொடுக்க வேண்டும்! இல்லாவிட்டால்
இதுவும் ஒரு மிகப்பெரிய குற்றமாகத்தான் ஆகும்.
"என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி
வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்".(
11:88).
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions