ஆய்வுகள்
February 07, 2022
இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2
மகத்தான வழிகாட்டிகள்-2
இமாம் மாலிக்(ரஹ்)
நமது முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய மாபெரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர் இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள். நான்கு பெரும் இமாம்களில் காலவரிசைப்படி இரண்டாமவர். அன்னார் மதீனா நகரில் ஹிஜ்ரி 93 ஆம் வருடத்தில் பிறந்தார்கள்.
இமாம் மாலிக் அவர்களின் பாட்டனார் அனஸ் அவர்கள் மூத்த தாபிஈன்களில் ஒருவராகவும் மார்க்க அறிஞராகவும் திகழ்ந்தார். இமாம் அவர்களின் முப்பாட்டனார் அபூ ஆமிர் அவர்கள் நபித்தோழர் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். சிலர் நபித்தோழர் அல்ல என்கின்றனர். இமாம் அவர்களின் மூதாதையர் எமன் தேசத்தைச் சேர்ந்தவர்கள், இமாமவர்களின் முப்பாட்டனார் நபியின் காலத்திலேயே மதீனா நகருக்கு வந்துவிட்டார் என்பதற்கு உறுதியான பதிவில்லை. அதனாலேயே இவ்வாறு இருவிதமாக கூறப்பட்டுள்ளது.
கல்வித்தேடல்
இமாம் மாலிக் அவர்கள் சிறு பிராயத்திலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள். பின்பு மதீனாவின் பிரபல அறிஞர்களாக இருந்த ரபிஆ, இப்னு ஹுர்முஸ் ஆகியோரிடம் ஆரம்பமாக பல ஆண்டுகள் ஹதீஸ் உள்ளிட்ட மார்க்க கல்வியை கற்றார்கள். பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் பணியாளராக இருந்து ஹதீஸ்களை கற்று பின்னர் ஹதீஸ் அறிஞராகத் திகழ்ந்த நாஃபிஉ அவர்களிடம் ஹதீஸ்களை கற்றார்கள்.
அதேபோல் ஆரம்பகால ஹதீஸ் தொகுப்புகளை உருவாக்கிய ஹதீஸ் கல்வியின் மிகப்பெரிய அறிஞரான இமாம் ஸுஹ்ரி(ரஹ்) அவர்களிடமும் ஹதீஸ் மற்றும் மார்க்கக் கல்வி கற்றார்கள்.
இமாம் அவர்கள் இளமைப் பிராயத்திலிருந்தேஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பொன்மொழிகளை கேட்பதிலும் அவற்றை பதிவு செய்வதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார்கள். அல்லாஹ் தஆலா அவர்களுக்கு ஹதீஸ் கல்வியையும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தகுதியையும் வழங்கி சிறப்பித்தான்.
கல்விப் பணி
அக்காலத்தில் மதீனாவில் இருந்த பெரியோர்களின் ஆலோசனைப்படி இமாம் அவர்கள் ஆசிரியராக அமர்ந்து கல்விப் பணி செய்ய மஸ்ஜிதுன் நபவியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் உமர்(ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் ஆலோசனை செய்வதற்காகவும் தீர்ப்புகள் வழங்குவதற்காகவும் அமர்ந்திருந்த இடம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாம் அவர்களின் கல்வி சபை கம்பீரமும் அமைதியும் நிலவக்கூடியதாக இருக்கும். வீண் பேச்சுகள் என்பது அறவே இருக்காது. கல்வி கற்கும் மாணவர்கள் இந்நிலையில்தான் கற்க வேண்டும் என்றும் கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸை கற்பிக்கும் போது முழுமையான தூய்மையுடனும், தூய்மையான ஆடை அணிந்தும்,
நறுமணத்துடனும் இருக்கும் நடைமுறையை கடைப்பிடித்தார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதருடைய மஸ்ஜிதில் அமர்ந்து பல்லாண்டு காலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மார்க்கக் கல்வியை போதித்து கொண்டிருந்தார்கள்.
சோதனை
'நிர்ப்பந்திக்கப்பட்டு தலாக் சொன்னவரின் தலாக் செல்லாது' என்ற ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் அறிவித்தார்கள். அது தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளிப்பதற்காக இமாம் அவர்கள் இந்தச் செய்தியை சொன்னார்கள்.
ஆனால் குழப்பம் செய்பவர்கள் அப்போதைய கலீபா அபூ ஜஃபர் அல் மன்சூர் மக்களிடம் நிர்ப்பந்தமாக பைஅத்தை பெற்று ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்டவே இமாம் அவர்கள் இந்தச் செய்தியை சொல்கிறார்கள் என்று அப்போதைய மதீனாவின் ஆளுநரிடம் தவறாகச் சொல்லி கொடுத்தார்கள்.
அதன் காரணமாக ஆளுநர் ஜஃபர் பின் சுலைமான் என்பவரின் உத்தரவின்படி இமாம் அவர்களுக்கு பொதுஇடத்தில் சாட்டையடி கொடுக்கப்பட்டது.
பல்லாண்டு காலம் மஸ்ஜிதுன் நபவியில் கல்வியை பரப்பும் பணியில் ஈடுபட்டு பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த நிலையிலும் இமாம் அவர்கள் இத்தகைய சோதனையை சந்தித்துள்ளார்கள்.
இப்படி நடந்ததற்காக சில காலத்திற்குப் பின் கலீஃபா அவர்கள் இமாம் அவர்களிடம் வருத்தம் தெரிவித்ததாக வரலாற்றுப் பதிவு கூறுகிறது.
மரணம்
மார்க்கக் கல்வியை கற்பதிலும் கற்பிப்பதிலும் மக்களுக்கு நல்வழி காட்டுவதிலும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த இமாம் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 179 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
இமாம் அவர்களின் உயர் தன்மைகள்
இமாம் மாலிக் அவர்கள் பலமான மனன சக்தி கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். நபியின் பல ஹதீஸ்களை ஆசிரியரிடம் ஒரு தடவை கேட்டு விட்டு, கேட்ட ஹதீஸ்களை எல்லாம் சரளமாக திருப்பிச் சொல்கிற ஆற்றல் கொண்டவராக இருந்தார்கள்.
மிகப் பெரிய பொறுமைசாலியாகவும் கம்பீரம் உடையவர்களாகவும் இருந்தார்கள். அத்துடன் அவர்களை காணும் யாரும் அவர்களை அச்சம் கலந்த மரியாதையுடன் பார்க்கும் நிலையில் இருந்தார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களும் ஆட்சியாளர்களும் கூட இமாம் அவர்களை இவ்வாறுதான் அணுகினார்கள் என்று சரித்திரப் பதிவுகள் கூறுகின்றன.
முவத்தா
ஆரம்ப காலத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸ் நூல்களில் சிறப்புக்குரிய நூலாக இமாம் அவர்கள் தொகுத்த முவத்தா நூல் உள்ளது. இந்நூலில் இமாம் அவர்கள் சிறப்பாக பாடத் தலைப்புகள் அமைத்து சட்டங்களை கூறும் ஹதீஸ்களை இந்நூலில் தொகுத்துள்ளார்கள். அவர்கள் காலத்தில் இந்த முறையில் ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்டு இருக்கவில்லை, மார்க்கச் சட்டங்களுக்கு முக்கிய ஆதார நூல்களில் ஒன்றாக முவத்தா இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நூல் மட்டுமின்றி வேறு சில சிறு ஏடுகளும் இமாமவர்கள் எழுதியுள்ளார்கள். விதியை மறுப்போருக்கு மறுப்பு, சில தீர்ப்புகளின் தொகுப்பு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்கள். ஆனால் அவை நமது காலத்தில் பதிப்பிக்கப் படவில்லை.
இமாம் அவர்களின் மார்க்கச் சேவைகள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு மறுமையில் அவர்களுக்கு மகத்தான் நற்கூலியை வழங்குவானாக!
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions