ஆய்வுகள்
June 12, 2023
ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்!
ஹஜ் உம்றா தொடர்பான சந்தேகங்கள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
பயண அறிவிப்பு
கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா?
பதில்:-
“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)
மேற்படி வசனத்தில் ஹஜ்ஜையும், உம்றாவையும் அல்லாஹ்வுக்காகச் செய்யுமாறு அல்லாஹ் ஏவுகிறான். ஹஜ்-உம்றாச் செய்வோர் பேருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது எல்லோரும் செய்கின்றார்கள் என்பதற்காகவோ செய்யக் கூடாது. அல்லாஹ்வுக்காக அவனது திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கில் செய்ய வேண்டும். ஹஜ்-உம்றாச் செய்வோரது எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இதே வேளை, ஹஜ் செய்பவர் தான் ஹஜ் செய்யப் போகும் செய்தியைப் பிறருக்குத் தெரிவிப்பதை இஸ்லாம் இஹ்லாஸைப் பாதிக்கும் அம்சமாகப் பார்க்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் தான் ஹஜ் செய்யப் போவதைப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
இவ்வாறே உமர்(ரழி), துமாமா(ரழி) போன்ற ஸஹாபாக்கள் தமது உம்றாவைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறியுள்ளார்கள். எனவே, தான் ஹஜ்ஜுக்குச் செல்லப் போவதை ஒரு ஹாஜி தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தெரிவிப்பதில் எந்தக் குற்றமுமில்லை. ஆனால் அவ்வறிவிப்பு – பிரபல்யம், புகழ் முகஸ்துதி என்பவற்றை நோக்காகக் கொள்ளாதிருக்க வேண்டும்.
நபியவர்களுக்கு ஸலாம் சொல்லியனுப்புதல்:
கேள்வி:-
ஹஜ்ஜுக்குச் செல்பவர்களிடம், “நபி(ஸல்) அவர்களுக்கு எனது ஸலாத்தை எத்திவையுங்கள்!” என்று சிலர் வேண்டிக்கொள்கின்றனர். இது சரி தானா?
பதில்:-
மக்களிடம் மார்க்கத் தெளிவின்மையால் இப்படிக் கோருகின்றனர். ஹஜ்ஜுக்குச் செல்பவரும் “சரி!” என்று கூறி விட்டு, வாக்கு மாறிச் செல்லும் நிர்ப்பந்த நிலைக்குள்ளாகின்றனர். முதலில் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்வது என்பது ஹஜ்-உம்றாவுக்குச் செல்பவர்களின் பணியல்ல. ஹஜ்-உம்றா என்ற வணக்கத்துக்கும், மதீனாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஸலாம் சொல்வதற்காக நபி(ஸல்) அவர்களின் கப்றடிக்குச் செல்ல வேண்டிய அவசியமுமில்லை.
ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்குக் குறைந்தது 9 தடவைகள் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்கிறான்.
நாம் தொழுகையில் அத்தஹிய்யாத்து ஓதுகிறோம். அதில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலாமும் கூறுவதுடன், ஸலவாத்தும் கூறுகிறோம். எமது ஸலாத்தை மலக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கின்றனர். எனவே, ஸலாம் கூறுவதற்கு யாரும் மதீனாச் செல்ல வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஸலாத்தை எத்திவைக்க ஆள்தேடவும் தேவையில்லை.
“நீங்கள் எனது கப்றைத் திருவிழாக் கொண்டாடும் அல்லது அடிக்கடி வந்து செல்லும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! நீங்கள் எங்கிருந்தாலும் என் மீது ஸலாம் கூறுங்கள்! உங்கள் ஸலாம் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், அஹ்மத்)
எனவே, ஹாஜிகளிடம் இப்படி யாராவது கூறினால், “நீங்கள் இங்கிருந்தே ஸலாம் கூறலாம்! உங்கள் ஸலாம் நபி(ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கப்படும்! நீங்கள் தொழுகையிலேயே பல முறை நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறுகிறீர்கள். எனவே இப்படிக் கோரிக்கை வைக்காதீர்கள்!” என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
கேள்வி:-
ஹஜ்ஜுக்குச் செல்பவர் “சென்று வருகிறேன்!” என்று கூறக் கூடாது என்றும், “போகிறேன்!” என்றுதான் கூற வேண்டும் என்று கூறப்படுகிறதே! இது சரியா?
பதில்:-
ஒரு முஸ்லிம் அபச குணமான வார்த்தைகளைப் பேசக் கூடாது. நல்ல வார்த்தைகள்தான் கூற வேண்டும். இந்த அடிப்படையில் பயணம் செய்பவர் “போகிறேன்!” என்று கூறாமல் “வருகிறேன்!” என்று கூறுவதும், பிரிபவர் “பிரிவோம்!” என்று கூறாமல் “சந்திப்போம்!” என்று கூறுவதும் நமது மரபிலுள்ள நல்ல பழக்கமாகும். ஹஜ்ஜுக்குச் செல்பவர் திரும்பி வரும் எண்ணத்தில் போகக் கூடாது. மரணிக்கும் எண்ணத்துடன் போக வேண்டும் என்ற சென்டிமென்டில்தான் “போய் வருகிறேன்!” என்று கூறாமல், “போகிறேன்!” என்று கூற வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். சில ஆலிம்களும் உணர்ச்சியூட்டுவதற்காக “நீங்கள் அணியும் இஹ்றாம் இஹ்றாமல்ல! அது கஃபன் துணி! நீங்கள் விமானத்திற்குள் போகிறீர்கள்! அது விமானமல்ல! கப்ரு!” என பயான் செய்கின்றனர்.
இந்த நம்பிக்கை தவறாகும். ஒருவர் மக்கா-மதீனாவில் மரணிக்க விரும்பினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை. மூஸா நபி பலஸ்தீனில் மரணிக்க விரும்பியுள்ளார்கள்.
எனினும், ஊருக்குத் திரும்பி வரும் நோக்கில் மக்கா செல்லக் கூடாது என்பது மூட நம்பிக்கையாகும்.
ஹஜ்ஜுடைய கட்டங்களில் தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளில் ஏதேனுமொன்றைக் “ஹதீஃ” கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அல்குர்ஆன் கூறும் போது;
“..(உங்களில் எவர்) அதைப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (ஊர்) திரும்பியதும் ஏழு(நாட்களு)மாக நோன்பு நோற்கட்டும். இவை பூரணமான பத்து (நாட்)களாகும். இ(ச்சட்டமான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹறாமின் அருகில் வசிக்கவில்லையோ அவருக்குரியதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.” (2:196)
அவர் ஹஜ்ஜிலிருக்கும் போது 3 நோன்புகளும், நாடு திரும்பிய பின்னர் 7 நோன்புகளுமாக 10 நோன்புகள் நோற்க வேண்டுமென மேற்படி வசனம் கூறுகின்றது. எனவே, அவர் திரும்பி வர வேண்டும்; மீதி 7 நோன்புகளை நோற்க வேண்டும் என்று எண்ணுவது குற்றமில்லை என்பது புலனாகின்றது.
அடுத்து, நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தவறான காரியங்களில் ஈடுபடாமல் (நாடு) திரும்பினால் அன்று பிறந்த பாலகன் போன்று திரும்புகின்றார்!” என்று கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வும், ரஸூலும் ஹஜ் செய்பவர் மீண்டும் நாடு திரும்புவது பற்றிப் பேசியிருக்கும் போது “போய் வருகிறேன்!” என்று நாடு திரும்புவது குறித்து ஒரு ஹாஜி பேசுவதை யாரால் தடுக்க முடியும்? யாரால் குறை கூற முடியும்? என்று எண்ணிப் பாருங்கள்!
பல உம்றா
கேள்வி :-
ஹஜ்ஜுக்காகச் சென்றவர் அதிக நன்மை செய்யும் ஆசையில் ஆயிஷா பள்ளிக்குச் சென்று இஹ்றாம் அணிந்து மீண்டும் மீண்டும் உம்றாச் செய்கின்றனர். இது கூடுமா?
பதில்:-
இது நபிவழியல்ல. முதலில் ஆயிஷா பள்ளி என்ற விவகாரம் ஏன் வந்தது என்பதை நாம் அறிய வேண்டும்.
ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“நான் ஹஜ்ஜுக்குச் சென்ற போது எனக்கு மாதத் தீட்டு ஏற்பட்டது. இதையறிந்த நபி(ஸல்) அவர்கள் தவாப் ஸஈயைத் தவிர ஹாஜிகள் செய்பவற்றைச் செய்யச் சொன்னார்கள். நான் சுத்தமான போது ஹஜ் முடிந்த பின்னர் எனது சகோதரர் அப்துர் ரஹ்மானோடு தன்யீம் எனும் (ஹறம் எல்லையைத் தாண்டிய) இடத்திற்கு அனுப்பி, அங்கிருந்து இஹ்றாம் அணிந்து உம்றாவைச் செய்யுமாறு பணித்தார்கள். “இது அந்த உம்றாவுக்குப் பகரமாகும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி)
மாதத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் ஏற்கனவே செய்யாமல் விட்ட உம்றாவுக்குப் பகரமாகச் செய்யும் உம்றாவுக்காகத்தான் ஆயிஷா பள்ளி எனுமிடத்தில் இஹ்றாம் கட்டி உம்றாச் செய்ய வேண்டும் என இந்தச் செய்தி கூறுகின்றது. இத்தகைய பெண்கள் ஹறம் எல்லையைத் தாண்டி எங்கு வேண்டுமானாலும் இஹ்றாம் செய்யலாம். இந்த ஹதீஸைப் பார்க்கும் எவரும் பின்வரும் அம்சங்களை விளங்கிக்கொள்ளலாம்.
(1) இது மாதத் தீட்டு ஏற்பட்ட பெண்களுக்கான சட்டம்.
(2) அதுவும் ஆரம்பத்தில் மாதத் தீட்டு ஏற்பட்ட பெண்களுக்கான சட்டம். தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதத் தீட்டு ஏற்பட்டால் அவர்கள் தவாபுல் விதாவுக்காக் காத்திருக்க வேண்டியதில்லை; நாடு செல்லலாம்.
(3) ஹஜ்ஜின் ஒரு பகுதியான உம்றாவை முடிக்க முடியாமல் போனதற்கான பரிகாரம். (உம்றாவை முடித்தவர்களுக்கு உரியதல்ல.)
(4) திரும்பத் திரும்பச் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல.
இந்த அடிப்படையில் ஆயிஷாப் பள்ளிக்குச் சென்று மீண்டும் மீண்டும் இஹ்றாம் அணிந்து பல உம்றாக்கள் செய்வது பித்அத்தாகும். ஆயிஷா(ரழி) அவர்களுடன் துணைக்குச் சென்ற அவரது சகோதரர் அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் இஹ்றாம் அணியவும் இல்லை; இத்தகைய உம்றாவைச் செய்யவுமில்லை. திரும்பத் திரும்ப இந்த இடத்தில் இஹ்றாம் அணிந்து உம்றாச் செய்யலாம் என்றிருந்தால் அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லவா? ஸஹாபாக்களில் எவரும் இப்படிச் செய்யவில்லை. நன்மை செய்வதில் நம்மை விட ஆர்வமுள்ள ஸஹாபாக்களே செய்யாத அமல், எப்படி இஸ்லாமாக இருக்க முடியும்!?
இப்படி, இல்லாத அமலைச் செய்வதால் எந்த நன்மையும் கிட்டாது.
“யார் எமது மார்க்கத்தில் இல்லாததைச் செய்தாரோ, அது புறக்கணிக்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
“புதிதாக உருவான அனைத்தும் பித்அத்துகளாகும்! பித்அத்துகளனைத்தும் வழிகேடுகளாகும்!” என்பதும் நபிமொழியாகும். எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்து, இவ்வாறு மீண்டும் மீண்டும் உம்றாச் செய்வோர் ஹறத்தில் பயங்கரமான சன நெருக்கடியை உண்டுபண்ணுவதன் மூலம் மக்கா நிர்வாகத்திற்கும், ஏனைய ஹாஜிகளுக்கும் தொல்லை கொடுக்கின்றனர். ஹஜ்ஜுடைய நாள் நெருங்க நெருங்க மக்காவில் மக்கள் வெள்ளம் பெருக ஆரம்பித்து விடும். ஹஜ்ஜுக்காக வருவோர் தமது கடமையான உம்றாவைச் செய்தேயாக வேண்டும். எட்டாம் நாளுக்கு முன்னர் அனைவரும் உம்றாவைக் கட்டாயமாக முடித்தாக வேண்டும். இதற்காக மக்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மேலும் சிரமத்தை அளிக்கும் விதத்தில் மீண்டும் மீண்டும் மார்க்கத்தில் இல்லாத உம்றாவைச் செய்துகொண்டிருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எண்ணிப் பாருங்கள்! எனவே, அவசியம் இந்த பித்அத்தான வழிமுறை தவிர்க்கப்பட்டேயாக வேண்டும். இது விடயத்தில் ஹாஜிகளை வழிநடாத்தும் அறிஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மஹ்ரம் துணை
கேள்வி :-
பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?
பதில்:-
இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.
ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
“..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்..” (3:97)
எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.
ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!
“எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)
மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.
பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.
இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.
ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.
குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு “அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!” எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்.” (புகாரி 3328) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.
விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?
அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.
மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!” எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)
“இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?” என்றால், அனைவரும் “இல்லை!” என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என ஸூதி போற்றப்பட்டாலும் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.
ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?
தெளிவு:– இது அவர்களின் த னிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத் தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.
நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
கஃபாவின் சுவர்களை முத்தமிடல்
கேள்வி :-
ஹஜ்-உம்றாச் செய்வோர் கஅபாவின் பல இடங்களையும் தொட்டு முத்தமிடுகின்றனர்? கஅபா மீதுள்ள கண்ணியம் தான் இதற்குக் காரணமாகும். இது சரிதானா?
பதில்:-
கஅபா, மக்கா, மதீனா என்பவை புனிதமானவைதான். அவற்றின் புனிதம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதன் மூலம் தான் நிரூபிக்கப்பட வேண்டும்.
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது;
“மதீனா புனிதமானதாகும்! யார் அதில் புதிய வணக்கத்தை உண்டுபண்ணுகின்றானோ அல்லது புதிய வழிமுறையை உண்டுபண்ணுபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றானோ அவன் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும் லஃனத் உண்டாகும்!” என்று கூறுகின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, புனித பூமியென்பதை தூய கட்டுப்படுதல் மூலம் மட்டுமே மதிக்க முடியும். கஅபாவிலுள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தவிர வேறு எதையும் முத்தமிடுவதற்கோ, தொட்டு முத்தமிடுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை. றுக்னுல் யமானியைத் தொடலாம்; முத்தமிடக் கூடாது. சிலர் மக்கா-மதீனாவின் மண், ஜன்னதுல் பகீஃ என்று கூறப்படும் கப்றடி மண் போன்றவற்றைப் புனிதம் கருதி எடுத்து வருகின்றனர். இது மிகப் பெரும் குற்றமாகும். கஅபாவின் குறித்த இரண்டு அம்சங்கள் தவிர்ந்த ஏனையவற்றைப் புனிதம் என்ற அடிப்படையில் நன்மை நாடித் தொடுவதோ, முத்தமிடுவதோ நபிவழிக்கு முரணானது என்பதைப் பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.
முஆவியா(ரழி) அவர்களுடன் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஒரு முறை தவாஃப் செய்தார்கள். அப்போது முஆவியா(ரழி) அவர்கள் கஃபாவின் எல்லா மூலைகளையும் தொட்டார்கள். இதனை அவதானித்த இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் (மேலதிகமாக) “இவ்விரண்டு மூலைகளையும் ஏன் தொட்டீர்!” என வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வின் இல்லத்தில் எதுவும் வெறுக்கப்பட்டதல்லவே என முஆவியா(ரழி) அவர்கள் கூற, உடனே இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “உங்களுக்கு உங்களின் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது!” என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். உடனே (தனது நிலைப்பாட்டைத் திருத்திக்கொண்ட) முஆவியா(ரழி) அவர்கள், “நீர் உண்மை உரைத்தீர்!” எனக் கூறினார்கள்.
(அஹ்மத்)
எனவே, கஅபாவின் ஹஜறுல் அஸ்வத் கல், றுக்னுல் யமானி தவிர்ந்த எதையும் நன்மை நாடித் தொடவும் கூடாது. ஹஜறுல் அஸ்வத் தவிர வேறு எதையும் நன்மை நாடி முத்தமிடவும் கூடாது என்பதைக் கவனத்திற்கொள்ளவும்.
***
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions