ஆய்வுகள்

June 16, 2023

உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்!

உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்

××××××××××××××××××××

- S.H.M இஸ்மாயில் ஸலபி


துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(ரழி) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது.


ஆனால், உஸ்மான்(ரழி) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (ரழி) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக தனது மக்களில் ஒருவரினதும் ஒரு துளி இரத்தம் கூட சிந்தப்படக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.


வழிகெட்ட சில தலைவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களின் கொலைக்கு அவரது தவறான நடத்தைகளும் நிர்வாக முறையும்தான் காரணம் என்று கூறி வருகின்றனர். அத்துடன் உஸ்மான்(ரழி) அவர்களின் அந்தஸ்துக்கும் களங்கம் கற்பித்து வருகின்றனர்.


ஆரம்ப கால வழிகேடர்களும் முனாபிக்குகளும் இஸ்லாத்தின் எதிரிகளும் உஸ்மான்(ரழி) அவர்கள் மீது சுமத்திய அதே குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பேசி தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். நாம் அன்று இருந்திருந்தால் உஸ்மான்(ரழி) அவர்களைக் கொன்றவர்கள் அணியில்தான் இருந்திருப்போம் என்பதைத் தமது பேச்சின் மூலம் உணர்த்தி வருகின்றனர்.


உஸ்மான் நிர்வாகம் செய்வது எப்படி என்ற பாடத்தைப் படிக்காதவராக இருந்தார். மோசமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு உதாரணமாக இருந்தார் என உஸ்மான்(ரழி) அவர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது என்று பேசியும், எழுதியும் வருகின்றனர்.

நபி(ச) அவர்கள் தனக்குப் பின்னர் நபித்துவத்தின் அடியொட்டிய கிலாபத் இருக்கும் என்று கூறினார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உஸ்மான்(ரழி) அவர்களின் ஆட்சி முழுமையாக அடங்குகின்றது. நபி(ச) அவர்களால் நபித்துவத்தின் அடிப்படையிலான கிலாபத் என சிலாகித்துப் பேசப்பட்ட ஆட்சி முறையை முறையற்ற நிர்வாகமாக சித்தரிப்பவர்கள் நபிவழிக்கு முரண்பட்ட வழிகேடர்களே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


2. உஸ்மான்(ரழி) அவர்கள் தனது மோசமான நிர்வாக முறை காரணமாக ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பையும் பெற்றிருந்தார். அதனால்தான் அவரைக் கொலை செய்ய வந்தவர்கள் அவரை வீட்டுக் காவலில் வைத்த போது அதைத் தடுக்க யாருமே முன்வரவில்லை. அவ்வளவு மக்களும் அவரை வெறுத்தனர் என்று ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை அவர் பெற்றிருந்ததாகக் காட்ட முற்படுகின்றனர்.

உஸ்மான்(ரழி) அவர்களுக்கு எதிராக கூபா, பஸரா, எகிப்து போன்ற பிரதேசங்களில் இருந்து வழிகேடர்களும் அறிவிலிகளும்தான் வந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பைப் பெற்றிருக்கவில்லை. உஸ்மான்(ரழி) அவர்களுக்காக நியாயம் கேட்டு மக்கள் உயிர் விட்டார்கள் என்றால் அவர் மக்கள் வெறுப்பைப் பெறவில்லை என்பதுதான் அர்த்தமாகும்.


உஸ்மான்(ரழி) அவர்கள் தன்னைப் பாதுகாப்பதற்காக மக்கள் உயிர் விடுவதை வெறுத்தார்கள். உஸ்மான்(ரழி) அவர்கள் கொல்லப்படுவார்கள் என நபி(ச) அவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள். எனவே; தான், கொல்லப்படுவது உறுதி! தனக்காக மக்கள் இரத்தம் சிந்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள் உஸ்மான்(ரழி) அவர்கள்.


அனஸ்(ரழி) அறிவித்தார்: ‘(ஒரு முறை) நபி(ச) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான்(ரழி) ஆகியோரும் உஹது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ச) அவர்கள், ‘உஹதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்.” என்று கூறினார்கள்.” (புகாரி: 3675)


இந்த நபிமொழி உஸ்மான்(ரழி) அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று முன்னறிவிப்புச் செய்கின்றது.

நபி(ச) அவர்கள் பித்னா பற்றிக் கூறும் போது அதில் இவர் அநியாயமாகக் கொல்லப்படுவார்கள் என உஸ்மான்(ரழி) அவர்கள் குறித்துக் கூறினார்கள். (திர்மிதி: 3708, அஹ்மத் மற்றும் இப்னு மாஜா: 111)

எனவே, தான் கொல்லப்படுவது உறுதி என்பதைத் தெரிந்திருந்ததால் தன்னைப் பாதுகாப்பதற்காக அடுத்தவர்கள் முயற்சி செய்வதை அவர்கள் தடுத்தார்கள்.


‘நான் உஸ்மான்(ரழி) அவர்களுடன் இருந்தேன். அவர் மக்களிடம் எனக்குக் கட்டுப்பட்டவர்களிடம் தமது ஆயுதத்தையும், கரத்தையும் என்னைக் காப்பதற்காகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். உங்களில் சிறந்தவர் ஆயுதத்தையும், கரத்தையும் (அவர்களுக்கு எதிராகப்) பயன்படுத்தாதவரே என்று கூறினார்கள். பின்னர் இப்னு உமர் மற்றும் அவர்களுடன் இருந்த பனூ அதீ, பனூ சுராகா, பனூ முதீஃ கோத்திரத்தார் வெளியேறினர். உள்ளே நுழைந்தவர்கள் அவரைக் கொலை செய்தனர்” என அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(நூல்: அல் பிதன்லின் னயீம் இப்னு ஹம்மாந் 1:169 எண் 441, தாரீஹுல் மதீனா: 4:1208)


பல கோத்திரத்தவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களைப் பாதுகாக்க முயற்சித்தும் அவர் எனக்காக மக்கள் சண்டை பிடிக்கும் நிலை வரக் கூடாது என்பதற்காக அதைத் தடுத்துவிட்டார்கள்.


ஹஸன், ஹுஸைன், இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு சுபைர், மர்வான்(ரழி) போன்ற பலர் ஆயுதங்களுடன் உஸ்மான்(ரழி) அவர்களைப் பாதுகாக்க முற்பட்ட போது, ‘நீங்கள் அனைவரும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்றும், ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், வீடுகளிலேயே தங்கிவிட வேண்டும் என்றும் நான் வலியுறுத்தி வேண்டிக் கொள்கின்றேன்” எனக் கூறி அனுப்பி விட்டார்கள்.

(தாரீஹு கலீபது இப்னு கையாத்: 1:174, தாரீஹுல் இஸ்லாம்: 3:453, ஸம்துன் னுஜூமுல் அவாலீ பீ அன்பாயில் அவாயில்: 2:527)


இவ்வாறே அபூஹுரைரா(ரழி) அவர்கள் வந்த போதும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.


அலி(ரழி) அவர்கள் நபி(ச) அவர்களது தலைப்பாகையை அணிந்து கொண்டு உஸ்மான்(ரழி) அவர்களிடம் வந்து ‘அமீருல் முஃமினீன் அவர்களே! என்னுடன் 500 போர் வீரர்கள் உள்ளனர். இந்தக் கூட்டத்திடமிருந்து உங்களைப் பாதுகாக்க எனக்கு அனுமதி தாருங்கள். நீங்கள் எந்தக் குற்றமும் செய்யாமல் உங்கள் இரத்தத்தை அவர்கள் ஹலாலாக்கி யுள்ளார்கள்” என்று கூறிய போது, ‘அலியே! உனக்கு நற்கூலி கிடைக்கட்டும். எனக்காக இரத்தம் ஓட்டப்படுவதை நான் விரும்பவில்லை என மறுத்துவிட்டார்கள்.

(நூல்: தாரீஹுல் மதீன் 4:1149, தாரீகு திமிஷக் 403)


இவ்வாறே அன்ஸாரிகளும் உஸ்மான்(ரழி) அவர்களைப் பாதுகாக்க முற்பட்டார்கள். அவர் அதை மறுத்துவிட்டார்.


ஸைத் இப்னு தாபித்(ரழி) அவர்கள் வந்து, ‘முஃமின்களின் தலைவரே! இதோ அன்ஸாரிகள் உங்கள் வாசலில் உள்ளனர். நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருப்பதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று வேண்டிய போது, போர் செய்ய அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டார்கள்.”

(நூல்: அல் பிதன்: 1:173, முஸன்னப் இப்னு அபீஷைபா 37082, 74664, தாரீஹு கலீபது இப்னு கையாத் 1:173, அல் மிஹ்ன் 1:82, தாரீகுல் இஸ்லாம் 3:453)


இவ்வாறு உஸ்மான்(ரழி) அவர்களைப் பாதுகாக்க பலரும் முற்பட்டிருக்கும் போது உஸ்மான் வீட்டுச் சிறையில் இருக்கும் போது அவருக்கு உதவ ஒருவரையும் காணோம். அந்தளவுக்கு மக்களின் வெறுப்பைப் பெற்றிருந்தார் என பாமர மக்கள் மத்தியில் பேசி உஸ்மான்(ரழி) அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துபவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களைக் கொன்றவர்களை விடக் கொடியவர்களாவார்கள்.


உஸ்மான்(ரழி) அவர்களைக் கொன்றவர் களில் நபித்தோழர்களும் இருந்தார்கள், நயவஞ்சகர்களும் இருந்தார்கள் என்று கூறி உஸ்மான்(ரழி) அவர்களின் கொலையில் நபித்தோழர்களையும் பங்காளிகளாக மாற்றும் முயற்சியில் சில நபித்தோழர்களுக்கு எதிரான சிந்தனையுடையோர் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இது குறித்து ஷீஆக்களுக்கு பதிலளிக்கும் போது இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.


‘உஸ்மான்(ரழி) அவர்களின் இரத்தத்தில் முஸ்லிம்களில் சிறந்தவர்களான ஸஹாபாக் களில் ஒருவர் கூட பங்கு வகிக்கவில்லை, கொல்லவும் இல்லை, கொலை செய்யத் தூண்டவும் இல்லை. பூமியில் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய பித்னா காரர்களே இந்தக் கொலையில் பங்கு வகித்தனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

(மின்ஹாஜுஸ் ஸுன்னா: 4ஃ322)


இவ்வாறே முஹம்மத் இப்னு அபூபக்கர் இதில் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகின்றது. அவர் ஆரம்பத்தில் குழப்பக்காரக் கூட்டத்துடன் இருந்தாலும் இறுதிக் கட்டத்தில் மனம் மாறிவிட்டார் என்பதே உண்மையாகும். எனவே, உஸ்மான்(ரழி) அவர்களின் கொலையில் நபித்தோழர்களில் எவரும் பங்கு கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.


தமிழ் பேசும் உலகில் தவ்ஹீதில் தடம் புரண்டவர்கள் உஸ்மான்(ரழி) அவர்கள் விடயத்தில் மட்டுமல்லாமல் நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களைச் சிதைத்து மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இவர்கள் மிகப்பெரும் வழிகேடர்கள் என்பதற்கு நபித்தோழர்கள் விடயத்தில் நாவடக்கம் இல்லாமல் மிகக் கேவலமாகப் பேசும் இவர்களின் பேச்சுக்களே உறுதியான சான்றுகளாகத் திகழ்கின்றன.

*****

Admin
629 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions